Subscribe Us

header ads

‘மஹர்’என்பது பற்றிய விழிப்புணர்வு...வைரலாகும் மணமகளின் Fb Post!

 


எனக்கும் இல்யாஸுக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடைபெற்றது. முதல்நாள் நிக்காஹ்வுக்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் கேட்டது, என்ன மேடை அருகே புத்தகங்கள் வைத்து இருக்கீங்க? ஃப்ரீ புக்ஸா என. எல்லாரிடமும், இல்லை...இல்லை... அவையெல்லாம் எனக்கு திருமணப் பரிசாக என் கணவர் வழங்கியது என அவசரமாக தலையாட்டி வைத்தேன். இருப்பினும் குறைவான நேரத்தில் என்னால் அவை எதற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன என்பதை முழுமையாக அவர்களிடம் விளக்கமுடியவில்லை.

பெரும்பாலான திருமண நிகழ்வுகளில் பெண் வீட்டார் வழங்கும் சீர் வரிசைகளை காட்சிப்படுத்தி இருப்பார்கள். அவ்வப்போது அதன் அளவு கூடும் பட்சத்தில் எவ்வளவு வகையறைகள் என செய்தியாவதும் உண்டு.

ஆனால் என் கணவர் எனக்கு வழங்கியது சீர் வரிசை கிடையாது. ( ஆம் என் கணவர் எனக்கு வழங்கியதுதான், நான் அவருக்கு வழங்கியது அல்ல). இஸ்லாத்தில் அதனை மஹர் என அழைப்போம். மஹர் என்பது இஸ்லாமிய திருமணங்களில் தவிர்க்கக் கூடாத ஒன்று. ஒரு ஆண் தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு மனமுவந்து மணக்கொடையான மஹரை கட்டாயம் வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் சொல்கிறது. அதனை கேட்டுப் பெற வேண்டியது பெண்ணுக்கான உரிமை. அதே நேரத்தில் பெண் கேட்பதை கொடுக்க வேண்டியது அந்த மணமகனுக்கான கடமை. மஹரை மணமகனிடம் தனக்கேற்ற வகையில் பெண், கேட்டுப்பெற இஸ்லாம் அனுமதிக்கிறது. நகை, உடைகள், பணம் என எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம். அதை கட்டாயம் அவர்கள் வழங்கியாக வேண்டும். அந்த வகையில் இல்யாஸிடம் நான் கேட்டிருந்தது புத்தகங்கள்.

நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே புத்தகங்கள்தான் காரணம். ஒரு பயணத்தில் ஆனந்த் நீலகண்டனின் 'Vanara' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த புத்தகம் பற்றின அறிமுகம் எனக்கு ஏற்கெனவே இருந்தாலும், வாசித்துக் கொண்டிருந்தவரிடம் திடீரென உரையாடலை எப்படி தொடங்குவது என தெரியாததாலும் எதுவும் கேட்காமல் வேறு ஏதோ புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அவர் கண்ணசர சென்ற நேரத்தில், அவர் வைத்து சென்ற புத்தகத்தை புரட்டி வாசிக்க ஆரம்பித்தேன். 50 பக்கங்களை கடந்த என்னால் மீண்டும் அதனை கீழே வைக்க முடியவில்லை. எழுந்து வந்த அவரிடம், இதை சொன்னபோது, ‘சரி படிச்சுட்டு தாங்க’ என சிரித்தார். அதுதான் எங்கள் முதல் அறிமுகமே.

இப்படி எங்கள் வாழ்வில் பல்வேறு தருணங்களில் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் அவரிடம் அவற்றையே மஹராகவும் கேட்டேன். அதற்கான பட்டியலை அனுப்பினேன். மனம் நிறைந்து அத்தனையையும் வாங்கி திருமண மேடை அருகே அவரே அவ்வளவு அழகாக அடுக்கி வைத்திருந்தார். மொத்தம் 57 புத்தகங்கள். எங்கள் திருமணத்தின் ஒரே ஒரு குறையாக அந்த புத்தகங்கள் மட்டும் புகைப்படத்தில் சிக்காமல் போய்விட்டன. செல்ஃபோனில் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளேன்.

இஸ்லாமிய பெண்களிடம் மஹரை உரிமையுடம் கேட்டுப்பெறலாம் என்பது பற்றிய புரிதல்கள் தற்போது இல்லை. அதனாலேயே பெரும்பாலான திருமணங்களில் என்ன வேண்டும் என அவர்களிடம் கேட்கப்படுவதுமில்லை. அது பற்றி தெரியாமலயே ஆண்கள் தருவதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதனாலாயே அவை நகை, பணத்துடன் மட்டும் முடிந்து விடுகிறது. என்னை பொறுத்தவரை குரானில் சொன்னபடி, மணமகளான எனக்கு என்ன தேவையோ அதை அவரிடம் கேட்டுப் பெற்றிருக்கிறேன். நான் கொடுத்த பட்டியல், வேறு வேறு பதிப்பகங்கள், அச்சில் இல்லாதவை என கொஞ்சம் வாங்குவதற்கு சிரமாக இருந்தாலும் எப்படியோ தேடி பிடித்து வாங்கி விட்டார் அவர். நான்கைந்து புத்தகங்கள் மட்டும் பதிப்பில் இல்லாததால் வாங்கவில்லை.

பொதுவாகவே இஸ்லாமிய சமுதாயத்தை பிற்போக்காக காட்டும் போக்கும், இஸ்லாமிய பெண்களை அடிமைகளாக நினைத்து பச்சாதாபப்படும் மனநிலையும் இங்கு சினிமாவால், இலக்கியத்தால், இன்னும் சமூகத்தின் பல கூறுகளால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்தெல்லாம் விட்டு விடுதலையாகி நாங்கள் எங்கள் வாழ்வை மிக அக மகிழ்வுடன் தொடங்கியிருக்கிறோம்.

PS : எனக்கான அடையாளமாக, அவ்வளவு நிறைய விருப்பத்துடன் தலைக்கு மேல் ஹிஜாபை அணிந்திருக்கிறேன்.

Post a Comment

0 Comments