Subscribe Us

header ads

முதலமைச்சர் கத்தரிக்காயை க(ரி)றியாக்கப் போவது யார்..??


தற்போது தேசிய அரசியற் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மாகாண சபை அரசியல் நிலைமைகளும் மாற்றம் பெற ஆரம்பித்துள்ளன.கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது சிறு பான்மை மக்களின் பெரும் பான்மை ஆதரவைக் கொண்ட  முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜ பக்ஸ தலைமையிலான சு.க  ஆகிய மூன்று கட்சிகளும்  மக்களிடையே அதிக செல்வாக்குச் செலுத்தியதன் காரணமாக  யாரினாலும் கிழக்கு மாகாண சபையில் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை தோற்றம் பெற்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு,மகிந்த ராஜ பக்ஸ தலைமையிலான சு.க ஒன்றுடன் ஒன்று ஒட்டா உறவைப் பேணியதன் காரணமாக தேர்தல் நடைபெறும் சம காலத்தில் தனது ஆதரவினைத் தீர்மானிக்கும் மு.கா கிழக்கு மாகாண சபை ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியது.இதன் விளைவாக முஸ்லிம் காங்கிரஸினை என்ன விலை கொடுத்தாவது இரு கட்சிகளும் தன் பக்கம் வளைத்துப் போட முயன்றன.பேரின சிறு குழுக்களால் முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றப்பட்ட செயற்பாடுகளினால் அரசிற்கெதிராக காணப்பட்ட  முஸ்லிம் மக்கள்  மனோ நிலைக்கு ஏதுவாக அரசினைத் தூற்றிப்  பிரச்சாரம் செய்து முஸ்லிம் மக்கள் வாக்குகளினைப் பெற்ற மு.கா அந் நேரத்தில் அரச பங்காளிக்கட்சியாக இருந்தமை,கரையோர மாவட்டம் போன்ற நீண்ட நாள் கோரிக்கைகளினை இச் சந்தர்ப்பத்தில் பெற்ற பேரம் பேசல் சக்தி கொண்டு அரசுடன் இருந்தால் தான் பெற்றுக் கொள்ள முடியும்,அரசுடன் இருந்தாலே சேவைகளினை சுவைத்துக் கொள்ள முடியும் போன்ற காரணிகளினால் முஸ்லிம் மக்கள் மனோ நிலைகள் மகிந்த ராஜ பக்ஸ தலைமையிலான அரசிற்கு எதிராக இருந்த போதும் முஸ்லிம் மக்கள் முடிவினைப் புறக்கணித்து அரசுடன் இணைந்து கொண்டது.இதன் காரணமாகவே இன்று முஸ்லிம்களிடத்தில் அரசியலில் தனக்கென்று ஒரு குறித்த இடத்தைத் தக்க வைத்துள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி கட்சி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.கா அரசினை ஆதரித்தால் தாங்கள் செல்லாக் காசாக மாறிவிடுவோம் என்ற அச்சம்,வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறு பான்மை மக்கள் இலங்கை ஆளும் அரசினை எதிர்க்கிறார்கள் என்ற தோற்றப்பாடு த.தே.கூ இற்கு தேவைப்பட்டமை போன்ற காரணிகளால் மு.கா இனை இரு கரம் கூப்பி முதலமைச்சர் உட்பட ஒரு அமைச்சைத் தவிர அனைத்துப் பதவிகளினையும் தருகிறோம் வாருங்கள் என த.தே.கூ அழைத்திருந்தது.அன்று மு.கா த.தே.கூ உடன் இணைந்து இருந்தால்  இன்று மக்களுக்குச் செய்த ஓரிரு சேவைகளினையாவது செய்திருக்குமா என்பது கேள்விக்குறியே!ஆளும் அரசு ஆளுனரைக் கொண்டு வட மாகாண சபையின் செயற்பாடுகளில் அதிகம் மூக்கை நுழைக்கிறது,அரசு  தாங்கள் எதிரணியாக இருப்பதால் வட மாகாண சபையினைப் புறக்கணிக்கின்றது என இன்று த.தே.கூ புலம்புவது போன்று ஓரிடத்தில் நின்று முஸ்லிம் காங்கிரசும் புலம்பி இருக்க வேண்டிய நிலைதான் தோற்றுவிக்கப்பட்டிருக்கும்.அன்று அனைத்தையும் தருகிறோம் வாருங்கள் என அழைத்த த.தே.கூ இன்றைய சந்தர்ப்பத்தினை தங்களுக்கு  சாதகமாய்ப் பயன்படுத்தி முதலமைச்சினை தாங்கள் பெற்றுக் கொள்ள உறுதி பூண்டுள்ளது.அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மு.கா மீது கொண்ட அன்பினது நோக்கம் எதற்கு என்பதனை அது  இன்று முதலமைச்சர் மீது விடாப்பிடியாக இருக்கும் செயற்பாடு தெளிவாக விளக்குகிறது.