Subscribe Us

header ads

புதிய ஜனாதிபதியின் வருகை,செயற்பாடுகள் பற்றிய ஒரு பார்வை

எக் கட்சியினாலும் வீழ்த்த முடியாதளவு மூன்றில் இரண்டு பெரும் பான்மைப் பலத்துடன்  இலங்கைத் திரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மகிந்த ராஜ பக்ஸவின்  பலத்தினை மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் தவிடு பொடியாக்கி ஆட்சி பீடத்திலிருந்து மகிந்த வெளியேற்றி ஜனாதிபதியாக மைத்திரிப் பால சிறி சேன வெற்றி வாகை சூடி கொண்டார்.இதனை இலங்கை அரசியல் வரலாற்றில் நடைபெற்ற ஒரு அரசியற்  புரட்சி என்று வர்ணிப்பதே பொருத்தமானது.தற்போது நாட்டில் சற்றேனும் யூகிக்க  முடியாத அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மைத்திரியின் வெற்றி பற்றிய பார்வை

தனது அரசியற் பலத்தின் மமதை காரணமாக  தனது செயற்பாடுகளிற்கு யார் எதிராக இருந்தாலும் அவர்களினை  தனது ஆளுமை கொண்டு அடக்கி பதவியினை விட்டும் வெளியேற்றல்,ஒரு பதவியில் உள்ளோர்க்கு தக்க விதத்தில் மரியாதை வழங்காமை,அரசியற் பழிவாங்கல்,மக்கள் கருத்துகளை உள்வாங்காது செயற்படல்,ஊழல்,போதை வஸ்து பாவனை அதிகரிக்க அரசின் செயற்பாடுகள் காரணமாய் அமைந்தமை,சிறு பான்மை மக்களிற்கெதிரான நடவடிக்கைகளினை அரசு கட்டுப் படுத்தத் தவறியமை,சிறு பான்மை இனங்களுக்கெதிரான குழுக்களினை அரசே வழி நடாத்தியது என்ற குற்றச்சாட்டு சிறு பான்மை மக்களிடையே நிலவியமை,யுத்தத்தின் மூலம் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பின் வடுக்கள் தமிழ் மக்கள் மனங்களை விட்டும் அகலாமை,கிறீஸ் மனிதன்,வெள்ளை வேன் போன்ற அரசின் அனுசரணையுடன் அரங்கேறிய செயற்பாடுகள்.ஊடக அடக்கு முறை,குடும்ப ஆட்சி,மூன்றாம் தடவையும் போட்டி இடத் தக்கவாறு அரசியலமைப்பை மாற்றியமை,ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற பிற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்த முடியாது என்று நினைத்திருந்த மக்களிடையே அரசினை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்தமை,சு.க இல் இருந்து பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியை ஆதரித்தமை மக்கள் மனதினில் ஏற்படுத்திய மாற்றம்  போன்ற காரணிகள் பொது வேட்பாளரின் வெற்றியை அதிகம் சாதகமாக்கியது.
இத் தேர்தலினை பொது வேட்பாளர் மைத்திரி தலைமையிலான எதிரணி எதிர்கொள்ள ஒரு கூட்டு உருவாக்கப்பட்டது.எதனையும் எதிர்கொள்ளுமளவு பல் ஆளுமை கொண்டவர்கள் இவ் எதிரணியில் ஒன்று சேர்க்கப்பட்டமையே இக் கூட்டின் சிறப்பம்சமாகும்.அரசு எவ் விதத்தல் தனது செயற்பாட்டை முன்னெடுத்தாலும் இவ் எதிரணி அதனை எதிர்கொள்ளக் கூடியதாக இருந்தது.மேலும்,சிறு சிறு குழுக்கள் பல இக் கூட்டில் இருந்தமையினால் பொது வேட்பாளரின் வெற்றிக்காக பல கோணப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.இவைகளினை எதிர் கொள்ளும் அளவு  மகிந்த ராஜ பக்சவிற்கு வலிமை இருக்கவில்லை.இன்று யார் கட்சி மாறுவார்கள்? கட்சி மாறுபவர்களை  எவ்வாறு தடுக்கலாம்? என்ற சிந்தனைகள்  சு.க முக்கியஸ்தர்களின்  சிந்தனைக் கோலங்களின் பாதைகளினை மாற்றி இருந்தது.

