Subscribe Us

header ads

அந்த நாற்பது நிமிடம் – திகில் அனுபவம்

(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)


அவன் அறிந்திருக்கவில்லை அந்த ஒருநொடி பற்றி. கத்தார் நாட்டில் பணிபுரியும் அவன் முன்பு இவ்வாறு இருக்கவில்லை. சோம்பேறித்தனம் அதனோடு மறதிக்குணமும் தொற்றிக்கொண்டது அவனோடு இங்கே. அந்த நாற்பது நிமிடம் அவனுக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது என்றால் தவறில்லை.

வாரத்தில் ஒருநாள் விடுமுறையை கழிக்க தங்குமிடத்திலிருந்து தன் நண்பர்கள் இருப்பிடத்திற்கு செல்ல தயாரான நிலையில் படிக்கட்டுகள் சிரித்துக்கொண்டு வரவேற்க சோம்பேறித்தனத்தால் அவற்றை உதாசீனம் செய்துவிட்டு லிப்டில் (Elevator) ஏறி நின்றுக்கொண்டான் அவன்.

அந்தோ பரிதாபம் லிப்ட் மூன்றாம் மாடி நடுவே சிக்கிக் கொண்டது. அவனது மறதிக்குணம் கைத்தொலைபேசியை எடுத்துவர அனுமதித்து இருக்கவில்லை. திக்கற்ற அவனுக்கு தீ எச்சரிக்கை ஆளி (Fire Alarm Switch) என்ற ஒரே ஒரு வாய்ப்புத்தான் இருந்தது.

வெகுவாக பயந்த அவன் விடாமல் தீ எச்சரிக்கை ஆளியினை அழுத்த சுமார் இருபது நிமிடத்திற்கு பிறகே அவனுக்கு வெளிநபர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தநொடி அவனுக்கு சிறு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவனது பயம் அவனை விட்டு போக மறுத்தது.

உடனடியாக தொலைபேசி அழைப்புகள் பறந்தன நாலாபுறமும். மறு இருபது நிமிடத்தில் கத்தார் நாட்டின் சிவில் பாதுகாப்பு படையினர்கள், வைத்தியர்கள், மற்றும் போலீசார்கள் அனைவரும் அந்த இடத்தில் சங்கமமாகினர். முதலில் அவ் லிப்டை மேலே கீழே போகாது கவசமிட்ட பின்னர் கதவை திறந்து அவனை தூக்கி எடுத்தனர்.

அவன் மைக்கல் ஜாக்சனின் ரசிகன் என்றே நினைக்கிறேன். அதிலிருந்து இறங்கிய கணம் அவனது கை, கால்கள் அவனை அறியாமலே நடனமாட துவங்கியது. வைத்தியர்களின் பூரண பரிசோதனைக்கு பிறகு பழைய நிலைமைக்கு மாறினானவன். போலிசாரின் விசாரணைக்கு பின் இருப்பிடத்திற்கு வந்த அவன் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்கவில்லை.

தனிமை சைத்தானுக்கு பிடித்ததொன்று. அவன் இப்போதெல்லாம் சைத்தானுடன் சேர்வதில்லை. சோம்பேறித்தனமும் கூடவே மறதிக்குணமும் முன்னரைவிட குறைந்து போயுள்ளது. “சொன்னால் புரியாது பட்டு எழுந்தால் தான் புரியும்” என்ற மூத்தோர்கள் சொல் உண்மையானது.

மனிதனுக்கு மறதி இருக்கத்தான் வேண்டும் ஆனாலும் அளவோடு பேணிக்கொள்ள வேண்டும். அதேநேரம் சோம்பேறித்தனம் எமது வாழ்கையில் நுழைய எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது.


நாற்பது நிமிடம் – திக்கற்று – திகில்..  

Post a Comment

0 Comments