பாலியல் நடவடிக்கைகளில் அதிக நாட்டம் கொண்டவர்களின் சொர்க்கமாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் காணப்பட்டது என வெலியமுன குழுவினரின் விசாரணை அறிக்கையை மேற்கோள்காட்டி எக்கனமிக்ஸ் நெக்ஸ்ட் என்ற இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பாலியல் நடவடிக்கைகளில் அதிக நாட்டம் கொண்டவர்களின் சொர்க்கமாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் காணப்பட்டது. உயரதிகாரிகள் தங்களுடைய தேவைகளுக்காக விமானப்பணிப்பெண்களையும், இளம் பெண்களையும் துஸ்பிரயோகம் செய்தனர். இதன் காரணமாக விமானசேவையின் அனைத்து பிரிவுகளிலும் ஓழுக்கமின்மை காணப்பட்டது.
விமானசேவையின் மனித வள பிரிவிற்கான பொறுப்பதிகாரி பிரதீப்கக்குலாவல இவ்வாறான நபர்கள் குறித்து அலட்சியமாக இருந்தார். இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல் என்பது தங்குதடையின்றி இடம்பெற்றது.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றால் சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரங்கள் அவசியம் என குறிப்பிட்ட பிரதீப்கக்குலாவல பாலியல் வல்லுறவை போன்று இதனை நிரூபி;ப்பது கடினம் என குறிப்பிட்டார். இதன் மூலம் அவ்வகையான நடவடிக்கைகளுக்கு மறைமுக அனுமதியை வழங்கினார்.
இவ்வாறான அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது, குறிப்பாக விமானசேவையின் பெண் ஊழியர்கள் பாதிக்கப்படகூடிய நிலையை கருத்தில் கொள்ளும்போது இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது, என வெலியமுன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட பிரதீப்கக்குலாவல குறித்து தவறான நடத்தை மற்றும், தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்ற தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளும் அந்த நீண்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதற்காக இவரும் ஏனைய மூத்த அதிகாரிகளும் விசாரணைகளை எதிர்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க மற்றும் பிரதம நிறைவேற்றுஅதிகாரி ஆகியோரிற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 15வரையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.
இவ்வாறு பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. பாலியல் தொந்தரவுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பெயர் விபரங்களை வெளியிடவேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் பல இள பெண்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு உயர் பதவிகளை பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 67 வயது நிசாந்த விக்கிரமசிங்கவே விமானப்பணிப்பெண்களை தெரிவுசெய்வதில் நேரடியாக ஈடுபட்டார். பரீட்சைகளில் மற்றும் நேர்முகத்த தேர்வுகளில் தகுதிபெறாத பலர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டனர்.
சிலர் விமானசேவைக்கு வெளியே பணியாற்றுவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டனர், எனினும் அவர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியின் மகனிற்கு பணியாற்றிய ஓரு பெண் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜபக்சாக்களின் தோல்விக்கு பின்னர் தான் மீண்டும் விமானசேவையில் பணியாற்ற வந்துள்ளதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ள அந்த பெண் ஸ்ரீலங்கன் எயர்லைன்சும், ஜனாதிபதி செயலகமும் தனக்கு 4.2 மில்லியன் ஊதியம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
தனது பெண் நண்பியுடன் நெருக்கமாக பழகிய முகாமையாளர் ஓருவரை நிசாந்த இடமாற்றியதாகவும்,அவர் தனது நண்பிகளுடன் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அவரிற்கு மூன்று வீடுகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் அவர் இந்த வீடுகளில் வசிக்கவில்லை அவற்றை அவர்வேறு தேவைக்கு பயன்படுத்தினார் எனவும், விமானசேவையின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சந்திரவன்ச தெரிவித்துள்ளார்.இவரிற்கான மாதாந்த சம்பளம் 450.000 ரூபாய்.
பரீட்சைகளில் மற்றும்நேர்முகத் தேர்வுகளில் தகுதிபெறாத போதிலும் தெரிவுசெய்யப்பட்ட பல பெண் ஊழியர்களின் பெயர் விபரங்கள் எங்களிடமுள்ளன. இதனை தற்போதைக்கு பயன்படுத்தபோவதில்லை என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.-GTN-



0 Comments