Subscribe Us

header ads

கள்ளத்தொடர்பு இணையதளத்துக்குள் ஊடுருவிய ஹேக்கர்ஸ்: 3.7 கோடி ஜோடிகளுக்கு மிரட்டல்



ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறையை மீறி ‘யாரோடும், யாரும்’ என்ற மேற்கத்திய கலாசாரத்தை இன்றைய தலைமுறையினர் பின்பற்றி வருவதால் இவர்களது சபலங்களை வைத்து பணம் சம்பாதிக்க பல இணையதளங்கள் முயன்று வருகின்றன.

அவ்வகையில், திருமணமான ஆணும், பெண்ணும் தங்களது துணைவர்களை ஏமாற்றிவிட்டு, புது நபர்களுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள துணை புரியும் இணையதளங்களில் கனடா நாட்டைச் சேர்ந்த ‘ஆஷ்லே மேடிஸன்’ என்ற நிறுவனம் இந்த ‘தொழிலில்’ மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது.

‘வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் - அந்த வாழ்க்கையிலே, வாலிபம் கொஞ்சம் நேரம் தான்’ (Life is short. Have an affair) என்ற கொள்கை முழக்கத்துடன் கள்ளக்காதலர்களுக்கு தரகு வேலை பார்த்துவரும் இந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 70 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர்.

உள்ளூரில் கணவன் இல்லாத போது, உள்ளூர்வாசியுடன்.., வெளிநாட்டு பயணத்தின் போது மனைவி உடன் வராத போது அந்த நாட்டை சேர்ந்த புத்தம்புது சிட்டுடன் என அனைத்து வகையான ‘சேவைக்கும்’ இந்த இணையதளம் வழியமைத்து தருவதால் தமது கள்ளத்தொடர்புகள் எல்லாம் ரகசியமாகவே நடந்து வருவதாக இந்த அங்கத்தினர் கருதி வந்தனர்.

இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த ‘ஆஷ்லே மேடிஸன்’, உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த இணையதளத்துக்குள் ஊடுருவிய சில ‘ஹேக்கர்ஸ்’ (இணையதள பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல் திரட்டை கண்காணித்து, திருடும் கும்பல்) மேற்கண்ட மூன்று கோடியே 70 லட்சம் வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர்?, இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ‘ஸ்வாஹா’ செய்து விட்டது.

இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் ‘ஆஷ்லே மேடிஸன்’ நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஒரு பெரிய தொகையை கேட்டு அவர்கள் மிரட்டி வருவதாகவும், இல்லை என்றால் ‘ஆஷ்லே மேடிஸன்’ வாடிக்கையாளர்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை ‘புட்டுப்புட்டு’ வைக்கப்போவதாகவும் ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தி வெளியானதும் ‘ஆஷ்லே மேடிஸன்’ அங்கத்தினரான ஆண், பெண் வாடிக்கையாளர்களுக்கு இப்போதே வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி விட்டது. 

தப்பித் தவறி இந்த தகவல்களை அவர்கள் வெளியிட்டு விட்டால் அமெரிக்கா, கனடா நாட்டில் மட்டும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் மெத்தனத்தால் இந்நாடுகளில் வாழும் பல ஆண், பெண்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் ‘மொத்து’ வாங்க வேண்டியதாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே விவாகரத்து வழக்குகளை கையாள முடியாமல் திணறி வரும் மேற்கத்திய நாடுகள் நீதிமன்றத்துக்கு இந்த ‘ஆஷ்லே மேடிஸன்’ விவகாரம் பணிச்சுமையை இரட்டிப்பாக்கி விடும் என நிச்சயமாக நம்பலாம்.

Post a Comment

0 Comments