வளர்த்த மகள் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அதை எதிர்ப்பவர்களாகவே பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள். இந்த கூற்றை பறைசாற்றும் விதமாக சீனாவில் மற்றுமொரு கொடூரம் அரங்கேறியுள்ளது.
அங்குள்ள ஹுபெய் மாகாணத்தில், பெற்ற மகளின் காதலையும், அவளது காதலனையும் ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அவளை விலங்குகளை அடைப்பது போல தனியறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
ஏறத்தாழ 6 வருட காலமாக அப்பெண் வீட்டு சிறையில் உள்ள நிலையில், இவ்விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 24 வயதான சாங் குய் என்ற அந்த பெண்ணின் பெற்றோர், பெற்ற மகள் என்று பாராமல் காதலை மறக்கும்படி மிரட்டியுள்ளனர்.
அவர்களின் மிரட்டலில் பயந்துபோன அப்பெண், தாய் - தந்தையரிடம் தனது காதலை மறந்து விட்டதாக கூறினாள்.இருந்த போதிலும் பல முறை வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டாள். ஆனால் கழுகு கண் கொண்ட பெற்றோர், மகள் வெளியேற திட்டமிட்டுள்ளதை தெரிந்து கொண்டு அவளை பூட்டிய அறைக்குள் அடைத்துவிட்டனர்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மகளை பற்றி கேட்ட போது, அவளுக்கு மனநிலை சரியில்லை. ஆகையால் அவளை பாதுகாக்கவே தனியறையில் அடைத்து வைத்துள்ளதாக நா கூசாமல் பொய் பேசியுள்ளனர்.
இந்த கொடுமை குறித்து பேசிய சோ ஜென் என்ற 50 வயது முதியவர் கூறுகையில், அப்பெண்ணின் பெற்றோர் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். ஆகையால் அங்குள்ள யாரும் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது என மிரட்டப்பட்டனர் என்றார்.
அப்பெண் வீட்டிற்குள் இருப்பது பல காலமாகவே அனைவருக்கும் தெரியும். நான் வெளியூரில் வசிக்கிறேன். எப்போதாவது தான் இங்கு வருவேன். எனவே யாருடையை மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன் என்று கூறிய அவர், ஒவ்வொரு புது வருடத்தன்றும் அப்பெண்ணை நான் ரகசியமாக சந்திப்பேன். அவ்வாறு சமீபத்தில் அப்பெண்ணை நான் சந்தித்த போது, எனது கண்கள் கலங்கியது.
வைக்கோல் பொதிகளுக்கு நடுவே போர்வையால் சுற்றப்பட்டு அவள் படுக்கையில் கிடந்தாள். அவளை சுற்றி உணவு சிதறிக்கிடந்தது. அப்போது தான் அவள் துன்பப்பட்டது எல்லாம் போதும் என்று நினைத்தேன். அப்பெண்ணின் நிலையை புகைப்படமாக எடுத்தேன். பெரும் வருத்தத்தில் இருந்த நான் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தேன். பின்னர் அப்புகைப்படங்களை ஆன்-லைனில் வெளியிட்டேன் என்றார்.
அவர் வெளியிட்ட புகைப்படங்களை சீன அரசாங்கம் இணையத்திலிருந்து உடனடியாக நீக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments