அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த நாடு அணுக்குண்டு சோதனை நடத்தியதுடன் தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
இதன்காரணமாக அந்த நாட்டின்மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த நாடு வறுமையில் தத்தளிக்கிறது. ஆனாலும் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுவதில், வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை.
இதேபோன்ற நிலையில்தான் ஈரானும் இருந்து வந்தது. ஈரான் அணுசக்தி திட்டங்களை ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படுத்தி வருவதாக கூறி வந்தபோதும், வல்லரசு நாடுகள் அதை ஏற்கவில்லை. அந்த நாடு, அணுசக்தி திட்டங்களை அழிவுவழிக்கே செயல்படுத்தி வருவதாக கூறி, பொருளாதார தடைகள் விதித்தன. இந்த நிலையில்தான் சமீபத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் பேச்சு வார்த்தை நடத்தி, வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஈரானின் அணுசக்தி உலைகளை ஐ.நா. ஆய்வாளர்கள் பரிசோதிக்க முடியும். ஈரான் அணு ஆயுதங்கள் வாங்குவதற்கான தடை நீடிக்கும். இதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும்.
இதேபோன்று வடகொரியாவும் இறங்கி வந்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி சர்வதேச அரங்கில் எழுந்தது. இது தொடர்பாக வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக வடகொரியாவுக்கு அணுசக்தி திட்டம் அத்தியாவசியமானது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துடன் எங்கள் நிலையை ஒப்பிடுவது சரியல்ல.
அமெரிக்காவின் ராணுவ செயல்பாடுகள், (தென் கொரியாவுடன்) கூட்டு ராணுவ பயிற்சி, அணு ஆயுத அபாயம் ஆகியவை எங்களுக்கு எப்போதுமே ஆத்திரம் ஏற்படுத்துபவை. எங்கள் அணுசக்தி திட்டங் களை கைவிடுவதற்கு அல்லது ஒருதலைப்பட்சமாக முடக்குவதற்கு (அமெரிக்காவுடன்) பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எங்களுக்கு விருப்பம் கிடையாது. நாங்கள் அணுசக்தி நாடு என்பது தெளிவானது. அணுசக்தி நாடுகளுக்கு என்று சொந்த நலன்கள் உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 Comments