அரை நூற்றாண்டுக்கு முன்னால் பெண்ணுக்குக் கல்வி வாய்ப்பு அத்தனை எளிதல்ல. ‘பேதைமை’ (அறிவின்மை) பெண்ணுக்கு அழகு என கருதப்பட்டது. மெல்ல மெல்ல பால் கணக்கு, கடிதம் எழுதத் தெரிந்தால் நல்லது என்று ஆரம்பக் கல்வி பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டது.
பெண் பருவம் அடையும்வரை படிக்க அனுப்புவது, உள்ளூரில் உள்ள பள்ளியில் எந்த வகுப்புவரை உள்ளதோ அதுவரை படிக்க அனுப்புவது என்ற நிலை மாறி சில சேவைத் துறைசார் படிப்புகளுக்குப் பெண்கள் கல்லூரிகளுக்கு அனுப்பபட்டனர். பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி போன்றவையே பெண்களுக்கான படிப்புகளாக இருந்தன. தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், பாதுகாப்புத் துறைகள் அவர்களுக்கு மிக அன்னியமான துறைகள்.
பெண்களின் அதிகபட்ச லட்சியம் ஆசிரியர் அல்லது செவிலியர் ஆவது. கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் பெண்களின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. இதில் கல்வி பெரும்பங்கை வகிக்கிறது. குழந்தைத் திருமணம் தீவிரமாகத் தடைசெய்யப்பட்டதால், குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்புவரை வந்த பெண்கள், பின்னர் கல்லூரிகளில் நுழைந்தனர். இதன் விளைவாகப் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுத் துறைகளில் நுழைந்தனர்.
கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமாகத் திறக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள், பெண்கள் தொழில்நுட்ப அறிவு பெற வழிசெய்தன. கனவுகளோடு, லட்சியத்தோடு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்ற பெண்களில் பலர் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டனர். பலர் இதனால் கனவு காண்பதே இல்லை. என்ன கல்வி பயின்றாலும், அது திருமண நோக்குடனேயே பயிலப்படுகிறது.


0 Comments