(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற போதும், சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் தமிழர் ஒருவர் முதலைமச்சராக இருந்த போது, அதனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களின் முதிர்ச்சியையும், இன ஒற்றுமைக்கான மனம் திறந்த பக்குவத்தையும், தமிழர்களின் தலைமைகள் என்று இன்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிலரிடம் காண முடியாதுள்ளது, சிறுபான்மை இனங்களின் துரதிஸ்டமே.
ஆயுதத் தலைமைகள் குழி தோண்டிப் புதைத்த தமிழ் முஸ்லிம் நல்லுறவையும் சௌஜன்யத்தையும், மீண்டும் துளிர்விடும் போது, வேரோடு சேர்ந்து பிடிங்கி எரியும் பேச்சுக்களை தமிழர் தலைமைகள் பேசுவது, அவர்களின் பெரும்பான்மை ஆதிக்கவாத மனநிலையை மிக தெளிவாக பறைசாற்றுகிறது. இவ்வாறான பேச்சுக்களும் பண்பாடற்ற மொழிகளும், தந்தை செல்வாவின் முகாமிலிருந்து வெளிவருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
முஸ்லிம்களின் தலைமைகளில், தமிழ் முஸ்லிம் நல்லுறவு பற்றிப் பேசும் முற்போக்கு சக்திகளையும் மௌனிக்க செய்யும், பருவமுறாத பேச்சுக்களை தமிழர் தலைமைகள் தவிர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் வடக்கு - கிழக்கு இணைப்பும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் மட்டும் எனும் ஏக இனக்கொள்கை என்பவற்றை முஸ்லிம்களின் மீது திணிக்கும் ஆயுத தலைமைகளின் அடியொற்றிய அரசியலை கைவிட வேண்டும். வடக்கு - கிழக்கு முஸ்லிம்களினதும் தாயகம் என்கின்ற யதார்த்தத்தை ஏற்று, முஸ்லிம்களோடு அரசியல் உறவு கொண்டு தமிழ் பேசும் மாநிலமாக கிழக்கை கட்டியெழுப்ப முன் வரவேண்டும்.
0 Comments