Subscribe Us

header ads

பஜாஜ் பல்சர் என்ஜினை பயன்படுத்தி கார் தயாரித்து மங்களூர் மாணவர்கள் சாதனை: விலை ரூ. 1 லட்சம் தான்



மங்களூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் பஜாஜ் பல்சர் என்ஜினை பயன்படுத்தி கார் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். லிட்டருக்கு 32 கி.மீ செல்லும் என்பதும், விலை 1 லட்ச ரூபாய் என்பதும் இக்காரின் சிறப்பம்சமாகும்.

சாதாரண மனிதருக்கான காரை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அக்கல்லூரி பேராசிரியர் ரௌனக் அகமது, இது குறித்து மேலும் கூறுகையில்;

மங்களூரில் பெரும்பாலான மக்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வரும் வேளையில், இங்கு 6 மாதம் வெயிலும், 6 மாதம் மழையும் பெய்யும். இதனால் மழைக்காலங்களில் இங்குள்ளவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் சிரமப்பட நேரிடுகிறது. இதை தொடர்ந்தே எங்களுக்கு காரை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக மெக்கானிக்கல் பிரிவில் திறமையான பேராசிரியர்களையும், மாணவர்களையும் கொண்டு குழு அமைத்தோம்.

அவர்களின் யோசனைப்படி பைக் ஒன்றின் என்ஜினைக்கொண்டு காரை வடிவமைக்க திட்டமிட்டோம். இந்த திட்டத்தை ஏற்கனவே கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பரீட்சித்து பார்த்துள்ளது. அது சரியாகவும் வேலை செய்தது. எனவே அதே முறையில் செயல்பட நாங்களும் தயாரானோம்.

எங்களது திட்டத்துக்கு பஜாஜ் பல்சரின் என்ஜினை பயன்படுத்த திட்டமிட்டோம். அதன்படி பல்சர் 150 சி.சி. எஞ்ஜின் மற்றும் சில கூடுதல் பாகங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக ஏழைகளுக்கான இந்த புதிய காரை உருவாக்கினோம். சிங்கிள் சிலிண்டரை கொண்டு இயங்குவதால் இந்த காருக்கு ரேடியேட்டர் மற்றும் கூலிங் சிஸ்டம் எதுவும் தேவையில்லை. 280 கிலோ எடை கொண்ட இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லும். ஒரு லிட்டர் பெட்ரோலில் 32 கி.மீ தூரம் வரை பயணம் செய்யமுடியும். தற்போது இருவர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இக்காரை தயாரிக்க எங்களுக்கு ரூ. 50000 தான் செலவானது. எனினும் புதிய பொலிவுடன் கூடுதல் பாகங்களுடன் இக்காரை வடிவமைக்க 1 லட்ச ருபாய் செலவாகும் என்று அகமது தெரிவித்தார்.

மங்களூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த கார் வெள்ளோட்டம் விடப்பட்டதில் அதன் ரிசல்ட் வெற்றிகரமாக இருந்தது என்றும் அகமது கூறியுள்ளார்.

ஏழைகளுக்காக இத்தகைய காரை உருவாக்கிய பியரீஸ் தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர்களையும், மாணவர்களையும் அனைவரும் பாராட்டலாமே...


Post a Comment

0 Comments