இச் சதுரங்க விளையாட்டின் ஆடுகளத்தில் உறுதியாக நின்று காய்களினை மிகவும் கச்சிதமாக நகர்த்தியவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவாகும்.இவர் வருகை இல்லா விட்டால் இவைகள் அனைத்தும் சாத்தியமாகி இருக்குமா என்பது சந்தேகமே! பொது வேட்பாளராக யாரைப் போடலாம் என பத்திற்கும் மேற்பட்டோரை வைத்துக் கொண்டு ஒரு முடிவிற்கு வர முடியாது  சிந்தித்துக் கொண்டிருந்த வேளை அனைவரும் பொருந்திக் கொள்ளும் விதம் மைத்திரியைக் கொண்டு வந்து அனைவரினது வாயினையும் அடக்கி இருந்தார்.இக் கூட்டு  பொது வேட்பாளராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து பலம் பெற்று விடக் கூடாது என்ற நோக்கோடும்,தேர்தல்களில் அரசு அடைந்து வந்த  தொடர்ச்சியான வீழ்ச்சியினால் இன்னும் தேர்தலினை  காலம் தாழ்த்துவது அவ்வளவு உசிதமானது அல்ல போன்ற பல காரணிகளாலும் இன்னும்  இரண்டு வருடங்கள் ஆட்சி செய்ய முடியுமாக  இருந்தும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலினை முன்னாள் ஜனாதிபதி அறிவித்தார்.இவ்வாறு தனது அணியிலிருந்தே தனக்கெதிராக அம்பெய்து தான் வீழ்த்தப்படுவேன் என சற்றேனும் சிந்தித்திருக்க மாட்டார்.

முஸ்லிம் மக்கள் மனோ நிலைகள் முற்று முழுதாக அரசிற்கு எதிராக இருந்ததன் காரணமாக மு.கா , அ.இ.ம.கா இனை தன்னோடு வைத்திருந்தாலும் மகிந்த ராஜ பக்ஸ  பயனடைந்திருக்கப் போவதில்லை என்ற போதிலும் ஜாதிக ஹெல உருமையினை தன்னோடு வைத்திருந்தால்  ஓரளவு வெற்றி வாய்ப்பைச்  சாதகமாக்கி இருக்கலாம்.ஏனெனில்,பொது வேட்பாளர் வெற்றி பெற்றது நான்கு அரை இலட்சம் வாக்களவில் தான். ஜாதிக ஹெல உருமையவிற்கென்று மூன்று இலட்சம் வாக்குகள் உள்ளன.இதுவே மகிந்த ராஜ பக்ஸவினது வெற்றிக்குப் போதுமானதாக அமைந்திருக்கும்.மேலும்,சிறு பான்மையின மக்களினது  வாக்குகள் தனக்கு கிடைக்காது என நன்கு அறிந்த அரசு இனவாதத்தினைத் தூவி எதிரணிக் கூட்டின்  பெரும் தொகையான வாக்குகளினை இழக்கச் செய்யும் முயற்சியில் களமிறங்கியது.இனவாதத்தினால் கடும் போக்குவாத மக்களின் வாக்குகள் எதிரணிக் கூட்டில் இருந்து வெளிச் செல்லாது பாதுகாப்பதில் ஜாதிக ஹெல உருமய முக்கிய வகி பாகம் வகித்தது.ஜாதிக ஹெல உருமயவை அரசு எதிர்க்க எத்தனிக்கும் போது இவ்வாறு தனக்கெதிராக மைத்திரியால் ஆழமான குழி  வெட்டப்பட்டிருக்கும் என்பதனை அறிந்திருக்க வில்லை.பிற்பட்ட காலப் பகுதியில் என்றால் அரசு ஜாதிக ஹெல உருமயவுடன் ஓரளவு உடன்பாட்டு அனுகுமுறையில் சென்றிருக்கும்.

