மிக மோசமான குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனையை தீர்ப்பாக எழுதுகின்ற சட்டமுறைமை நம் நாட்டில் உண்டு.
குறிப்பாக கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்படுகிறது.
இருந்தும் மரண தண்டனை என்ற தீர்ப்பானது நிறைவேற்றப்படாததன் காரணமாக அந்தத் தண்டனை ஆயுட்காலத் தண்டனையாக நடைமுறையில் உள்ளது.
மரண தண்டனை என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்குகின்ற போது அதனை நிறைவேற்ற வேண்டும் என்கிறது ஒரு தரப்பு; நிறைவேற்றக் கூடாது என்று இன்னொரு தரப்பும் வாதம் புரிகின்றது.
இதில் எது சரி என்ற கேள்வி எழுகிறது. இத்தகையதொரு கேள்விக்கான பதிலை பொது மக்களே வழங்க முடியும்.
எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கான குற்றச்செயல் என்ன என்று ஆராய்வது அவசியம்.
உதாரணத்திற்கு, மூன்று பேர் கொண்ட குழு ஒன்று நடுச்சாமத்தில் வீடொன்றில் புகுந்து திருடுகிறது. அந் நேரத்தில் வீட்டு உரிமையாளர் எழுந்து விடுகிறார். திருட்டுக் கோஷ்டி அவரைத் தாக்கி அந்த இடத்தில் கொல்கிறது.
இக் களேபரத்தில் வீட்டு எஜமானியும் எழுந்து விட, அவருக்கும் ஒரே அடி. அதே இடத்தில் கணவனும் மனைவியும் கொல்லப்படுகின்றனர்.
ஒரு நடுச் சாமப் பொழுதில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அநாதைகளாக்கப்படுகின்றனர்.
மேற்படி குற்றச் செயலுக்காக அந்த மூன்று கொலைகாரர்களுக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது என எடுத்துக் கொண்டால், இப்போது சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது சரி என்று முடிவு எடுப்பதா? அல்லது அவர்களுக்கு மரண தண்டனை வழங்காமல் ஆயுட்காலம் வரை சிறைகளில் அடைத்து வைப்பது சரி என்று முடிவு எடுப்பதா? என்பதை பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும்.
எதுவாயினும் இறுக்கமான சட்டங்கள், தீர்ப்புகள், அவற்றின் அமுலாக்கங்கள் குற்றச் செயல்களைக் குறைக்கும் என்ற உண்மையையும் நாம் மறந்துவிடலாகாது.
அதேநேரம் கொலை என்பது மிக மோசமான குற்றச் செயல். அந்தக் குற்றத்தை இழைத்து மரணத்தை வழங்கியவர் சிறையில் இருப்பது கூட உரிய தண்டனையாகாது என்பதை பலரும் வலியுறுத்துகின்றனர். இதில் நியாயமும் இருக்கிறது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இவை ஒருபுறம் இருக்க, மரண தண்டனை தீர்க்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதன் ஊடாக, அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு உள ரீதியான தண்டனை வழங்கப்படுகிறது என்று வாதிடுவோரும் உளர்.
அப்படியானதொரு சூழ்நிலையில் மரண தண்டனை என்ற தீர்ப்பை நிறைவேற்றுவதா? அல்லது ஆயுள் தண்டனையாக மாற்றுவதா? என்ற இறுதி முடிவை பாதிக்கப்பட்ட தரப்பு தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். இது மிகப் பெறுமதியாக இருக்கும்.
எதுவாயினும் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஏற்புடையதா? இல்லையா? என்பது குறித்து பொதுமக்களின் அபிப்பிராயம் எடுக்கப்படுவது அவசியமானதாகும்.


0 Comments