பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க வலியுறுத்தி பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் ‘மிஸ்டு கால்’ பிரச்சாரம் தொடங்கியுள்ளார்.
‘கர்வாப்ஸி’க்கு ஆதரவு அளித்தது உட்பட இந்துத்வா கொள்கையில் தீவிர
ஈடுபாடு கொண்டவரான யோகி ஆதித்ய நாத் தலைமையில் ஹிந்து யுவ வாஹிணி என்ற
அமைப்பு செயல்படுகிறது. பசுவை நாட்டின் தாயாக (ராஷ்ட்ர மாதா) அறிவிக்க
வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
பாஜக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க அக்கட்சி ‘மிஸ்டு கால்’
பிரச்சாரம் மேற் கொண்டது. இந்நிலையில் பாஜகவின் வெற்றியால் கவரப்பட்ட யோகி
ஆதித்யநாத் தலைமையிலான அமைப்பு, தனது பிரச்சாரத்துக்கு பாஜகவின் யுக்தியை
கையாண்டது. பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களின்
கோரிக்கையை ஆதரித்து 07533007511 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்கள்
என்ற அந்த அமைப்பு பிரச்சாரம் செய்தது. முதல்கட்டமாக சோதனை அளவில் உத்தரப்
பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் இந்தப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.
மக்களவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து சில மாநிலங்களின் சட்டப்பேரவைத்
தேர்தல்களிலும் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, பசு பாதுகாப்பு இயக்கத்தை
வலுப்படுத்தி யுள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான அரசு கடந்த மார்ச்
மாதம் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. மாட்டிறைச்சி வைத்திருப்போர்
மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும்
விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியாணாவில் பசு வதை தடை செய்யப்பட்டது.
இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறையும் அபராதமும்
விதிக்கப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.


0 Comments