இதனை அறியாது த.தே.கூ இற்கு கூஜா தூக்கும் முஸ்லிம் அரசியல் சமூகமும் முஸ்லிம்களில் இருக்கத் தான் செய்கிறார்கள்.மத்திய அமைச்சில் பதவி வேண்டாம் என மறுத்து மக்களிடம் கதாநாயகனாக மாறிய த.தே.கூ மத்திய அமைச்சில் ஒரு அமைச்சுக்குப் பகரமான  முதலமைச்சர் விடயத்தில் விடாப் பிடியாக இருப்பது இதனை வைத்து மிகப் பெரிய காய் நகர்த்தல் ஒன்றிற்கு தயார் ஆகிறது என்பதனைத் தான் சுட்டிக் காட்டுகிறது.த.தே.கூ இனது காய் நகர்த்தல்கள் முற்று முழுதாக  தமிழ் மக்களை மையப்படுத்தி அமைந்திருப்பதே த.தே.கூ இடம் முதலமைச்சு சென்று விடக் கூடாது என முஸ்லிம்கள் கருதும் காரணங்களில் ஒன்று எனலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மு.கா இற்குமிடையிலான இவ் முதலமைச்சர் பதவி மோதல் ஜனாதிபதி மைத்திரிக்கே அதிக அழுத்தத்தைத் வழங்கப்போகிறது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவுடன் இணைந்து மு.கா கிழக்கு மாகாண சபைக்கு தனது ஆதரவினை வழங்கிய போது மு.கா செய்த உடன் படிக்கைகள் யாவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் முன்னே நடைபெற்றது. மு.கா கிழக்கு மாகாண சபை இணைவின் போது செய்து கொண்ட எந்த ஒப்பந்தத்தையும் அவ் அரசு நிறைவேற்றாமல் இருப்பதனை ஜனாதிபதி மைத்திரி நன்கே அறிவார்.கிழக்கு மாகாண சபை ஆதரவின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையியான சு.க உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் முதலமைச்சை மு.கா இடம் ஒப்படைக்க இன்னும் சில நாட்களே உள்ளன.இவ்வாறு மு.கா பாதிக்கப்பட்டு இருக்கையில் முதலமைச்சர் என்ற பதவியினையாவது மு.கா வழங்குவது தான் நியாயமும் கூட.முதலமைச்சை ஜனாதிபதி மைத்திரி மு.கா இற்கு வழங்கத் தயாராக இருக்கின்ற போதும் த.தே.கூ இன் செயற்பாடு அதற்கு முட்டுக் கட்டையாக அமைகின்றது.த.தே.கூ இனைப் புறக்கணித்து தற்போதைய சு.க யும் மு.கா உம் இணைந்தும் ஆட்சி அமைக்க முடியுமாக இருப்பினும் மைத்திரியின் வெற்றியில் தனது பாரிய பங்களிப்பினைச் செய்த த.தே.கூ இனை வெற்றியினது சூடு தனிவதற்கு முன்பே எதிர்ப்பது நியாயமும் அல்ல அரசின் எதிர்க்காலச் செயற்பாடுகளிற்கு உகப்பானதும் அல்ல.மகிந்த ராஜ பக்ஸ த.தே.கூ இனை  வெற்றிலை பாக்கு வைத்து தங்களது பிரச்சனைகளினை உள் நாட்டிலேயே  தீர்த்துக் கொள்ள அழைப்பு விடுத்த போதும் வெளிநாட்டுத் தலையீட்டுடன் முடிவிற்கு கொண்டு வரவே த.தே.கூ விரும்பியது.இவ் அரசுடன் ஓரளவு உறவைப் பேணும் த.தே.கூ இனை மைத்திரி அரசாங்கம் அவ்வளவு சீக்கிரம் எதிர்க்காது மேலும் அரவணைத்து செல்லும் போக்கைக் கடைப்பிடிக்கும் என்ற போதிலும் ஆளும் அரசுடன் எப்போதும் தூரத்தில் நின்று உறவைப் பேன விரும்பும் த.தே.கூ இற்காக மு.கா உறவை மைத்திரி அரசு முறித்துக் கொள்ளவும் முனையாது.அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதே நிலையே தோற்றுவிக்கப்பட உள்ளதால் இம் முடிவு எதிர்கால தேர்தல்களின் போது எழுகின்ற பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமையப் போகிறது.ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்கு சிறு பான்மை மக்களின் பூரண ஆதரவே பிரதான காரணம் என பலராலும் கூறப் படுகின்ற போதும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒரு படி உயர்த்தியே பார்க்கிறார்கள்.இதன் காரணமாக மைத்திரி அரசு தமிழ் மக்களிற்கு முன்னுரிமை வழங்குகிறதா அல்லது முஸ்லிம்களிற்கு முன்னுரிமை வழங்குகிறதா என வெள்ளோட்டம் பார்க்கும் ஒரு செயற்பாடாகக் கூட இச் செயற்பாடு அமையலாம்.

