யுத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தினர் உள்ளக விசாரணையில் அமைக்கப்படவுள்ள உண்மை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து திட்டமிடப்படுகின்றது. அவ்வாறு உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மதத்தலைவர்களை உள்ளடக்கிய கருணை சபையினால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல்கள் போன்றவை நிறைவடைந்த பின்னரே உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்ளக விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு பிரதிநிதித்துவம் காணப்படவேண்டுமா என்பது குறித்தும் ஜனவரி மாதம் விரை இடம்பெறவுள்ள தேசிய கலந்துரையாடல்களிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கலப்புபொறிமுறையை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் உள்ளக விசாரணை பொறிமுறை குறித்த நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச பங்களிப்பு அவசியம் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை உள்ளக விசாரணை பொறிமுறையின் கீழ் விசாரிக்கப்படவுள்ள இராணுவ வீரர்களுக்காக அரசாங்கம் வழக்கறிஞர்களை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் அதற்கான சட்ட உதவிகளை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உறுதி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை என்பனவற்றின் பரிந்துரைகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பன தொடர்பில் இராணுவ வீரர்களுக்கு தெளிவூட்டும் பொறுப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளனர்.

0 Comments