கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் குறைநிறைகளை கேட்டறிவதற்காக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை (21) தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலையை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலை தொடர்பான குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவிக்கையில்,
என்னை யாரும் அழைக்காமல் இவ்வைத்தியசாலைக்கு வருகை தந்திருக்கின்றேன். இவ்வைத்தியசாலையை பார்க்கும்போது இங்கு நிலவும் பல குறைபாடுகளை அவதானித்தேன். இக்குறைபாடுகளை என்னால் இயன்ற வரையில் நிவர்த்தி செய்து தருவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
அத்தோடு 100 பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கட்டிடம் ஒன்றையும், பல் பிடுங்குவதற்கான கதிரையையும் ஜனவரி மாதம் பெற்று தருவதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.
மேலும், வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே காணப்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனவரி மாதம் மற்றுமொரு வைத்தியரையும் நியமித்து தருவேன் எனவும் வாக்குறுதியளித்தார்.
இந்த விஜயத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,ஜெய்னுல் ஆப்தீன் லாஹிர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித தனபால, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், திருகோணமலை சுகாதார பணிப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
அபு அலா -




0 Comments