Subscribe Us

header ads

நீதிமன்ற உத்தரவை மீறிய 10 பா.உ, 3 மா.ச.உ, ஞானசார, ஆனந்த தேரர்கள் உள்ளிட்ட 27 பேருக்கு அழைப்பாணை!


 நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் உள்ளிட்ட 27 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய சந்தேகநபர்கள் 27 பேரையும் எதிர்வரும் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார். 

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போது அந்த உத்தரவை மீறி நீதிமன்றை அவமதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதாக கருவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்து கூறியுள்ளனர். 

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, ஜானக பிரியந்த பண்டார, சரத் வீரசேகர, ரொஷான் ரணசிங்க, ஜயந்த கெட்டகொட, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, வீரகுமார திஸாநாயக்க, உதித்த லொக்குபண்டார ஆகியோருக்கும் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண சபை உறுப்பினர்களான உதய கம்மன்பில, ரொஜர் செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வட்டினாபா சோமானந்த, முருந்தெட்டுவே ஆனந்த, மெதகொட அபேதிஸ்ஸ, இத்தேகந்தே சத்தாதிஸ், கலகொட அத்தே ஞானசார ஆகிய தேரர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.


Post a Comment

0 Comments