உள் விடயங்களினை நன்கு ஆராய்ந்து பார்க்காது வெளிப்படையில் பார்க்கும் ஒருவரிற்கு மகிந்த ராஜ பக்ஸ சிறந்த ஆட்சியாளனாய் காட்சி கொடுக்குமளவு அவருடைய ஆட்சி அமைந்திருந்தமையினால் கிராமப் புற மக்கள் அதிகம் அவர் பக்கம் சாய்ந்தமை,இலங்கை மக்கள் ஒழிக்க முடியாது எனக் கருதிய மூன்று தசாப்தகால யுத்தத்தினை எது வித அளுத்தங்களிற்கும் அடிபணியாது முடிவிற்கு கொண்டு வந்ததால் முன்னாள் ஜனாதிபதி  மக்களிடையே ஹீரோவாக சித்தரிக்கப்பட்டிருந்தமை,யுத்தத்தினால் அரசு பெறும் அழுத்தங்களினை அரசு எதிர் கொள்ள பேரின மக்கள் அரசு பக்கம் சாய்ந்ததன் காரணமாக அரசுக்கும் பேரின மக்களிற்குமிடையிலான பிணைப்பை அதிகரிக்கச் செய்தமை,நகரம் கிராமம் பார்க்காது வீதி அபிவிருத்திகளினை மகிந்த ராஜ பக்ஸ தலைமையிலான அரசு செய்திருந்தமை கிராமப் புற மக்களின் மனைங்களை அதிகம் கவரக் காரணமாகியது,மகிந்த ராஜ பக்ஸவினது  வெளிச் செயற்பாடுகளில் காணப்பட்ட  கவர்ச்சி,ஆளுமை போன்றவற்றினால் தன்னை விட்டு 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கான மாகாண சபை உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் மாறிய போதும் மகிந்த ராஜ பக்சவின் நுனி விரலைத்தான் ஆட்டிப் பார்க்க முடிந்திருப்பதானது அவரினது மக்கள் செல்வாக்கை சாதரணமாக எடை போட்டு விட முடியாது என்பதனை கூறி நிற்கிறது.

ஜனாதிபதி மைத்திரி ஆட்சியில் சிந்திக்க வேண்டியவை

தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் தேர்தல்  விஞ்ஞாபனத்தின்  87 ம் பிரிவில் மிருக வதைச் சட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக கூறி உள்ளார்.ஏற்கனவே மிருகவதைச் சட்டம் இலங்கையில் அமுலில் உள்ள போது இதனை ஏன் இங்கே சுட்டிக் காட்ட  வேண்டும் என்பது ஜாதிக ஹெல உறுமயவின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஒன்றா என்றே சிந்திக்கத் தூண்டுகிறது.இது பற்றிய விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சற்று அவதானமாக இருக்க வேண்டும்.மீண்டும் தொகுதி வாரிப் பிரதிநிதித் துவத்தினைக் கொண்டு வர உள்ளதாக கூறி உள்ளார்கள்.தொகுதி வாரித் தேர்தல் முறைமையானது சிறு பான்மை இன மக்களின் பிரதிநிதித்துவத்தினை மிகவும் குறைப்பது மாத்திரமின்றி வேறு சில எதிர் விளைவுகளினையும் தோற்று விக்கக்கூடியது.இதன் மூலம் சிறு கட்சிகளின் செல்வாக்குகள் அதிகம் மக்களிடையே செல்வாக்குச் செலுத்துவது குறைக்கப்பட்டு தனி நபர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவர்.தனி நபர்கள் அதிகம் ஆதிக்கம்  செலுத்துவது சிறு பான்மையினரின் உரிமைகள் வென்றெடுத்தல் சம்பந்தமான விடயங்களுக்கு அவ்வளவு உசிதமானது அல்ல.ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறும் அளவு வாக்கு இல்லாத இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் பெரும் பான்மை இனத்தவர்களுக்கே வாக்களிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.இத் தேர்தலில் எவ்வாறு சிறு பான்மையினர்  ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மிளிந்தார்களோ அதனைப் போன்று குறித்த உறுப்பினர் தெரிவிலும் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வர்.இதன் காரணமாக அழகிய இன சக வாழ்விற்கு இது வழி கோலும் என்பதனையும் மறுக்க முடியாது.முற்று முழுதாக தொகுதி வாரித் தேர்தல் முறைமையினைக் கொண்டு வராது குறித்த வீத உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலம் சிறு பான்மை இனப் பிரதிநிதித்துவங்களை ஈடு செய்வதற்கான ஒரு வாய்ப்பு உள்ள போதும் பேரினக் கட்சிகள் சிறு பான்மை பிரதிநிதித்துவ விடயத்தில் எந்தளவு அக்கரை காட்டும் என்பதனை சற்று சிந்திக்க வேண்டி உள்ளது.அவ்வாறு பேரினக் கட்சிகளினால் பிரதிநிதித்துவங்கள் வழங்கப்பட்டாலும் அது தங்களுக்குச் சார்பானவர்களுக்கே வழங்கப்படும் என்பதால் அவ்வாறு வரும் பிரதிநிதித்துவங்கள் மக்கள் தேர்ந்தெடுப்பது போன்று ஆரோக்கியமானதாக  அமையவும் போவதில்லை.இவ்வாறு பொது வேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனம்  சிறு தெளிவின்மையுடன் காணப்பட  முஸ்லிம் அரசியற் கட்சிகள் ஆரம்பத்தில் பொது வேட்பாளருடன் கைகோர்க்காமையும் பிரதான  காரணங்களில் ஒன்று  எனலாம்.தற்போது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன் சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையில் இனவாதக்கருத்துக்களைத்  தூவியவர்கள் வரிசையில் இவரும் உள்ளமை சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு உருதிப்படுத்தப்படுமா என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கிறது.பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக தற்கால அரசு வாக்குறுதி அளித்துள்ளது.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கபட்டால் இலங்கை பூராகவும் வாழ்கின்ற மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியை விட ஒரு தொகுதியில் அல்லது மாவட்டத்தில் வெற்றி பெறுகின்ற ஒருவரான பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படவுள்ள பிரதமர் அதிக அதிகாரத்தினை தன் வசம் வைத்திருப்பது ஏற்கத்தகுந்தது அல்ல.மேலும்,தற்போது அமைக்கபட்டுள்ள இடைக்கால அரசில் விரும்பியவர்கள் விரும்பிய அமைச்சினைப் பெறும் அளவு செல்வாக்குச்  செலுத்துவதும்  நாட்டின் எதிர்கால நலனிற்கு உகந்தது அல்ல.நிறைவேற்று  அதிகாரம் நீக்கப்படுமாக இருந்தால் ஜனாதிபதி எவ் விதமான அமைச்சுப் பதவிகளினை ஏற்கமாட்டார்.பாதுகாப்பு அமைச்சு போன்ற முக்கிய அமைச்சுக்கள் இலங்கை பூராகவும் வாழ்கின்ற மக்களால்  தேர்ந்தெடுக்கப்படுகின்ற  ஜனாதிபதியிடம் இருப்பதே பொருத்தமானதாகும்.எனினும்,நாட்டில்  நீதி,பாதுகாப்பு போன்றவற்றில் நிறைவேற்று அதிகாரத்தின் செல்வாக்குக் காரணமாக சுயாதீனத்தை இழக்கும் தன்மைகள் நீக்கப்பட வேண்டும் என்பதனை மறுக்க முடியாது.பாராளுமன்றத்திலும் நிர்வாகத்துறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.பொது வேட்பாளரும் முற்று முழுதாக நிறைவேற்று அதிகாரத்தினை நீக்க மாட்டார் என்பதுடன் வெளி நாட்டுத் தொடர்பு,நாட்டினதும் முப்படைகளினதும் தலைவராகவும் ஜனாதிபதி இருப்பார் என்றே நம்பப்டுகிறது.அமைச்சுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறி இருந்த போதும் அமைச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட வில்லை.

நடந்தது,நடக்கப் போவது என்ன..??

எப்போது மைத்திரி பொது வேட்பாளராக மக்கள் மத்தியில் தோன்றினாரோ அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசியல் சுவாரசியமானதாகவே அமைந்துள்ளது.இன்னும் கட்சித் தாவல்கள் ஓயவுமில்லை ஒரு ஸ்திரமான நிலையினை அடையவும் இல்லை.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இத் தேர்தலில் அதிக தாக்கம் செலுத்தினாலும் அடிமட்டத்திற்கு இவர்களினைச் சேர்க்கும் அளவு அடிமட்டம் போராளிகள் இவர்களுக்கு இல்லாத காரணத்தினால் பொது வேட்பாளரினை  இலங்கை பூராகவும் அடிமட்டங்களிற்கு கொண்டு சேர்க்கும் பணியினை ஐ.தே.க யே கையில் எடுத்தது.முதலில் எவர் காலைப் பிடித்தாவது மிகப் பெரிய ஆட்சிப் பலத்துடன் ஆட்சி செய்த மகிந்த ராஜ பக்ஸவினை வீழ்த்த வேண்டும்.அது தன்னால் தனித்து முடியாது என்பதனை ஐ.தே.க நன்கே அறியும்.ஆளும் அரசினை வீழ்த்தினால் மைத்திரிக்கென்று தனியான கட்சி இல்லாத காரணத்தினாலும் தனக்கென்று ஒரு கட்சி உருவாக்கினாலும் சரத் பொன்சேகா போன்று அல்லது அதை விட சற்று பெரிதான கட்சியினை உருவாக்குவார்.அது  தனது கட்சிக்கு சவாலாக வருவது சாத்தியமற்ற ஒன்று.எனவே,மகிந்தவை வீழ்த்தினால் தானே  காட்டிற்கு ராஜா என்ற கணக்கைப் போட்டிருந்தது..ஜனாதிபதியை வீழ்த்துவதன் சாதகத் தன்மையினை உறுதிப்படுத்தவே பொது வேட்பாளராக மைத்திரியைக் களமிறக்க  ஐ.தே.க உடன்பட்டது.மேலும்,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் பிரதமரின் அதிகாரங்கள்  ஜனாதிபதியை மிஞ்சப் போகிறது.குறித்த சில பகுதிகள் நீக்கப்பட்டாலும் அது பிரதமரின் அதிகாரத்தை வலுக்கச் செய்யப்போகிறது.பிரதமராக ஐ.தே.க தலைவரினையும் நியமிக்க மைத்திரி அப்போது ஏற்றுக்கொண்டிருந்தார்.இவைகளே ஐ.தே.க இனது தேர்தல் வியூகம் எனலாம்.

ஜனாதிபதித் தேர்தலில்  67 சதவீதத்தைப் பெற்று இலங்கை வரலாற்றில் இடம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,47 வருட அரசியல் அனுபவம் கொண்ட மைத்திரிப் பாலவினையும்  இவர்கள் சாதாரணமாக எடை போட்டிருக்கக் கூடாது.என்ன பாடுபட்டாவது இவ்  ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் வெற்றி வாகை சூடினால் ,ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கூட்டணியில் இணைந்த பலரும்,இன்னும் மகிந்த வெற்றி பெறுவார் என்ற விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் அவருடன் இணைந்திருக்கும்  பலரும்  இணைந்து பாரிய கட்சியாக தங்களது கட்சியினை உருவாக்கினால் ஐ.தே.க இற்கு அடிபணிந்து செல்ல வேண்டிய தேவை இருக்காது.மேலும்,பொதுக் கூட்டணி ஒப்பந்தத்தில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுகின்ற  கட்சிக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.எனவே,எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலே அதிக உறுப்பினர்களைக் கைப்பற்றினால் பிரதமரையும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்காதுஎன்ற கணக்கைப் போட்டுக் காய் நகர்த்தியது..

களத்தில் நின்று போராடிய மைத்திரி,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எவ்வாறு மகிந்த ராஜ பக்சவினை துரத்த காய் நகர்த்தினார்களோ அதை விட பல மடங்கு தனது கட்சியான சு.க இனைப் பாதுகாப்பதில் அதிக அக்கரை காட்டினார்கள்.தற்போது அவர்கள் நினைத்ததற்கும் ஒரு படி மேல் சென்று சு.க இனது தலமைத்துவத்தினையும் மிக இலகுவாக கைப் பற்றிக் கொண்டார்கள்.இனி மீண்டும் ஆளும் கட்சியாகவும்  எதிர்க் கட்சியாகவும்  இருக்கப் போவது மைத்திரி தலைமையிலான சு.க யும் ரணில் தலைமையிலான  ஐ.தே.க யும் தான்.எதிர் வருகின்ற பராளுமன்றத் தேர்தல்  இவர்கள் இருவருக்குமான முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது.ஐ.தே.க ஆனது சு.க இனை விட அதிக ஆசனங்களைக் கைபற்றாமல் விட்டால் பிரதமர் பதவியினை இழக்க வேண்டி நேரிடலாம்.அவ்வாறு பிரதமர்ப் பதவி வழங்கப் பட்டாலும் சு.க இற்கு அடங்கி ஆட்சி செய்ய வேண்டிய ஒரு நிலைமை இருக்கும்.ஆனால்,மைத்திரி தோற்றால் தற்போதைய இடைக்கால அரசு போன்று சற்று ஐ.தே.க இற்கு அடங்கிச் செல்ல வேண்டும்.எனினும்,அவருடைய  பதவியினை எதுவும் செய்ய இயலாது.


இன்று கட்சி மாறிய பலரும் எதிர்க் கூட்டணியில் இணைந்தார்களே தவிர ஐ.தே.க இல் இணையவில்லை.எதிர்க் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளராக  யாரை நிறுத்தலாம்  என்பதில் பல நாட்களாக நீடித்த பிரச்சனை மைத்திரியின் வருகையோடு சிறிதேனும் சல சலப்பு இன்றி முடிவிற்கு வந்தமை மைத்திரியின் திறமையினை சமூகத்திற்கு புடை போட்டுக்  காட்டியது.ஐ.தே.க மிகப் பெரிய கட்சியாகவும்,பொது வேட்பாளரின் வெற்றியிலும் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்த கட்சியாக  இருந்த போதும் தனது கட்சியினைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தாதது மாத்திரமில்லாமல் சின்னத்தையும் விட்டுக் கொடுத்தது இவ் வெற்றியில் ஐ.தே.க இனது பங்களிப்பை முற்றாக மறைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கவினை கதாநாயகியாகவும் மைத்திரியை கதாநாயகனாகவும்  சித்தரித்தது.இப்போது மைத்திரியின் நூறு நாள் விஞ்சாசபனம் சரியாக நடைமுறைப் படுத்தப்படுமாக இருந்தால் மீண்டும் மீண்டும் மைத்திரியே கதாநாயகனாக  மக்களிடையே சித்தரிக்கப்படுவார்.­­­இன்று முஸ்லிம்கள் மைத்திரிக்கோ,ஐ.தே.க இற்கோ ஆதரவளித்தார்கள் என்பதை விட மஹிந்தையை தோற்கடிக்க வாக்களித்தார்கள் என்பதே மிகப் பெரிய உண்மை.இன்று ஒரு வித்தியாசமான ஆட்சியைத் தான் முஸ்லிம்கள் எதிர்பாத்துள்ளார்கள்.இச் சந்தர்ப்பத்தில் மைத்திரி தலைமையிலான சு.க முஸ்லிம்களிடையே அதிக  செல்வாக்குச் செலுத்த வாய்ப்ப்புள்ளது.மைத்திரி நடு நிலமையாக செயற்படுவார் என நம்பப்படுகின்ற போதும் ஐ.தே.க தனது தன் மானத்தினைக் காத்துக் கொள்ள மைத்திரியினை தங்களது  மேடையில் ஏற்றாது என்றே கூறப்படுகிறது.ஆனால்,சு.க அவ்வாறு இருக்க முடியாது.தனது கட்சித் தலைவரினை  மேடை ஏற்றித் தான் ஆக வேண்டும்.மைத்திரி தனது நேரடி ஆதரவை வழங்காவிட்டாலும் மறைமுக ஆதரவினை நிச்சயம் சு.க இற்கு வழங்குவார்.எனவே,மைத்திரியின் அனைத்துப் புகழும் சு.க இனையே சேரப்போகின்து.இவைகளினை வைத்து ஒப்பு நோக்கும் போது பேரின மிதக்கும் வாக்குகள்,முஸ்லிம் மக்கள் வாக்குகள்,தங்களது கட்சிக்கு உரித்தான வாக்குகளோடு  சு.க எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பலம்  பொருந்திய கட்சிய மாறுவதற்கே அதிக சாத்தியம் உள்ளது.சு.க இன் யாப்பினை மாற்றி சு.க இன் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் மைத்திரி கையளிக்க முயற்சிப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.சு.க இன் தலைமைத்துவத்தினை ஜனாதிபதி மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளதால் முன்னாள் ஜனாதிபதி தோற்றுள்ளார் என்பது நிரூபணமாகின்ற போதும்  ஜனாதிபதி மைத்திரி அதிக அழுத்தங்களிற்கு உட்பட்டுள்ளார் என்பதும் உண்மை.ஆரம்பகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பேச்சுக்கள் சு.க இனைக் கைப்பற்றி மத்திரியிடம் ஒப்படைப்பதாகவே இருந்தது.எனவே,சு.க இன் தலைமைத்துவம் சந்திரிக்காவினை அடைந்தால் அது மைத்திரி எதிர் கொள்ளும் சவால்களினை எதிர் கொள்ளவே எனலாம்.

