எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில்
போட்டியிட்டு கூடிய ஆசனங்களை பெற்று எமது அரசாங்கத்தை அமைப்பதற்கான
வியூகங்களை அமைத்துவருகின்றோம் என்று சுதந்திரக் கட்சியின் தேசிய
அமைப்பாளரும் ஐ.ம.சு.மு. வின் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த
தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் குறித்து ஐ.தே.க.
வே பேசிவருகின்றது. நாங்கள் தேசிய அரசாங்கத்துக்கு தயார் இல்லை.
தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கப் பேச்சுக்கு இடமில்லை எமது
கூட்டணியின் பெரும்பான்மை எம்.பி. க்களைக் கொண்ட ஆசனங்களை நாங்கள்
பெற்று ஆட்சியமைப்போம். சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது தேர்தல் பிரசார மேடையில் ஏறுவார்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும்
இணைத்துக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான
நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள
சுசில் பிரேம்ஜயந்த நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி
இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
புதுப்பொலிவுடன்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது புதுப் பொலிவுடன்
செயற்பட்டுவருகின்றது. கட்சியின் யாப்பில் பல திருத்தங்கள்
செய்யப்படவுள்ளன. அத்துடன் கட்சியின் அதிகாரிகள் மட்டத்திலும்
பதவிகள் ரீதியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து
மாற்றங்களுக்கும் கட்சியி்ன் மத்திய குழுவும் அகில இலங்கை மததிய
குழுவும் நிறைவேற்று சபையும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
30 வருடங்கள் கட்சிக்காக
நான் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக வந்துள்ளேன். நான்
1985 ஆம் ஆண்டு முதல் இந்தக் கட்சிக்காக செயற்பட்டுவருகின்றேன்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றிலை சின்னத்தில் நானே பதிவு
செய்தேன். இந்நிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முகம்
கொடுக்க நாங்கள் தயாராகிவிட்டோம்.
தேர்தல் விஞ்ஞாபனம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தலைமையகமாகக்கொண்டு ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்.
முன்னணியின் ஏனைய கட்சிகள் இன்னும் விலகுவதாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தேர்தலில் பெறும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியமைப்பதே
எமது நோக்கமாகும். எமது அரசாங்கம் ஒன்றை நாங்கள் அமைப்போம். எனவே
தற்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில்
ஈடுபட்டுவருகின்றோம்.
100 நாள் திட்டத்துக்கு ஆதரவு
அசராங்கத்தின் 100 நாள் திட்டத்துக்கு ஆதரவளிப்போம். அதில் சில
திருத்தங்களை செய்து ஆதரவளிப்போம். அதில் சில திருத்தங்களை
செய்யவேண்டியுள்ளது. அவற்றை நாங்கள் முன்வைப்போம். இது தொடர்பில்
ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்கக்கோவை
இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள்
பிரதிநிதிகளுக்காக ஒழுக்கக்கோவை ஒன்றை தயாரிக்க நடவடிக்கை
எடுத்துவருகின்றோம். அதனை விரைவில் தயாரித்துவிடுவோம். அதன்
பின்னர் அந்த ஒழுக்கக்கோவையை மீறுகின்றவர்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கட்சியை பலப்படுத்தும்
செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்போம். 160 தேர்தல்
தொகுதிகளிலும் மறுசீரமைப்பை முன்னெடுப்போம். எதிர்வரும் மே
தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: தேர்தலில் கூட்டணியாக களமிறங்குவது உறுதியாகிவிட்டதா?
பதில்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக
போட்டியிடுவோம். இது தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தலைமையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு
வெற்றிபெறுவோம். ஐ.ம. சு.மு. வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே
பிரதான கட்சியாகும். எனவே நாங்கள் தீர்மானங்களை எடுத்து
களமிறங்குவோம்.
கேள்வி: எவ்வாறு வெற்றிபெறுவீர்கள்?
பதில்: கடந்த ஜனாதிபதி தேர்தலில் 22 தேர்தல்
மாவட்டங்களில் நாங்கள் 9 மாவட்ட்களில் வெற்றிபெற்றோம். மைத்திரிபால
சிறிசேன 13 மாவட்டங்களில் வெற்றிபெற்றனர். மூன்று மாவட்டங்களில்
சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். இந்நிலையில் சிறிய
வித்தியாசத்தில் தோல்வியடைந்த மாவட்டங்களை வெற்றிகொள்வோம்.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களை கூட்டமைப்பு வெறறிகொள்ளும்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியினால் 7 மாவட்டங்களையே வெற்றிகொள்ள
முடியும். அந்தவகையில் எங்களின் வெற்றிபெறுவது நாங்களே என்பது
உறுதியாகும்.
மைத்திரி எமது மேடையில்
கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த பிரசார மேடையில் ஏறுவார்?
பதில்: சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் எமது கட்சியின் மேடையில் ஏறுவார்.
கேள்வி: பிரதமர் வேட்பாளர் யார் ?
பதில்: அது தேர்தல் நெருங்கும்போது அறிவிக்கப்படும்.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக போடுமாறு கூறப்படுகின்றதே?
பதில்: அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ தான்
தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா என்பதனை
தீர்மானிக்கவேண்டும். ஆனால் தான் சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பு
ஏற்படும் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி: தேசிய அரசாங்கம் குறித்து பேசப்படுகின்றதே?
பதில்: நாம் அவ்வாறு கூறவில்லை. தேசிய அரசாங்கம்
குறித்து ஐ.தே.க. வே பேசிவருகின்றது. நாங்கள் தேசிய அரசாங்கத்துக்கு
தயார் இல்லை. எமது கூட்டணியின் பெரும்பான்மை எம்.பி. க்களைக் கொண்ட
ஆசனங்களை நாங்கள் பெற்று ஆட்சியமைப்போம்.
கேள்வி: 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நகல் கிடைத்ததா?
பதில்: கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை செய்யவேண்டியுள்ளது. அதனை சமர்ப்பிப்போம்.
கேள்வி: தற்போது எம்.பி். யாக இருக்கும் அனைவருககும் வேட்பு மனு கிடைக்குமா?
பதில்: அதனை வேட்பு மனு சபை தீர்மானிக்கும். ஆனால்
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள்
ஆகமாட்டார்கள். எவ்வாறெனினும் வேட்பு மனு சபை தீர்மானம் எடுக்கும்.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி மைத்திரிபாலவும் ஒரு மேடையில் ஏறுவார்களா?
பதில்: தேர்தலில் பார்க்கலாம். கட்சிக்கு எதிராக
செயற்படமாட்டேன் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தற்போது நாட்டில்
நிர்மாண பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தொழில்வாய்புக்கள்
இழக்கப்பட்டுள்ளன. பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம்.
கேள்வி: தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷ முன்வந்தால் வேட்பு மனு வழங்கப்படுமா?
பதில்: வேட்பு மனு கோரினால் சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு சபை அது தொடர்பில் தீர்மானிக்கும்.
கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தேசிய அரசாங்கம் குறித்து பேசியுள்ளாரே?
பதில்: அது அவர் சுதந்திரக் கட்சியின் தலைவராகுமுன்னர்
கூறிய விடயங்கள். தற்போது அவர் சுதந்திரக் கட்சியின் தலைவர். எனவே தேசிய
அரசாங்கப் பேச்சுக்கு இடமில்லை.
நன்றி : கேசரி


0 Comments