முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அசாத் சாலி கருத்து வெளியிட்டார்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து இனவாதத்தை குறித்து பேசி நாட்டு மக்களை குழப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி நாட்டில் பல பிரதேசங்களில் புலி கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்படி ஏற்றப்பட்டிருந்தால் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லை என்றால் இது குறித்து மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்று வழங்க வேண்டும்.
அண்மையில் எனது அரசியல் அலுவலகம் கண்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து அலுவலகத்திற்கு முன்னால் கூடிய சில விசமிகள் என்னை கண்டிக்குள் வரவேண்டாம் என கோசம் எழுப்பியிருந்தனர்.
இது ஒரு திட்டமிட்ட சதி செயலாகும். சில பிரதேச அரசியல்வாதிகள் காசு கொடுத்து இதனை செய்துள்ளனர், இது தொடர்பில் நான் பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளேன்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு எதிராக சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்ற பொய்யான பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது.
இதேவேளை தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுயநினைவின்றி அலைந்து திரிகின்றார்.
மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த போது கட்சிகளை பிளவடைய செய்தார். தற்போது இராணுவத்தினையும் இரண்டாகப் பிளவடைய செய்யப்பார்க்கிறார்.
மேலும் இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி மக்களை குழப்பிவிட முற்படுகின்றார்.
தற்போதை அரசாங்கத்தின் கீழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் அதனை இல்லாமல் செய்வதற்காகவே அவர் முயற்சிக்கின்றார்.
எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபாலவிடமும் பாதுகாப்பு பிரிவினரிடமும் கோரிக்கை விடுகின்றோம் என அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments