Subscribe Us

header ads

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்கள் சுமந்து வரும் சேதி




-PAQ Media Unit-
கடல் கடந்து வளரும் புத்தளம் மகனின் மூன்றாவது பிறந்ததின விழாவுக்கு உடன்பிறப்புக்களை வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன். உறவுகளை சந்தித்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேணிக்கொள்ள காத்திருக்கிறேன்.
எனது பெயரை முதலில் தெரிவித்து கொள்கிறேன். Puttalam Association Qatar என்பது எனது பெயர். கடந்த மூன்று வருடமாகவே என்னை எம் சகோதரர்கள் அறிந்திருந்தார்கள், அறிந்திருக்கிறார்கள்.
இஸ்லாமிய வாழ்க்கை முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய முன்மாதிரி நகராக எனது ஊரை கட்டியெழுப்பும்  பணியில் முடியுமான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குதல் என்பதே எனது இலட்சியம் என்பதையும் நீங்கள் அறிந்திருக்குறீர்கள்.
அடிக்கடி சொல்வதெல்லாம் நீங்கள் இல்லாவிட்டால் நானில்லை என்பதுவே. காகாமார்களே, தம்பிமார்களே, வாப்பாமார்களே அடிக்கடி நான் இதனை சொல்கிறேன் என்று என்னை கோபிக்க வேண்டாம். ஒரு சிறு ஞாபகத்திற்கே இதனை சொல்கிறேன்.
கடந்த 2012 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை உங்கள் உதவியால் எனது ஊரிற்காக, எனது தாய்மண்ணிற்காக கல்வி, மருத்துவம், சமூகம் என மூன்று பிரிவுகளாக பிரித்து தொண்டு செய்துக்கொண்டு வருகிறேன்.
கல்வியில் எந்த பாகுபாடும் காட்டியதில்லை நான். வெட்டாளை அசன்குந்தூஸ் பாடசாலை மதிற்சுவரை கட்டி அப்பாடசாலைகளில் படிக்கும் பெண் பிள்ளைகளும் எம் பிள்ளைத்தான் என்றேன், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு புத்தக பைகளும், சப்பாத்துகளும் வழங்கி படிப்புக்கு வறுமை தடையில்லை என்றேன்.
மணல்குன்று அல்-அஷ்ரக் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி கல்வியில் ஊக்கமளித்தேன், சாஹிரா பாடசாலையின் மாணவர்களுக்கு சப்பாத்து கொண்டு அலங்கரித்தேன், கட்டிடத்தை புதுபித்து கல்விக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தினேன்.
மருத்துவத்தில் எமதூரில் எத்தனை எத்தனையோ தேவையுடையோர் இருக்கின்றனர் என்று எனக்கு தெரிகிறது. இருந்தும் என்னால் இயன்றளவிலேயே செய்துக்கொண்டு வருகிறேன்.
கைக்குழந்தையிலிருந்து வயோதிபர்கள் வரை எனது மருத்துவ சேவை தொடர்கிறது. பிறந்து நான்கைந்து மாதங்களே ஆன ஆண் குழந்தை நோயினால் அவதியுற்றவேளை எனது கரம் அவனை தாங்கிப்பிடித்தது. சிறுநீரக நோயினால் பாதிப்புற்ற சகோதரிக்கு எனது கரம் அடைக்கலம் கொடுத்தது.
இருதய நோயினால் பாதிப்புற்ற தந்தையின் கண்ணீரை எனது கரம் கொண்டு துடைத்தேன். மூட்டுவலியினால் அவதியுற்ற தம்பிக்கு கொடுத்துதவினேன். இதனை செய்தேன், இதனை செய்தேன் என்று சொல்லிக்காட்டவில்லை. என்னை போன்று மற்றவர்களும் உதவிகள் செய்ய முன்வரவேண்டும். இன்னும் எமதூரில் தேவைகள் அதிகமாக இருக்கிறது என்பதை கூறி ஊக்கப்படுத்தவே இதை கூற காரணம்.
சமூகத்தில் பல்வேறு பணித்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. சுயத்தொழில் என்றும், ஊடகத்துறை என்றும், திடீர் அனர்த்தங்கள் என்றும், தொழில்பயிற்சி நெறி என்றும், திருமண சேவை என்றும் எனது சேவைகள் விஸ்தரித்து செல்கின்றன.
வறுமை என்று கூறிக்கொண்டிராமல் தனது சொந்த காலில் நிற்க முயற்சி செய்யும் சகோதரர்களுக்கு ஏணியாக இருந்துள்ளேன், எழுத்துத்துறை, ஒலிக்கருவி, படக்கருவி என்பன மூலம் எமதூர் செய்திகள், நிகழ்வுகள், பயான் நிகழ்ச்சிகள், ஜும்ஆ பிரசங்கங்கள் என்பவற்றை சமூக நோக்கில் செய்துவரும் எமதூரின் இணையத்தளங்களை தட்டிக்கொடுத்தேன்.
அண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிப்புற்ற எனது குடும்பங்களுக்கு அன்றைய மதிய,இரவு உணவுப்பொதிகளை வழங்கி அவர்களின் துயரில் பங்குக்கொண்டேன். படிக்க ஆர்வம் இருந்தும் வறுமை தடையாக உள்ள எனது தம்பிமார்களுக்கு தொழில்பயிற்சி நெறிக்கான ஆர்வத்தை ஏற்படுத்தினேன்.
திருமண வயதை அடைந்தும் இன்னும் திருமணம் செய்ய வசதியில்லாத எனது ராத்தாமார்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை நல்கினேன். இவைகள் சொல்லப்படுவதற்கு ஒரே ஒரு காரணமே இருக்கிறது. எனது சகோதரர்கள் தந்த சதகா இவ்வாறுதான் செலவிடப்படுகிறது. எண்ணங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
நான் இவ்வாறன பொது நலன்களை செய்வதற்கு ஒரு சுயநலன் இருக்கிறதுதான். வேறென்றுமில்லை, நாளை மறுமையில் இறைவனிடத்தில் ஒரு திருப்பொருத்தத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், இம்மையில் நாம் அடுத்தவர் முகம் பார்க்கும் போது நாளை மறுமையில் வல்ல இறைவன் எம் முகம் பார்ப்பான் இல்லையா.
இதுமட்டுமல்ல அன்பர்களே! இக் கத்தார் நாட்டில் நான் உங்களுக்காக ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு தெரியுமல்லவா, பிரி விசா என வேலைத்தேடி கத்தாருக்கு வரும் எனது தம்பி, காகாமார்களுக்கு பத்திரிகையில் விளம்பரம் செய்து கொடுப்பதிலிருந்து அவர்களுக்கான வேலைக்கான வழிக்காட்டல், நேர்முகப்பரிட்சைக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என அனைத்து விதமான சேவைகளையும் செய்து வருகிறேன்.
அவர்களின் இருப்பிடங்களுக்கு தேடிச்சென்று அவர்களுடன் பரஸ்பரம் உறவுகளைபேணி வருகிறேன். இங்கு ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் தமிழ் மொழியில் ஆன்மீக ஒன்று கூடலை நடத்துகிறேன். அது போக ஒவ்வொரு பெருநாளையும் முன்னிட்டு பெருநாள் சந்திப்புகளையும், விளையாட்டு போட்டிகளையும் நடத்துகிறேன், அனைத்து அன்பர்களுடனும் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்கிறேன்.
இப்படியே எனது வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டு போகின்ற வேளையிலேயே நான்காவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறேன். மீண்டும் ஒரு நாளில் உங்கள் அனைவரையும் சந்திக்கவிருப்பதில் பேரானந்தம் கொள்கிறேன்.
இவ்விழாவுக்கு வருகை தந்து எனது சேவையை தட்டிக்கொடுக்க வேண்டும்,எனது தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். எனக்கு உங்களது ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்பதுவே எனது அவாவாகும்.
எனது பழைய ஊக்குவிப்பாளர்கள் பிரிந்து புதிய ஊக்குவிப்பாளர்களை காண எத்தனிக்கும் இத்தருவாயில் நீங்களும் இணைவீர்கள் என காத்திருப்புடன் உங்கள் தோழன் PUTTALAM ASSOCIATION QATAR.
ஏப்ரல் மாத கடும் உஷ்ணத்துக்கும் மத்தியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2015.04.17) உங்கள் வரவுக்காக கட்டாரின் பனார் கேட்போர் கூடத்தில் காத்திருக்கிறேன்
கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு – ஊர் பற்று..

Post a Comment

0 Comments