தமிழகத்தின் ஒரே பெண் லாரி டிரைவர் என்ற பெருமையுடன் தன்னம்பிக்கையின் மறுபெயராக விளங்குகிறார் ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டியை சேர்ந்த 30 வயது ஜோதிமணி.
இரு குழந்தைகளுக்கு தாயான ஜோதிமணி தனது குடும்பத்துக்கு சொந்தமான லாரியில் இன்று நாட்டின் பல பகுதிகளுக்கும் பாரம் ஏற்றிசெல்கிறார். 2009 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டன்று தனது கணவருக்கு சொந்தமான லாரியை முதன் முதலில் ஓட்ட பயிற்சி எடுத்ததாக கூறிய ஜோதிமணி, தனது ஆர்வத்தை கண்ட கணவரும் அவ்வப்போது லாரியை ஓட்டக்கற்றுக்கொடுத்து வந்தார் என்று மெலிதான சிரிப்புடன் கூறினார்.
தனது சுவையான, சுமையான பயணம் குறித்த அனுபவங்கள் பற்றி ஜோதிமணி மேலும் கூறுகையில்;
இப்படி நாட்கள் கடந்து கொண்டிருந்த போது, எங்கள் லாரியில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த நபர் சில நாட்கள் வேலைக்கு வராமல் இருந்தார். இதனால் நாங்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளானோம். இதையடுத்து எனது கணவருடன் சேர்ந்து நானும் லாரி ஓட்டத்தயாரானேன். முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் எனது கணவருடன் சேர்ந்து ஐதராபாத்துக்கு லாரி ஓட்டிச்சென்றேன்.
தற்போது குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆயத்த ஆடைகளை தனியாகவே ஏற்றிச்செல்கிறேன். அவ்வாறு சென்றுவிட்டு திரும்பும்போது பருத்தி, மரம் மற்றும் இயந்திர பாகங்களை தமிழகத்திற்கு பாரம் ஏற்றிவருவேன். ஒரு சில நேரங்களில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கூட தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளேன். ஏறத்தாழ ஐந்து வருட கால பயண அனுபவங்களில் நான் ஒரே ஒரு முறை மட்டும் விபத்தை சந்தித்துள்ளேன். கடந்த 2012 ஆம் ஆண்டு லாரியின் பிரேக் செயலிழந்ததால், மற்றொரு லாரியுடன் எனது லாரி மோதியது. இதில் அதிஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என்று தனது பயணத்தை விவரித்த ஜோதிமணி சில தினங்களுக்கு முன் தான் சூரத்திற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
ஜோதிமணியின் கணவர் கவுதமன் கூறுகையில், ‘‘லாரி டிரைவரான என்னால் தொடர்ந்து இந்த பணியை செய்ய முடியுமோ... என்ற நிலையை மாற்றி எனக்கு தைரிய மூட்டியவர் என் மனைவி ஜோதிமணி. அவரது மன தைரியத்தால் மற்றொரு லாரியை வாங்கினேன் என்னுடன் கிளீனர் வேலைக்கு வந்து எனக்கு ஒத்தாசையாக இருந்த அவர் பிறகு தனியாகவே ஒரு லாரியை ஓட்டி செல்லும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக மாறி விட்டார். கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால் ஜோதிமணி மனைவியாக கிடைத்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்று கூறினார்.
ஜோதிமணியும் அவரது கணவரும் இவ்வாறு வெளியூர்களுக்கு செல்லும்போது, அவர்களின் குழந்தைகளான 9 வயது மோனிக் சுபாஷ் மற்றும் 7 வயது விஜயபானு ஆகியோரை 78 வயதான பாட்டி சரஸ்வதி கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறார்.
போதுமான வருமானத்தை சம்பாதித்து, சுயமாக ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடங்கும் வரை எனது இந்த பயணம் தொடரும் என்றும் ஜோதிமணி உறுதிபடுத்தியுள்ளார். அவரது வெற்றிப்பயணம் தொடர நாமும் வாழ்த்துவோமா...-MM-
0 Comments