உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொகுதிவாரி முறைமையின் கீழ் நடத்துவதற்கு நேற்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.இந்த சந்திப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசியின் சிரேஷ்ட தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் கூடிய குழு கூட்டத்தின் போது அடுத்த வருடம் நடத்த திட்டமிட்டுள்ள உள்ளராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது அடுத்த வருடம் நடத்த திட்டமிட்டுள்ள உள்ளராட்சி மன்ற தேர்தலை தொகுதிவாரி முறைமையின் கீழ் நடத்துவதற்கு நேற்றைய பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று விடுதலை புலிகளுடனான போரின் போது இறுதி கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அதன் ஆணையாளர் செய்யத் ஹூசைன் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் பரவலாக ஆராயப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த, பைஸர் முஸ்தபா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராயந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கையொன்றை சமர்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோன்று தேசிய அரசாங்கத்தின் நிலைவரம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இன்று கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலும் பரவலாக ஆராயப்பட்டுள்ளது.

0 Comments