Subscribe Us

header ads

நவமணியை வாழவைப்பது முஸ்லிம்களின் கடமை..!

நீண்ட ஓர் ஊடகப்பயணத்தின் பின் நவமணி, நாழிதலாக வெளிவருகின்றது. நாட்டில் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் டசன் கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு தினசரியா என்ற கேள்வியைச் சிலர் எழுப்புவார்கள்.

ஒரு பத்திரிகை வெளிவருவது ஜனநாயகத்தில் தூணாகவுள்ள கருத்துச் சுதந்திரத்தை பலப்படுத்தும் ஒரு முயற்சிசியாகும். நவமணி அதனையே செய்ய முற்படுகின்றது. இந்த நிலையில் எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தாலும் அதனால் நாட்டு மக்களுக்காக நன்மை கிடைக்கின்றது. மக்களுக்கு நம் எண்ணங்களை வெளியிட மற்றொரு களம் கிடைக்கின்றது. அந்தப் பணியையே நவமணி நாளிதழ் செய்­யவுள்ளது.

பத்தொன்பது வருட நீண்ட ஊடகப் பயணத்தின் பின் நவமணி திங்கள் முதல் நாளிதழாக உங்கள் கரங்களில் தவழ்கிறது. கடந்த 19 வருடங்களாக வாரப் பத்திரிகையாகவும்,  தேவையான சந்தர்ப்பங்களில் நடு வாரப் பத்திரிகையாகவும் நவமணி வெளிவந்து அதன் ஊடகப் பணியைச் செய்துள்ளது. நவமணி தினசரியாக வெளிவருவது இலங்கை வாழ் முஸ்லிம்களது ஒரு நீண்ட கனவு.

இலங்கை முஸ்லிம்களது ஊடகப் பாரம்பரியம் 1852 களின் ஆரம்பத்தில் வெளியான லங்காபுரி (இலங்கை செய்தி) என்ற மலாய் மொழிப் பத்திரிகையுடன் ஆரம்பமாகிறது. இலங்கையின் செய்திப் பத்திரிகைக்குரிய சகல இலட்சனங்களுடன் நாட்டில் வெளியான முதலாவது தமிழ் பத்திரிகை தினத்தபால் என்பதாகும். கொழும்பு வாழைத் தோட்டத்தைச் சேர்ந்த மர்ஹும் மீரா மொஹிதீன் என்பவரே இதன் ஆசிரியராவார்.

177 வருடங்களுக்குப் பின்பு முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு நாளிதழாக நவமணி வெளிவருகின்றது. நவமணி முஸ்லிம் சமூக முயற்சியாகவே வெளிவருகின்றது. நவமணியை வெளியிடும் பிரிலங்கா மீடியா லிமிட்டட் எந்தவொரு அரசியல்வாதிக்கோ , தனியாருக்கோ சொந்தமானதல்ல. பதிலாக அரசியல்வாதிகள் மற்றும் தனியார்களது உதவி மற்றும் ஆசீர்வாதத்துடன் இந்தப் பத்திரிகை rமூக முயற்சியாகவே வெளிவருகிறது.

இப்பத்திரிகை முஸ்லிம்களால் நடத்தப்பட்டபோதிலும் இது முஸ்லிம்களுக்காக மட்டுமான பத்திரிகையாக இருக்காது. ஏனைய சமூகங்களையும் அரவணைத்துக் கொண்டே இப்பத்திரிகை பணிபுரியும். குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் குரலாக இப்பத்திரிகை செயற்படும். நாட்டின் அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் குரலாக இப்பத்திரிகை செயற்படும். நீதிக்காக, நியாயத்துக்காக, இன ஐக்கியத்துக்காக, இனங்களுக்கிடையேயான செளஜன்யத்துக்காக, பத்திரிகா தர்மத்தை முழுமையாகப் பேணி செயற்படும் ஒரு நாளிதழாக நவமணி செயற்படும்.

எமது தாய்நாடு புதிய அரசியல் சூழ்நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளை, கடந்த காலங்களில் நிலவிய சுதந்திரமற்ற சூழல் அகன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக்கூடிய புதிய சூழலிலேயே நவமணி அதன் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது என நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

நவமணி பலமான மக்கள் குரலாக செயற்படுவதற்கு வாசகர்களாகிய தங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறது. இதேநேரம் இதன் வளர்ச்சிக்கு வாசகர்களின் ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை பணிவுடன் ஏற்க நவமணி தயாராக இருக்கின்றது.


Post a Comment

0 Comments