Subscribe Us

header ads

9300 அடி உயரத்தில் இருந்து தவறவிட்ட ஐபோன் மீண்டும் கிடைத்து நன்றாக இயங்குவதால் உரிமையாளர் மகிழ்ச்சி



அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பகுதியில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ’கியாஸ் கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்கா’ நிறுவனத்தின் அதிபராக உள்ள பென் வில்சன்(74) என்பவர் சமீபத்தில் தனது தொழிற்சாலையில் அலுவல்களை முடித்து விட்டு தனது தனி விமானத்தில் ஏறி டெக்சாஸ் நகரில் உள்ள வீட்டுக்கு  புறப்பட்டார்.

சில நூறு கிலோ மீட்டரை கடந்து விமானத்தை அவர் ஓட்டிவந்தபோது சரியாக மூடப்படாத இடதுப்புற கதவு திடீரென்று சுமார் 3 அங்குலம் அகலத்துக்கு திறந்து கொண்டது. உள்ளே புகுந்த காற்றின் அசுர வேகத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த நாளிதழ்கள் பறந்து கீழே விழுந்தன.

கதவை சரியாக சாத்திய வில்சன், தனது வீட்டின் புல்தரை பகுதியில் பத்திரமாக தரையிறங்கிய பின்னர், தனது விலையுயர்ந்த ஐபோன் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். அந்த குட்டி விமானத்தை முழுவதுமாக ஆராய்ந்த பிறகும் ஐபோன் கிடைக்கவில்லை.

பின்னர், நடுவானில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட நாளிதழோடு அவரது ஐபோனும் கீழே விழுந்து விட்டதை உணர்ந்த பென் வில்சன் சோகத்தில் ஆழ்ந்துப் போனார். அதில் ஏகப்பட்ட ரகசிய தகவல்கள், நூற்றுக்கணக்கான முக்கிய தொடர்பு எண்கள், ஆயிரத்துக்கும் அதிகமான பொக்கிஷங்கள் போன்ற புகைப்படங்களை அவர் சேமித்து வைத்திருந்ததால், அந்த மதிப்புமிக்க ஐபோனின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை.

இதைப்பற்றி அறிந்த அவரது மகன், தனது ஸ்மார்ட் போனில் உள்ள தொலந்துப்போன ஐபோனை தேடும் ஆப் ("Find My iPhone" ) மூலம் தந்தையின் ஐபோனை தேடியபோது, அவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜாப்லின் பகுதியில் மலைப்பாங்கான பிரதேசத்தில் விழுந்துக் கிடப்பது தெரியவந்தது.

சுமார் 9 ஆயிரத்து 300 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த தனது ஐபோனை இனி தேடி புண்ணியமில்லை என வில்சன் தீர்மானமாக முடிவு செய்துவிட்ட வேளையில், அவரது மகன் விடாப்பிடியாக அவரை காரில் ஏற்றிக் கொண்டு அந்த இடத்துக்கு சென்றார்.

ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஒரு கழுதையை வாடகைக்கு பிடித்து, கழுதையின் உதவியுடன் தொலைந்துப்போன ஐபோனை தேடும் வேட்டை தொடர்ந்தது. நீண்ட, நெடிய தேடலுக்கு பின்னர் ஒரு பெரிய மரத்தின் அடியில் அடர்ந்த புல் மெத்தையின் மடியில் கம்பீரமாக அமர்ந்திருந்த ஐபோன் பென் வில்சனை கண் சிமிட்டி வரவேற்றது.

அதை எடுத்துப் பார்த்த அவர் 9 ஆயிரத்து 300 அடி உயரத்தில் இருந்து விழுந்த பின்னும், அது நன்றாக இயங்குவதை அறிந்து, ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார். இந்த சந்தோஷத்தில், தனது ஐபோனை தேடி கண்டுபிடிக்க உதவிய கழுதையை தத்து எடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.






Post a Comment

0 Comments