Subscribe Us

header ads

பெண்களுக்கு தேவை கல்வியறிவு



முற்காலத்தில் பணக்கார, உயர் ஜாதிக் குடும்பங்களில் பிறந்தவர்களில் ஒரு சிலர்தான் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்றனர். அடுத்த தலைமுறையில் அடுத்த இடத்தில் இருந்த ஜாதிகளில் சிலர் பள்ளிக்குச் சென்றனர். அடுத்த தலைமுறையில் பள்ளிக் கல்வியாவது பெண்களுக்கு வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தனர். 

அரசு, ஜாதி என்ற ஏணிப்படியில் மிகக் கீழே இருப்பவர்களுக்கும் சில சலுகைகள் கொடுக்க ஆரம்பித்ததும் அங்கிருந்தும் பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்தனர். ஆனாலும் ‘தொன்மை’ வாய்ந்த இந்தியக் கலாசாரத்தை ஒரு சில பெண்கள் தவிர யாரும் எதிர்க்கத் துணியவில்லை. பெண்ணாகப் பிறந்துவிட்டால் சிறு வயதிலிருந்தே சமையல், வீட்டைப் பராமரிப்பது போன்ற கலைகளைத் தாயிடமிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ பயிலுவது, பின் திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டிலும் பயின்ற இந்தக் கலைகளை மேலும் வளர்த்துக்கொண்டு அவற்றை நடைமுறையில் பின்பற்றுவது போன்றவைதான் பெண்களின் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. சரி, இப்போது பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், சில குடும்பங்களில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். 

ஆனால் சமைப்பதும் வீட்டு நிர்வாகமும் மட்டுமே இப்போதும் பெண்கள் கையில் இருக்கிறது. மற்ற எல்லா அதிகாரங்களும் அவர்களுடைய கணவன்மார்கள் கையில்தான். இதைப் பெண்களே கூட உணருவதில்லை. ஏனெனில் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘கல்லானாலும் கணவன்’, ‘புல்லானாலும் புருஷன்’ என்ற பழைய யுகத்தில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கணவனின் செய்கைகளிலோ நடத்தையிலோ இவர்கள் எந்தக் குறையையும் காண்பதில்லை; காண விரும்புவதும் இல்லை. 

ஆண்களுக்குரிய உரிமைகள் எல்லாம் பெண்களுக்கும் வேண்டும் என்பது ஆண்கள் செய்து வரும் தவறுகளை பெண்களும் செய்யலாம் என்று அர்த்தமல்ல. அந்தத் தவறுகளை ஆண்களும் செய்யக் கூடாது என்பது மட்டுமே. சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் எல்லா மாணவர்களுக்கும் ஆண்கள் எப்படிப் பெண்களை நடத்தவேண்டும் என்பதற்கும் பெண்கள் எப்படித் தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் பாடங்களை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கலாமே. இப்படி அறிவுரைகளை மறுபடி மறுபடி சொல்லித்தான் ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் மாற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments