கடந்த அரசாங்கத்தின் கீழ் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் ஆயிரத்து 470 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி ஒருவரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுனாமி அழிவுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டு வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுனாமி வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்த வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக பலதரப்ப்ட நிர்மாண நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கம் ஒப்பந்தங்களை செய்துகொண்டிருந்தது.
இதன் கீழ் பாதிக்கப்பட்ட பலருக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
எனினும் இத்திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட வீடுகளில் ஒரு வீட்டையாகிலும் இவர்கள் செய்துகொடுக்காமல், ஆயிரத்து 470 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும், காவல்துறை அத்தியட்சகருமான மேவன் சில்வாவின் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களின் கீழ் செயற்பட்டதாகக் கூறப்படும் நிர்மாண நிறுவனங்களின் விலாசங்களாக தெஹிவளை, கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை போலியான விலாசங்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.
அத்துடன் போலியான நிர்மாண நிறுவனங்களின் பெயர்களின் ஊடாகவே இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சந்தேக நபர்களினால் வழங்கப்பட்ட காசோலைகளும் சம்பந்தமில்லாத ஆடைத் தொழிற்சாலைக்குரிய செல்லுபடியற்றவைகள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இதில் தொடர்புபட்டிருக்கும் அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய குறித்த நிறுவனம் திறைசேரியிலிருந்து 65 கோடி ரூபாவினை பெற்றிருப்பதாகவும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.


0 Comments