ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நாமல் ராஜபக்சவுக்கு கலாநிதி பட்டத்தை கற்க அனுமதி வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை தெளிவுபடுத்துமாறு பல்கலைக்கழகத்தின் கல்விச் சபை, பட்டப்பின்படிப்பு பீடத்திடம் கோரியுள்ளது.
நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட இந்த அனுமதி சந்தேகத்திற்குரியது என்பதால், கல்விச் சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் கல்விச் சபையின் கடந்த மாதக் கூட்டத்தில் நாமலின் பட்டப்பின்படி முயற்சி குறித்து பேசப்பட்டுள்ளது.
அவருக்கு கலாநிதி பட்டத்திற்கான படிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கியமை தொடர்பில் பல்கலைக்கழகத்திற்குள் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
நாமல் ராஜபக்சவுக்கு கலாநிதி பட்டப்பின்படிப்பை மேற்கொள்வற்கான அனுமதி கோரப்பட்டமை தொடர்பில் கல்விச் சபையில் 2010 ஆம் ஆண்டு ஆராயப்பட்டதுடன் அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர் எம்.ஏ. பட்டத்தை பூர்த்தி செய்திருக்காததால், அதற்கான பதிவை மேற்கொண்டு அதனை பூர்த்தி செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
நாமல் ராஜபக்சவின் எல்.எல்.பி பட்டத்திற்கான சான்றிதழின் நம்பகத்தன்மை குறித்து ஆராய வேண்டும் என கல்விச் சபையின் சிலர் யோசனை முன்வைத்த போதும், குற்றவியல் பிரிவின் தலைவரும் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி என்.எல்,.ஏ கருணாரத்ன அதற்கு தடையேற்படுத்தினார்.
கருணாரத்ன, முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கியமான ஆதரவாளராவார்.
நாமல் ராஜபக்ச, முன்னாள் உபவேந்தரும் குற்றவியல் பிரிவின் பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.டப்ளியூ. ஜெயசுதந்திரவின் மேற்பார்வையின் கீழ் கலாநிதி பட்டப்பின்படிப்புகளை ஆரம்பித்தார்.
கலாநிதி பட்டத்தை படிக்க எல்.எல்.பி பட்டத்துடன் எம்.ஏ. பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விச் சபை உறுப்பினர்கள் வலியுறுத்திய போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.
கலாநிதி பட்டத்தை மேற்கொள்வற்காக கல்விச் சபை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கிய கேள்வி தேர்வை அவர் வெற்றிகரமாக பூர்த்தி செய்ததாக அறிவிக்கப்பட்டதுடன் 2010 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டப்படிப்புக்கான பதிவை மேற்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச, எம்.ஏ. பட்டத்திற்கான மட்டத்தில் இருந்து 2013 ஆம் ஆண்டு கலாநிதி பட்டத்திற்கு உயர்த்தப்பட்டதாக கொழும்பு டெலிகிராப் இணையத்தளம் கூறியுள்ளது.





0 Comments