உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
மேலும் உள்ளராட்சி மன்ற தேர்தலின் போது பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கட்சி தீர்மானித்துள்ளது.மேற்குறிப்பிட்ட இரண்டு யோசனைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை கட்சி் தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழு கூடியது. இந்த குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கம் நிறுவுவப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது கட்சியின் செயற்குழு நேற்று கூடியது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ, உப தலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம், பொருளாளர் எரான் விக்கிரமரத்ன, தவிசாளர் மலிக் சமரவிக்ரம, ஊடக பேச்சாளர் அகில விராஜ் காரியவசம், சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல, அரசின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, இளைஞர் அணியின் தலைவர் ருவன் விஜயவர்தன, சிரேஷ்ட உப தவிசாளர் ரன்ஜித் மத்தும பண்டார, கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, டி.எம் சுவாமிநாதன், ஆர் யோகராஜன், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானம் எடுத்தமைக்கு அமைவாக தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது.
இதற்கமைய தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டமையின் பி்ன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று கூடியது. இதன்போது பல்வேறு தரப்பிலான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் பலர் தேசிய அரசாங்கம் தொடர்பில் தமது விவாதங்களை முன்வைத்துள்ளனர்.எனினும் இது தொடர்பில் பல நேரம் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்து நடத்த திட்டமிட்டுள்ள உள்ளராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் நோக்குடனே நேற்றைய தினம் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது.
இதற்கமைய அடுத்து நடத்தப்படவுள்ள உள்ளராட்சி மன்ற தேர்தலை தற்போதைய நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் எனவும் முன்னைய ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இதன்காரணமாக கிராம மட்டத்தில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் பிரகாரமே நடத்த வேண்டும எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் அமைச்சர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
மேற்படி கட்சி அங்கத்தவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனையை கட்சியின் செய்றகுழு ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. அதேபோன்று அடுத்து வரும் உள்ளராட்சி மன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையையும் கட்சி ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
ஆகவே நேற்றைய குழு கூட்டத்தில் மேற்குறித்த இரண்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் ரணிலின் கருத்து
செயற்குழுவின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்படுகையில்,
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சார்ந்தோர் மைத்திரியும் ரணிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரை அமர்த்துவதற்கு முனைவதற்கு முனைவதாக பிரசாரம் செய்தனர்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் காப்பாற்றியுள்ளோம். தற்போது இனவாதிகளின் வாய்மூடப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தை கிராமத்திற்கு எடுத்து செல்லுமாறு கோரியுள்ளார்.

0 Comments