இன்று மீண்டும் சு.க இனை ஜனாதிபதி மைத்திரி கையில் எடுத்துள்ளமை சிறு பான்மை அரசியல் வாதிகளிடையே மகிந்த ராஜ பக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டோரிற்கு மக்களிடையே ஏற்படவிருந்த தாக்கத்தை குறைத்துள்ளது.மகிந்த ராஜ பக்சவினை மக்களிடையே கொண்டு சேர்க்க கையில் எடுத்த வன் முறைகள்.அவர்களினது மகிந்த சார்பான நிறுவல்கள் மக்களிடையே அவர்களின் மீதான அதீத வெறுப்பிற்கு  காரணமாகியுள்ளதால் நிச்சயம் இது அவர்களினது எதிர்கால அரசியலைக் கேள்விக்குறியாக்கும்.அரசுடன் இருந்த காலப்பகுதியில் அவர்கள் செய்த சேவைகள் அவர்கள் ஊர் வாக்குகளினைத் தக்க வைக்க உதவும் என்ற போதும் முன்னர் போன்று வெளியூர் வாக்குகளை இவர்கள் சிறிதேனும் எதிர்பார்க்க முடியாது.இன்று மகிந்த ராஜ பக்சவிற்கு ஆதரவளித்த எல்லா சிறு பான்மை  அரசியல் வாதிகள் ஊரினதும்,தொகுதியினதும் பெரும் பான்மை வாக்குகள் எதிர்க்கூட்டனிக்கு சென்றுள்ளது மாத்திரமல்லாமல் அவர்களினது பாராளுமன்ற நுளைவிற்கு பங்களிப்புச் செய்த பல முக்கியஸ்தர்கள் அவர்களினை விட்டும் பிரிந்துள்ளார்கள்.இச் சந்தர்ப்பத்தில் பிரிந்தோர் மீண்டும் இவர்களோடு இணைவார்கள்  என்பது சாத்தியமற்ற ஒன்று.பொது வேட்பாளர் சு.க இனது தலைமைத்துவத்தினைப் பொறுப் பேற்றுள்ளதால் மீண்டும் நேரடியாக சு.க இற்கு இவ்வாறு மாறியவர்கள் ஆதரவளித்தால் தனது பழைய வீட்டினையே வந்தாக வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு மாறியவர்கள் ஒன்று ஐ.தே.க இற்கு ஆதரவளிக்க வேண்டும் அல்லது மு.கா இற்கு ஆதரவளிக்க வேண்டும். இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பகுதிகளில் உள்ள ஐ.தே.க போராளிகள் அதிக பிரபலமில்லாமல் இருப்பதால் மைத்திரியின் வெற்றிக்காக மாறிய பலரும் மு.கா இல் மாறக்கூடிய வாய்ப்புள்ளது.இன்று மு.கா மீது மக்கள் முன் வைத்த  விமர்சனங்கலாலேயே மு.கா மக்களிடையே அதிகம் பிரபலமடைந்துள்ளது.பதவியினைத் தூக்கி எரிந்து விட்டு வந்துள்ளமை என்ற தோற்றப்பாடு இன்னும் மக்களிடையே பிரபலத்தைத் உயர்த்தியுள்ளது.இந்தக் கோணத்தில் பார்க்கின்ற போதும் மு.கா எழுச்சியடையவே அதிக வாய்ப்புள்ளது.