முதலமைச்சை மு.கா விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இன்று இலங்கையில் அமைந்துள்ள ஒன்பது மாகாண சபைகளில் ஒன்றான வட மாகாண சபையினை பெரும் பான்மைப் பலத்துடன்  த.தே.கூ கைப்பற்றி த.தே.கூ இனதும் தமிழ் மக்களினதும் தனித்துவத்தினைப் பேன ஒரு மாகாண சபையினை தனக்கென வைத்துள்ளது.முஸ்லிம்கள் ஆளச் சாத்தியமான ஒரே ஒரு மாகாண சபை என்றால் அது கிழக்கு மாகாண சபையாக இருப்பதால் அதனை முஸ்லிம்களிற்கு வழங்குவதே முஸ்லிம்களின் தனித்துவம் பேண வழி சமைக்கும்.மேலும்,த.தே.கூ அரசுடன் உடன்பாட்டு அணுகு முறையில் செல்லாத போக்கில் திளைத்து இருப்பதால்  த.தே.கூ உடன் முதலமைச்சுப் பதவி இன்றி இணைந்து சென்றால்  தமிழ் மக்களுடன் சேர்ந்து  சேவைகள் அற்ற ஒரு வறட்சியான இருண்ட யுகத்தை நோக்கி முஸ்லிம் மக்களும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.இன்றைய தேசிய அரசியலிலும் சரி கிழக்கு மாகாண சபை அரசியலிலும் சரி ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என்ற நிலைமை இல்லை.இன் நிலைமையே த.தே.கூ இன் விடாப்பிடிக்கான பிரதான காரணமும் கூட.கிழக்கு மாகாண சபையினைப் பொறுத்த மட்டில் 15 முஸ்லிம் உறுப்பினர்கள் ,13 தமிழ்  உறுப்பினர்களும் உள்ளனர். உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள போது  கிழக்கு மாகாண சபையில் எதை வைத்து த.தே.கூ முதலமைச்சைக் கோருகிறது? .த.தே.கூ இனது இச் செயற்பாடு முஸ்லிம்களிற்கெதிரான தெளிவான இனவாதத்தினைத் தான்  காட்டுகிறது.ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த தமிழ் முஸ்லிம் உறவுகள் மீள சீராகி வருகின்ற இன்  நிலையில் இப் பிரச்சனைக்கான தங்கள் பக்க நியாயங்கள் அனைத்தும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டிருப்பதால் தமிழ் முஸ்லிம் உறவினை அரசியலில் மாத்திரம் அல்ல அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்தும் என்பதனை மறுக்க முடியாது.எனவே,இவ் விடயத்தில் தமிழ் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அதிக கரிசனை கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு ஆளுனர்களாக பேரினத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளினை நியமித்த விடயம்  சிறு பான்மை சமூகத்திடையே அதிக வெறுப்பைத் தோற்றுவித்தது.தற்போது கிழக்கு மாகாண ஆளுனராக அஸ்டின் பெர்னாண்டோ ஜனாதிபதி மைத்திரியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலின் பிற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்கு எழுந்த கோசத்தினை விட முஸ்லிம் ஆளுனர்க் கோசமே மிகைத்து இருந்தது.முதலமைச்சு  என்பது  தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு வழங்கப்படுவதால் அது எமது அரசியற் சாதூரியங்களினால் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.ஆனால்,ஆளுநர் என்பது அவ்வாறு அல்ல ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கபடுவது என்பதால் ஜனாதிபதி முஸ்லிம்களினை எந்தளவு கெளரவிக்கின்றார்  என்பது இதிலிருந்தே விளங்கபோகிறது.கிழக்கு மாகாணத்தில் அதிக மக்கள் ஆதரவினைக் கொண்ட  மு.கா  மைத்திரியுடன் இறுதித் தருணத்தில் கை கோர்த்தமையினால் மைத்திரி முஸ்லிம்களினை கெளரவிக்க கிழக்கு ஆளுனரை  நியமிக்க விரும்பினால்  தன் வெற்றிக்கு அதிகம் உழைத்த மு.கா அல்லாத ஒரு முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்கும் சாத்தியமே காணப்பட்டது.ஆளுனராக மு.கா அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டால் அது எங்கே தனது கட்சிக்கு ஆபத்து ஆகி விடுமோ என்பதால் அதனைத் தடுக்க மு.கா தலைமை முயன்றதாக கதைகள் சிலு சிலுத்தன.எம்மை விட்டும் ஆளுனர்ப் பதவி பறி போனமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.மேல் மாகாண ஆளுனராக முஸ்லிம் ஒருவர் இருந்தார்.அதுவும் தற்போது இல்லை.எனவே,கிழக்கு மாகாண முதலமைச்சினையும் முஸ்லிம்கள் இழப்பார்களாக இருந்தால் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் பேணுவது கடினமான ஒரு விடயமாக இருக்கும்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மந்துறை.


நன்றி நவமணி 23-01-2015

Post a Comment

0 Comments