Subscribe Us

header ads

சிங்கள ராவயவின் முஸ்லிம் விரோத போக்கிற்கு ஷிப்லி பாறூக் கண்டனம்


'சிங்கள ராவய' எனும் பௌத்த கடும்போக்கு அமைப்பு மதகுருவான 'மாகல்கந்தே சுதந்த' முஸ்லிம் பெண்கள் அணிகின்ற நிக்காபினை ஒரு ஆணிற்கு அணிவித்து அந்த உடையினை முற்றாக தலையை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த ஒருவருடன் ஒப்பிட்டுக்காட்டி, முஸ்லிம்களுடைய இஸ்லாமிய உடையாகிய நிக்காபினையும், பர்தாவினையும் முற்றாக மூடிய தலைக்கவசத்தினையும் தடைசெய்ய வேண்டும் என முஸ்லிம்களுடைய அடிப்படை நம்பிக்கையினை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். 

இவ்வாறான செயல்களை மிக வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களிற்கு எதிரான பிரச்சாரம் ஹலால் பிரச்சினைகளில் தொடங்கியது போன்று இந்த அரசாங்கத்தில் நிக்காபில் தொடங்கி விடுமோ என அச்சப்பட வேண்டியுள்ளது.

ஆட்சி மாற்றத்தில் மிகப்பெரிய பங்களிப்பினை முஸ்லிம்கள் செய்திருக்கின்ற இத்தருணத்தில் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் அடிப்படைகளுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படும் போது, அதனை கண்டும் காணாமல் இருப்பது போன்ற நிகழ்வானது முஸ்லிம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்கின்ற செயலாக மாறிவிடும்.

ஆகவே இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் அலட்சியமாக இருந்துவிடாமல் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாது போனால் கடந்த அரசாங்கம் ஆதரித்து வளர்த்தெடுத்த கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனாவைப் போன்று இவ்வியக்கங்கள் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இன முறுகலை தோற்றுவித்து பாரிய அழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே இந்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments