சாய்ந்தமருது
நேற்று இரவு முஸ்லிம்களின் எதிரியான ஞானசார தேரரை கைது செய்வதற்காக குருனாகல, தம்புள்ள வீதியில் உள்ள படகமுவ என்னும் பிரதேசத்தில் குறித்த தேரரும் அவரது குழுவினர்களும் சென்ற வாகனம் வீதியில் மறிக்கப்பட்டு அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்ததாகவும், அப்பிரதேச மக்கள் திரண்டதனால் ஏற்பட்ட பதட்டநிலை காரணமாக தேரரை கைது செய்ய முடியவில்லை என்ற ஒரு நாடகமும் வீடியோவாக வெளியிடப்பட்டது.
நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, சிறுபான்மை முஸ்லிம் மக்களின் இருப்புக்கு நாளாந்தம் அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கும் பொதுபலசேனா இயக்கத்தின் தலைவரை உண்மையில் கைதுசெய்வதென்றால், அவர் வசிக்கின்ற பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு அல்லது தேசிய குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வரவழைத்து அங்கு அவரை கைது செய்திருக்கலாம்.
இவ்வாறான அழைப்பாணையை அவர் புறக்கணித்திருந்தால் அவர் வசிக்கின்ற கிருலப்பனையில் அமைந்துள்ள அவரது விகாரைக்கு சென்று அவரை கைது செய்திருக்கலாம்.
ஆனால் இப்படியான நடைமுறையினை பின்பற்றாமல் ஞானசாரதேரர், தனது படை பட்டாளங்களுடன் செல்லுகின்றபோது திடீரென அவரை கைது செய்ய ஏன் முயற்சிக்க வேண்டும்? அதிலும் அவர் ஒரு பௌத்த மதகுரு என்று தெரிந்திருந்தும் அவரை நடு வீதியில்வைத்து ஏன் இந்த முயற்சி?
அத்துடன் ஞானசாரதேரர் ஒரு சிவில் சமூகம் சார்ந்தவர் என்பதனால் போலீசார் மட்டும் இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபடாமல், இதில் இராணுவத்தினர்களை ஏன் ஈடுபடுத்த வேண்டும்? அப்படித்தான் இராணுவமும், பொலிசாரும் இணைந்து சென்றிருந்தும் ஏன் அவரை கைதுசெய்ய முடியவில்லை?
ஞானசார தேரருக்கு எதிராக பொலிசில் செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைய அவரை கைது செய்வதென்றால், ஸ்தலத்துக்கு போலீசார் மட்டுமே சென்றிருப்பார்கள். ஆனால் பொலிசாருடன் இரானுவத்தினர்களும் சென்றதனால் இது அரசியல் மேல்மட்ட உத்தரவு ஏன்பதனை புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது.
அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பொதுபலசேனாவின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தாததனால் முஸ்லிம்கள் மகிந்தவுக்கு எதிராக கிளர்ந்தார்கள். அந்த நிலைமை தங்களுக்கும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் மைத்ரியும், ரணிலும் இணைந்து முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் விதமாக இவ்வாறான கைது என்ற நாடகத்தினை அரங்கேற்றி இருக்கலாம்.
மகிந்தயோ, மைத்ரியோ, ரணிலோ யார் ஆட்சி அமைத்தாலும் பௌத்த மேலாதிக்க கொள்கையினை இவர்களால் தீர்மானிக்க முடியாது. ஓர் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக துணிந்துநின்று ஒரு ஞானசாரதேரர் என்கின்ற தனிமனிதனால் இவ்வாறு துணிச்சலாக செயல்பட முடியாது.
பொதுபலசேனா என்ற இயக்கத்துக்கு பின்னால் பௌத்த மேல்மட்டமும், சிங்கள அரசியல் மேல்மட்டமும், சிங்கள வர்த்தகர்களும், வெளிநாட்டு சக்திகளும் இருக்கும் வரைக்கும் இந்த ஞானசாரதேரரை இலகுவில் கட்டுப்படுத்த முடியாது.
எனவே இவ்வாறான பின்புலத்தினை கொண்ட ஒரு தேரரை கைதுசெய்தால், அது தனது ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துவிடும் என்ற பயத்தினாலும், முஸ்லிம்களை திருப்திப்படுத்தவும் வேண்டும் என்ற காரனத்தினாலுமே, நாங்கள் ஞானசாரதேரரை கைது செய்ய முயற்சித்தோம் என்ற ஒரு நாடகம் நேற்று இரவு அரங்கேற்றப்பட்டது.


0 Comments