பொதுபலசேன முஸ்லிம் மக்களுக்கு
அட்டூளியங்களை செய்த போதல்லாம்,அதற்காக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்தான்
டாக்டர் ராஜித சேனாரத்ன இப்போது எம்மில் பலருக்கு இனவாதியாக மாறிவிட்டார்.
மு.கா. தலைவரைப் பற்றி அவர் சொன்ன
செய்திதான் அதற்கு காரணம். இதை அறிவு ரீதியாக அனுக வேண்டுமே தவிர, அரசியல்
இலாபம் தேடும் ஒரு சில கூஜா தூக்கிகளின் கதைகளைக் கேட்டு முட்டாள் தனமாக
இனவாத முத்திரை குத்த வேண்டிய தேவை இல்லை.
அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து
ஒரு இனவாத கருத்தல்ல. அவர் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ஒரு கருத்தை
கூறியிருந்தார். அது சரியான கருத்தாக அல்லது பிழையான கருத்தாக இருக்கலாம்.
இலங்கை முஸ்லீம்களுக்கு கலாச்சார மத அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட பல்வேறு
சந்தர்ப்பங்களில் இந்த முஸ்லீம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் மௌனமாக இருந்த
சந்தர்பங்களில் அமைச்சர் ராஜித பகிரங்கமாக எதிர்த்தவர் என்பது
எல்லோருக்கும் தெரியும்.
நிச்சயமாக ஒரு இனவாதி அப்படி செய்திருக்க
மாட்டார். ராஜிதவை இனவாதிகளால் மிகவும் தூசிக்கப் பட்டவர்கள் என்பது
எல்லோருக்கும் நன்கு தெரியும். இதனால்தான் ராஜிதவுக்கு முன்னால் சனாதிபதி
மஹிந்த மதவாத அமைப்புகளின் விடயங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என்று
பகிரங்கமாக அச்சுறித்தியிருந்ததும் நம் எல்லோரும் அறிவோம்.
இவரை இனவாதியாகப் பார்க்கும் எம்
சகோதர்கள் பேருவளையில் முஸ்லீம்களுக்கு உதவியதை மறந்துவிட்டார்கள் .
அத்துடன் ஹக்கீம் என்ற ஒருவருக்கு தனியாக கூறப்பட்டதை சமூகம் சார்ந்ததாக
திரிவு படுத்தியவரே உண்மையான இனவாதியாக கருதப்பட வேண்டும்.
எமது சமூகத்துக்கு உதவ இருக்கின்ற
ஒன்றிரெண்டு பேரையும் எதிரியாக்கி அரசியல் இலாபம் தேடுபவர்கள்தான் எமது
உண்மையான எதிரி. அதைவிடுத்து தன் இனத்தவனின் தவறை மறைத்து இனவாதம்
பேசிக்கொண்டு அதற்கு இஸ்லாமிய வாத மூலாம் பூச முற்படுவதென்பது, முஸ்லிம்
சமூகத்தை நாசகார சதிவலையில் மாட்டிவிட்டு அதில் குளிர்காய கங்கனம்
கட்டிக்கொண்டிருக்கும் இனவாத ஊடகங்களுக்கு தீனிபோடும் வேலையாக
அமைந்துவிடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ரவுப் ஹக்கீமின் அதி மோக பதவி
ஆசையைத்தான் ராஜித இங்கு குறிப் பிட்டார் அன்றி இனவாதத்தை அல்ல என்பதை
மக்கள் உணர வேண்டும் ,ஏன் ராஜித அவ்வாறு கூறினார் எனின் கடந்த காலம்களில்
ரவூப் ஹக்கீமின் கட்சி தாவல்கள் பதவி பெறுவதையே நோக்காகக் கொண்டது
என்பதினால் , இதை நாமும் அறிவோம்.
சிறுபான்மை இனங்கள் பாதிக்கப் படுகின்ற
விதத்தினையும் எமது பக்க நியாயங்களையும் அவருக்கு சிறந்த முறையில்
தௌிவுபடுத்துவதே எமது கடமையே ஒழிய அதைவிடுத்து எடுத்த எடுப்பில் இனவாத
முத்திரை குத்த முற்படுவது ஒரு வரலாற்று தவறுக்கு இட்டுச் செல்லும். கடந்த
காலங்களில் விடுதலைப் புலிகள் எமது முஸ்லிம் தலைவர்களுக்குச் செய்த தவறை
நாம் மற்றவர்களுக்கு செய்து விடக் கூடாது என்பதை விளங்கிச் செயற்படுவது
நல்லது.
சபூர் ஆதம்
அக்கரைப்பற்று


0 Comments