Subscribe Us

header ads

ஹிலாரி கிளிண்டன், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.


ஹிலாரி கிளிண்டன், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும்,. ஜனநாயக கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான 67 வயது ஹிலாரி கிளிண்டன் 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஒபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர்.
தான் சார்ந்த ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 2008-ம் ஆண்டே ஹிலாரி முயற்சி மேற்கொண்டார்.
எனினும் அப்போது கட்சியில் நிலவிய பல்முனை போட்டியில் அவருக்கு எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை. (அமெரிக்காவில் கட்சிகள் தங்களது தலைவர்களிடையே போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுகிறவரைத்தான் ஜனாதிபதி தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.)
எனினும், கட்சியில் அவருக்கு ஆதரவு பெருகியதால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி கடந்த 5 ஆண்டுகளாகவே ஹிலாரி தொடர்ந்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலம் முடிவடைய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஹிலாரி கிளிண்டன் ஏப்ரல் 12-ந் தேதி அறிவிப்பார் என்று கூறப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் ஹிலாரி, 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.
இது குறித்து இணையதள வீடியோ பிரசாரத்தில் அவர் பேசும்போது, “நான் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவேன். ஒவ்வொரு நாளும் அமெரிக்கர்களுக்கு ஒரு சாம்பியன் தேவை. அந்த சாம்பியனாக நான் இருக்க விரும்புகிறேன். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக தங்களுடைய வழியில் போராடிக்கொண்டிருக்கும் அமெரிக்கர்கள், தங்களை இன்னும் உச்சமான நிலைக்கு கொண்டு செல்ல முடியும்” என்று குறிப்பிட்டார்.
ஹிலாரி கிளிண்டனின் உதவியாளர் ஜான்பொடேசா கூறுகையில், ஹிலாரியின் பேச்சு அதிகாரப்பூர்வமானது. அவர் நிச்சயம் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சி வேட்பாளர் போட்டியில் இருப்பார் என்றார்.
தேர்தல் முக்கியத்துவம் பெற்ற அயோவா மாகாணத்தில் இருந்து இன்றோ அல்லது நாளையோ, தனது பிரசாரத்தை ஹிலாரி அதிகாரப்பூர்வமாக தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள், இந்த மாகாணத்தில் இருந்துதான் தங்களது பிரசாரத்தை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தனது தேர்தல் பிரசாரத்துக்காக ஹிலாரி அறிமுகப்படுத்திய சிகப்பு அம்புக்குறியுடன் கூடிய நீலநிற ‘ஹெச்’ லோகோ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த லோகோ மருத்துவமனைக்கு செல்ல வழிகாட்டுவது போல் உள்ளது என்றும், இரண்டாம் உலகப்போரின்போது அங்கேரி பாசிச கட்சியின் லோகோ மாதிரி இருக்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இன்னும் சிலர் அம்புக்குறி திசையை மாற்றிக்காட்டுகிறது என்று சமூக வளைத்தளங்களில் கேலி செய்துள்ளனர்.
ஹிலாரி எங்களுடைய புதுமையான லோகோவை திருடிவிட்டார் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் குற்றம்சாட்டி உள்ளது.
எனினும், ஹிலாரியின் புதிய லோகோவுக்கு இணையதளங்களில் பலத்த வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.
 

Post a Comment

0 Comments