1960 ஆம் ஆண்டு டொமினிக்கன் குடியரசில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட மிரபால் சகோதரிகள் எனும் சகோதரிகள் மூவர் (பெட்றீசியா மிராபல் ரெயீஸ், மரியா மினேரவா மிராபல் ரெயீஸ், அன்டோனியா மரியா தெரேசா மிராபல் ரெயீஸ்) சர்வாதிகாரி ரபாயெல் ட்ருஜில்லோவின் உத்தரவினால் 1960 நவம்பர் 25 ஆம் திகதி கொல்லப்பட்டதையொட்டி பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினமாக நவம்பர் 25 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை
முன்னிட்டு, வன்முறை ஒழிப்பு உலகெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.
2014 ஆம் ஆண்டின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்திற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் முன்மொழியப்பட்ட தொனிப்பொருள் உங்கள் சூழலை செம்மஞ்சள் நிறமாக்குங்கள் (Orange YOUR Neighbourhood) என்பதாகும்.
இன்று முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10 ஆம் திகதி வரையான 16 தினங்களுக்கு இத்தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கையில் இவ்வாண்டின் “பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டை” முன்னிட்டு இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான மன்றத்தின் (GBV Forum) அங்கத்தவர்கள் பல்வேறுபட்ட செயற்பாடுகளை நாடுமுழுவதும் ஏற்பாடு செய்துள்ளனர்.
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது (WMC) 16 நாட்களைக் கொண்ட இந்த சர்வதேச பிரசாரத்திற்கு srilanka16days.wordpress.comஎன்ற வலைப்பதிவின் ஊடாகப் பங்களிப்புச் செய்யும் பொருட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
16 நாட்கள் பிரசாரத்துடன் தொடர்புடைய உங்களது எண்ணங்கள், அனுபவங்கள் அல்லது நாட்டில் இடம்பெறுகின்ற செயற்பாடுகளின் இற்றைப்படுத்தல்கள் (updates) போன்றவற்றை அனுப்பி வைத்தால் அவை மேற்படி தளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரம், எழுத்தாக்கம், புகைப்படம், கட்டுரைகள், குறுந்திரைப்படங்கள், நேர்காணல்கள், கேலிச்சித்திரங்கள், ஆவணப்படங்கள் மற்றும் வலையொலிகள்
(podcasts) போன்ற படைப்புக்களாக தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அனுப்பலாம். இத்தகைய படைப்புகளை wmcsrilanka@gmail.comஎனும் மின்னஞ்சல் முகவரிக்கும் Sri Lanka 16 days campaign எனும் விடயத் தலைப்பிட்டு அனுப்பலாம் என பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice



0 Comments