அறிமுகம்:
கடந்த வாரம் இந்த நகரில் இடம்பெற்ற ஒரு சிறுவர் பாலியல் குற்றச் செயல் தெடர்பாக புத்தளம் முகையத்தீன் ஜும் ஆ பள்ளிவாசல் நிருவாகத்துக்கு 10.10.2015 ஆந் தேதியிடப்பட்டு புத்தளம் மஸ்ஜிதுல் முஜாகிதின் பள்ளிவாசல் கடிதத் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ஒரு கடிதப் பிரதி . சமுகக் கவலையுள்ள இளைஞர்களால் எனக்கு தரப்பட்டு பெண்கள், சிறுவர் தொர்பான விடயங்களில் அக்கறை செலுத்தும் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் என்னிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட விளக்கத்துக்கு பதில் வழங்கும் நோகத்தோடு இந்த ஆக்கம் என்னால் எழுதப்படுகிறது.
பிரச்சினையின் சாராம்சம்
கடந்த 2015.10. 09 அல்லது அதற்கு அண்மித்த நாளில் நகரில் 06 வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அது தொடர்பாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடரந்து நகரத்தில் உள்ள ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களும், பொது மக்களும் பலவிதமான கருத்துப் பரிமாற்றங்களை் செய்து வருவதோடு இது தொடர்பாக நகர மக்கள் சற்று குழப்ப நிலையில் இருக்கிறார்கள். இவ்விடயம் தொடர்காக பாதிக்கப்பட்டவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கிடையில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்தடன் தலையீடு செய்யுமாறு கோரியே மேலே சொல்லப்பட்ட கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாரிய குற்றச் செயல்களை சமாதான முயற்சி மூலம் தீர்த்துக் கொள்ளலாமா?
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மஸ்ஜிதுல் முஜாகிதீன் பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த 25 பேர் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இந்த வழக்கு சமசரம் செய்யப்படலாமா? இது தான் பொதுவாக இளைஞர்கள் முன் வைக்கும் வினா.
இங்கு எல்லோரும் கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சம் என்னவெனில் யார் அந்த குற்றத்தைச் செய்தார் என்பது இன்னும் நிரூபணமாகவில்லை. ஒரு 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பாதகச் செயல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதன் உண்மையான குற்றவாளி யார் என்பதை அறிய
01) பொலிஸார் புலனாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்
02) மருத்துவத் துறையின் மரபணு பரிசோதனையையை மேற் கொள்ள வேண்டும்
03) சட்டத் துறையினர் தமது வாதப் பிரதி வாதங்களை முன்வைக்க வேண்டும்
04) கைது செய்யப்பட்ட நபரால் அந்த குற்றச் செயல் புரியப்பட்டுள்ளது என நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிருபிக்கப்பட்டு நீதிபதியால் முடிவு செய்ய வேண்டும்.
இந்தக் காரியங்கள் அனைத்தும் படி முறையில் நடந்தேறும் வரையில் யார் கைது செய்யப்பட்டுள்ளாரோ அவர் வெறுமனே ஒரு சந்தேக நபரே. அவரை நிரபராதி என்ற கோணத்தில் இருந்துதான் நீதி மன்றம் நோக்கும்
தனி நபர் பாதிக்கப்பட்டிருப்பினும் இழைக்கப்பட்ட குற்றத்தின் தன்மையை பாரதூரமாகக் கருதி அது அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாகக் கருதப்படும். பிள்ளைகளுக்கு எதிராக புரியப்பட்ட குற்றச் செயல்களுக்கு பிள்ளையின் பெற்றோர் யாருடனும் இணக்கப்பட்டுக்குச் செல்ல முடியாது.
பிள்ளைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பெற்றோர் இருந்தாலும் கூட நீதி மன்றம் அவர்களும் மேல் நிலைப் பாதுகாவல் (Upper Guardian) ஆக இருப்பதால்;
இது போல் எந்த ஒரு அமைப்போ அது பாதிப்புக்குள்ளான பிள்ளை சார்ந்த மத அமைப்பாக இருந்தாலும் கூட அந்த அமைப்புக்கு அந்த குற்றச் செயல் தொடர்பான வழக்கில் எந்த வகையிலும் தலையீடு செய்ய முடியாது. அது தண்டனைக்குரிய மிகப் பாரதூரமான ஒரு குற்றச் செயலாகும்.
இப்படி ஒரு முயற்சியை பள்ளிவாசல் ஒன்று மேற்கொள்ளுகிறது என்றால் அது இந்த நாட்டு சட்டத்தில் தலையிடு செய்து சட்டத்துக்கும் ஓழுங்கிற்கும் இடையூறு புரிகிறது என்றே அர்த்தப்படும். ஏற்கனவே இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவி வரும் தப்பெண்ணங்களை அதை அதிகரித்து நமது சமுகத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தும்.
சந்தேக நபர் தூய்மையான ஒருவர், அவர்மீது அபாண்டம் சுமத்தப்பட்டுள்ளது என யாருக்காவது நினைக்கத் தோன்றினால் அவருக்கு ஏனையவர்கள் செய்யக் கூடிய ஆகக் கூடிய உதவி அவருக்காக பிராத்திப்பது அல்லாமல் வேறு ஒன்றும் இருக்க முடியாது?
சமுகத்தின் பொறுப்பு யாது?
இந்த விவகாரம் இந்தப் பிரதேசத்துக்கு வழமைக்கு மாறான ஒன்றாக இருப்பதால் பலரும் உணர்சிவசப்பட்டுப் போகிறார்கள். ஆனால் சட்டத்தரணிகள் என்ற வகையில் நாம் நாளாந்தம் இது போன்ற அல்லது இதை விட மிகவும் மோசமான வழக்குகளை நூற்றுக் கணக்கில் சந்திக்கிறோம்.
நான் ஆஜனார வழக்குகளின் அடிப்படையில் என்னால் பேணப்பட்டுவரும் தரவு அடிப்படைகளின் பிரகாரம் போதைப் பொருள் பாவனைதான் இம்மாதிரியான சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றன. போதைப் பொருள் என நான் இங்கு குறிப்பிடுவது நமது மருந்துக் கடைகளில் இலகுவாகக் கிடைக்கக் கூடியதான மாத்திரை வகைகளையாகும்.
நமது நகரில் தகுதி, தராதரமற்ற பலரால் மருந்துக் கடைகள் நடாத்தப்படுவதோடு அதில் இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் மூலம் தான் இந்த சமூக குற்றச் செயல்கள் நடைபெறவதோடு அந்த இளைஞர்களே அதற்கு அடிமையாகிப் போகிறார்கள். இதனால் மிக இள வயதிலேயே அவர்களுக்கு திருமணம் தேவைப்படுகிறது.
இந்த போதைப் பொருள் பாவனையே விரையில் மண முறிவுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. மிக அண்மைக் காலத்தில் நான் ஆஜரான மூன்று வழக்குளிலும் (இருவர் முஸ்லிம்கள் மற்றவர் சிங்கள சமுகத்தைச் சார்ந்தவர்) மனைவிமார் உடனடியான விவாகரத்தைக் கோரி மன்றாடினார்கள். தாம் தமது கணவர்மாரோடு வாழ்ந்தால் அவர்களின் மிருக வெறியால் நாம் கொல்லப்படுவோம் என அவர்கள் கெஞ்சினார்கள்.
ஒரு தாய் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் நேரத்திலும் கணவனின் மிருக இச்சைக்கு ஆளாக வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது. எம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதவர்கள் கூட இந்தப் பிரச்சினைக்கு ஆளாகின்றனர்
மிக வேதனைக்குரிய வழக்கு ஒன்று
கற்பிட்டிப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி திடிரென பிரமை பிடித்த நிலைக்குள்ளானபோது அச்சமடைந்த பெற்றோர் எந்த வைத்தியமும் கைகொடுக்காத நிலையில் மனநோய் வைத்தியரிடம் அந்தப் பிள்ளையை எடுத்துச் சென்றபோதுதான் அந்த 13 வயது சிறுமி கற்பவதியாக இருப்பது தெரிய வந்தது. சொந்த சகோரரியின் கணவனால் அச்சுறுத்தப்பட்டு அந்தச் சிறுமி பாலியில் துஸ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டு கற்பமுற்று பின்னர் அச்சத்தால் வெளியே சொல்ல முடியாது அடக்கி அடக்கித்தான் அந்த திக்பிரமை நிலையை அவள் அடைந்திருந்தாள்.
அவளை ஏற்க மறுத்த கற்பிட்டி வைத்தியசாலை அவரை புத்தளத்துக்கு மாற்றியது. புத்தளம் ஆதார வைத்தியசாலை நிருவாகம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று நிரப்பந்தித்து. புத்தளம் வைத்தியசாலையில் பிள்ளைப்பேறு நடந்தாலும் வைத்தியசாலை நிருவாகம் குழந்தைப்பருவ தாயை ( Child Mother) பெற்றோருடன் செல்ல அனுமதிக்க மறுத்து அவளை குழந்தைகள் பாதுகாப்புக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ் கல்வி வழங்க ஏற்பாடு செய்தது.
அவள் பெற்றெடுத்த பிள்ளை மாத்திரமே குடுமப்த்திடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைத் தாயை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவளது பெற்றோர் வாதாடினர். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்து அந்த சிறுமியை கழுத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சேர்க்க கட்டளை இட்டது. இப்போது அந்த குழந்தைத் தாய் அந்தப் பாடசாலையில் கல்வி கற்கிறாள்.
சமுகக் கடப்பாடு
இவ்வகையான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். நகரில் இயங்கும் மருந்துக் கடைகள் அனைத்தும் முறையான பரிசிலனைக்கு உற்படுத்தப்பட வேண்டும். அவற்றின் செயற்பாடுகள் சமுகத்தால் அவதானிக்கப்பட வேண்டும்.
இந்த குறிப்பிட்ட வழக்கில் ஒரு சட்டத்தரணி என்ற தோரணையில் என்னால் விசேடமாக சொல்லக் கூடிய ஆலோசனை யாதெனில் இந்த வழக்கில் அரசியல் தலையீ்களோ அல்லது இனத் துவேச செயற்பாடுகளோ இருப்பதாக யாரும் கருத இடமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தாம் நினைக்கும் செயற்பாடுகளை கையாண்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காது நீதிமன்றத் தீர்புக்காக காத்திரருக்க வேண்டியது மாத்திரமே.
முடிவுரை
எனவே இங்கு நான் மீண்டும் வலியுறுத்த வேண்டியது இப்போது கைது செய்யப்பட்ட நபர் வெறுமனே ஒரு சந்தேக நபர்தான். அவரை இன்னும் நிதி மன்றம் குற்றமற்றவராகத்தான் பார்க்கிறது. அதனால்தான் அவர் ஒரு சட்டத்தரணியை அமர்த்தி தன்து குற்றமற்ற தன்மையை நிரூபிக்க இடமளித்துள்ளது. அனைத்து செயற்பாடுகளும் முடிவடைந்த பின்னர் உண்மையான குற்றவாளியார், குற்றமற்றவர் யார் என்பதெல்லாம் வெளிவரும்.
”யார் நம்பிக்கை கொண்டு தமது நம்பிக்கையில் அநீதியைக் கலக்கவில்லையோ அவருக்க நிம்மதியும், அமைதியும் உண்டு. அவர்கள்ளே நேர்வழி பெற்றவர்கள் (6:82)
-Puttalam Today-


0 Comments