முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அரச முத்திரையுடன் கூடிய கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிடம் பல வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் ஷிராந்தி ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்துடன் நெருக்கமாக பணியாற்றிய ஜனாதிபதி ஊடகப்பிரிவின் மிலிந்த ரத்நாயக்க என்பவருக்கு வீடொன்றை பெற்று கொடுக்கவே அவர் இவ்வாறான சிபாரிசு கடிதமொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு சிபாரிசு கடிதத்திற்கு அரச முத்திரையுடன் கூடிய கடித தலைப்பை பயன்படுத்தியமை குறித்து முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தமது உறவினர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வீடுகளை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதேபோல ஷிரந்தி ராஜபக்சவும் தனது அலுவலகப்பணியாளருக்கு அரச வளத்தை முறைகேடாக பயன்படுத்தி வீடொன்றைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது ஷிரந்தி ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கார்ல்டன் ஆரம்பநிலை பாடசாலைக்கு பாரிய நிதி அறவீட்டுடன் சேர்க்கப்பட்ட குழந்தைகளை கொழும்பில் உள்ள அரசாங்கத்தின் பிரபலபாடசாலைகளில் இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்ட ''சிறிலிய சவிய'' என்ற அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு போலி அடையாள அட்டை இலக்கமொன்று பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments