எனது நண்பர் சைனுல் ஆப்தீன் யஹ்யா இரு முறை வட மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்து செயலாற்றியவர். கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு உப தலைவராகவும் சில காலங்கள் செயற்பட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்த அவரும், மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ் (மு.கா), ரதாகிருஷ்னன்(மு.கா) ஆகியோரும் அதுல விஜேசிங்க முதலமைச்சராக இருந்த சமயம் கல்வி உட்பட முக்கிய சில விடயப் பரப்புக்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டனர்.
பலவிடுத்தம் அவரையும், சகோ.நியாசையும் இது விடயங்களில் சென்று, சந்திக்கும் வழக்கம் என்னிடம் இருந்தது. அப்போது அதுல-பாயிஸ் எனும் பெயரில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தாகி இம்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் அதுல விஜேசிங்க மாகாண ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.
இவருடனும் மாகாண சபை உறுப்பினர் சகோ. நியாசுடனும் சமூக விடயங்கள், முக்கிய அபிலாஷைகள் குறித்து கருத்தாடல்கள் எமக்கு மத்தியில் பல சந்தர்ப்பங்களில் தொடராக இடம் பெற்றன. இந்தப் பின்னணியிலேயே நானும் நகர சபைத் தேர்தலில் 2006 இல் போட்டியிடும் சந்தர்ப்பம் கிட்டியது.
பின்னர் இடம் பெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் ஆப்தீன் யஹ்யா வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் . அது போல ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது.
-MUHUSI RAHMATHULLAH-


0 Comments