Subscribe Us

header ads

பிற மத அனுஷ்டானங்களை தடுப்பது அல்லது நடைபெறாமல் குழப்பம் விளைவிப்பதன் மூலம் , எம்மவர்கள் எதை சாதிக்க நினைக்கின்றனர்.

பிற மத அனுஷ்டானங்களை தடுப்பது அல்லது நடைபெறாமல் குழப்பம் விளைவிப்பதன் மூலம் , எம்மவர்கள் எதை சாதிக்க நினைக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கொழும்புவில் இடம்பெற இருந்த இந்து மத சகோதர்களின் தேர் திருவிழாவை குறித்து , அமைச்சர் மனோ கணேசனின் முகநூல் பக்கத்தில் வந்த செய்திகளை பார்க்கும் போது , இஸ்லாமிய விழுமியங்கள் குறித்து மாற்று மத சகோதரர்கள் , இஸ்லாத்தின் எதிரிகளால் பரப்படும் பொய்களை உண்மை என நம்பிவிடும் அவலம் இருப்பதை எமது சகோதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று எமக்கு நூறுவீதம் தெரியாமல் விட்டாலும் , அங்கிருந்து வரும் செய்திகள் மற்றும் ஒரு அமைச்சரின் மிகவும் சாணக்கியமான அணுகுமுறைகளின் மூலம், நமது சகோதர்களில் சிலர், அங்கு இடம்பெற இருந்த ஒரு மத வைபவத்தை நிறுத்த அல்லது அது இடம்பெறுவதை விரும்பாத ஒரு நிலையை அறிய முடியும்.

மாற்று மத மற்றும் பிற மத சமூகங்களோடு எவ்வாறு பழக வேண்டும் , அவர்களின் மத நம்பிக்கையை நாம் எந்தளவுக்கு மதித்து நடக்கவேண்டும் என்று மிகத்தெளிவாக வேறந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு குறிப்பிட்டு சொல்லி இருக்கும் நிலையில் , இவ்வாறான சம்பவங்கள் நிச்சயம் , இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பதத்தை நிச்சயம் தவறுதலாகவே உலகுக்கு அறிவிக்கும்.

நமது பள்ளிவாயல்கள் தாக்கப்டும் போது , எமது இஸ்லாமிய ஆடை முறைகள் எல்லாம் ஆபத்தை உணர்ந்த போது , எமது மார்க்க நம்பிக்கைகள் பல , கேலிக்கும் , கேள்விக்கும் உட்படுத்தப்பட்ட போது ,எமக்கு ஏற்பட்ட கோபம் , வலி , வேதனை எல்லாம் , பிற சமூகத்திற்கும் உள்ளது என்பதை எம்மவர்கள் எப்போது உணர்வது. சில தனிப்பட்ட விடையங்களுக்காக இரு சமூகங்கள் சந்தேகத்துக்கு உட்பட்டு வாழ்வது என்பது , இலங்கை போன்ற பல்லின சமூகம் வாழும் நாட்டில் நிச்சயம் மனக்கசப்புக்களையும் , தீராத பகைகளையுமே ஏற்படுத்தும்.

உலகுக்கே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது நாம் நமக்கு மட்டும் முன்மாதிரியாய் வாழ்ந்து விட்டு மறைந்து விடுவது என்றாகிவிடுமா. பொறுமையும் , கவலையும் பிறர் எம்மீது அத்துமீறும் போது இருந்தது என்பதற்காக , நாமும் பிறரின் நம்பிக்கைகளில் அத்துமீறும் போது அவர்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

இது போன்ற மிகவும் உணர்வு பூர்வமான விடையங்களில் அல்லது மிகவும் உணர்ச்சியான விடயங்களில் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் யார் முன்னின்று தீர்த்து வைப்பது என்ற பாரிய கேள்வி எப்போதும் எம் கண் முன்னே இன்னும் விடை இல்லாமல் இருப்பது , எந்தளவுக்கு நாம் மார்க்க தீர்ப்பு அல்லது மார்க்க விட்டுக்கொடுப்பு விடயங்களில் பூரணமான தெளிவின்மையில் இருக்கின்றோம் என்பதை சுட்டி காட்டி நிற்கின்றது.

இது ஒரு அரசியல் விடயம் என்பதையும் தாண்டி , ஆன்மீக புரிதலில் ஏற்பட்ட குறைபாடு என்றே நான் கருதுகின்றேன். இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் சார்பில் , ஆன்மீக ரீதியில் தீர்வுகளையும் தீர்ப்புக்களையும் சொல்லும் அதிகாரம் பெற்றவர்கள் இந்த விடயத்தில் தலையிட வேண்டும். அது மட்டுமல்லாமல் , இந்த விடயம் அரசியல் மயப்படும் போது, நிச்சயம் அது வேறொரு திசைக்கு மாற்றப்பட்டு , சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு தீனி போடும் என்பதே எப்போதும் நாம் வாங்கி வந்த சாப வரலாறு.

இது போன்ற விடயங்களில் எம்மவர்களில் பலருக்கு ரத்தம் என்பது தக்காளி சட்னியாகவே இன்னும் இருப்பது இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமானவர்கள் என்பதற்கான சான்றே !!!

-Athmbawa Waaqir Hussain-

Post a Comment

0 Comments