Subscribe Us

header ads

பிரதமர் மோடியின் கோரிக்கை தேர்தலுக்கு பிறகு பரிசீலிக்கப்படும்: சிறிசேனா அறிவிப்பு


தமிழர் பிரச்சினையை தீர்க்க 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கை, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கவனிக்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் இலங்கை சென்றிருந்தார். அங்கு அவர் பேசுகையில், தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை விரைவில் முழுமையாக அமல்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று பத்திரிகை ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிபர் சிறிசேனா பேசினார். அவர் பேசியதாவது:-

அதிபர் பதவி காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைப்பதற்கான 19-வது அரசியல் சட்ட திருத்தம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

அதன் பிறகு, பாராளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுப்பேன். எனவே, ஏப்ரல் 23-ந் தேதிக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.

அந்த தேர்தலுக்கு பிறகு, ‘தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் கவனிக்கப்படும்.

அதே சமயத்தில், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எனது அரசின் முன்னுரிமை பணிகளில் ஒன்றாக தொடர்ந்து இருக்கும்.

இதுவரை இலங்கைக்கு எதிராக கருதப்பட்ட தமிழர் அமைப்புகள், இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளன. கடந்த வாரம் நான் லண்டனுக்கு சென்றிருந்தபோது, புலம் பெயர்ந்த சில தமிழர் அமைப்பினர் என்னை சந்திக்க வந்தனர். அவர்கள் சிங்கள மொழியில் பேசினர்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எனது அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினர்.

இலங்கை பற்றிய சர்வதேச கருத்தும் மாறி வருகிறது. லண்டனில் என்னை இங்கிலாந்து ராணியும், பிரதமர் டேவிட் கேமரூனும் அன்புடன் வரவேற்றனர். இங்கிலாந்தை கவருவது, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் கவருவதற்கு சமம்.

இனப்பிரச்சினையில் இலங்கைக்கு முன்பு உள்ள சவால்களை நாம் சந்தித்தே ஆக வேண்டும். தேசிய அரசு அமைந்தால், அனைவரும் ஏற்கத்தக்க தீர்வை எட்ட முடியும்.

இப்பிரச்சினையில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதை நாம் உணர வேண்டும். நமது வாழ்நாளில் இன்னொரு போர் வர வேண்டாம் என்று நாம் விரும்பினால், பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஒருமித்த கருத்து உருவாக்க வழி தேட வேண்டும். அதற்கு ஊடகங்களும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும்.

இவ்வாறு சிறிசேனா பேசினார்.

இதற்கிடையே, புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கு ராஜபக்சே அரசால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படக்கூடும் என்று பாராளுமன்றத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா அறிவித்தார்.

Post a Comment

0 Comments