மீண்டும் மூக்குடைந்தது பொது பல சேனா

சிறு பான்மையின மக்கள் தாங்கள் முயன்றது நிறைவேறிய  அதீத வெற்றிக் களிப்பில் இருந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இன வாதத்தினைத் தூண்டி இன்னும் சொற்ப காலத்தினுள் வர உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரி தலைமையிலான இடைக்கால அரசு பெரும் பான்மையினைப்  பெறுவதனைத் தடுக்கும் நோக்கில் பொது பல செனாவினை மீண்டும் களத்தில் இறக்கியது.மைத்திரியின் வெற்றியினைத் தோடர்ந்து மக்களிடம் மன்னிப்புக் கோரிய பொது பல சேனா அதனை மறுத்து மீண்டும் இன வாதக் கருத்துக்களை தூவ ஆரம்பித்தது.ஆனால்,அரசு செய்த ஊழல்கள்,மகிந்த ராஜ பக்சவின் குடும்பப் பாதுகாப்பு,சு.க இனை விட்டும் அதிக உறுப்பினர்கள் சென்றமை  இவரினை மைத்திரியின் முன் நின்று போராட முடியாது போனது.சு.க கட்சியினை ஒப்படைக்கும் நிலைக்கும் தள்ளியது.பொது பல சேனா மீண்டும் மூக்குடைந்து தனது சேனாக்களை சுருட்டிக் கொண்டுள்ளது.

முஸ்லிம்கள் அடைந்த பயன்கள்

இத் தேர்தலினைத் தொடர்ந்து பொது பல சேனா மிகவும் நலிவடைத்து கொண்டது.சில சிறு பான்மை அரசியல் வாதிகளின் உண்மை முகங்கள் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டது.முஸ்லிம் அரசியற் தலைமைகள் ஓரிடத்தில் ஒன்று கூட்டப்பட்டுள்ளது.சிறு பான்மையினரின் தேவையை பெறும் பான்மை அரசியல் சமூகம் உணர்ந்துள்ளமை எதிர் காலத்தில் முஸ்லிம்களிட்கு அதிகம் நன்மை பயக்கும்.

இத் தேர்தல் தரும் படிப்பினைகள்

அரசியல் வாதிகள் கருத்துக்களுக்கு மக்கள் அடிபணியும் நிலையே இத் தனை காலமும் நடைபெற்று வந்தது.ஆனால் இத் தேர்தலில்  முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல் வாதிகலினை தங்கள் முடிவுகளிற்கு அடி பணியும் நிலைக்குத் தள்ளியுள்ளமை அரசியல் வாதிகளிடையே அச்சத்தைத் தோற்று வித்துள்ளது.மகிந்த ராஜ பக்ஸ அதிக கட்சிகளினைச் சிதறுண்டு போகச் செய்தவர்.இன்று அவரின் கட்சியினைச் சிதைத்து அவரினை ஆட்சி பீடத்தினை விட்டு அகற்றி உள்ளார்கள்.தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்ற பழமொழியை இச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது  மிகவும் பொருத்தமானது.மூன்றில் இரண்டு பெரும் பான்மை பாராளுமன்றத்தில் தக்க வைப்பதென்பது சாதாரணமான ஒன்றல்ல.ஆனால்,பல ஆண்டு காலாமாக மூன்றில் இரண்டு பெரும் பான்மையும் மிஞ்சிய பலத்துடன் நடைபயின்று கொண்டிருந்த ஒருவர் அவ்வாறான நிலையிலேயே மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் இருந்த இடம் கூட தெரியாது சிதைக்கப்பட்டுள்ளார்.இது ஆட்சியாளர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.பொது பல சேனாவின் செயற்பாடுகளைக் கொண்டு தன்னை ஸ்திரப்படுத்த அரசு முயற்சித்தது.வன்முறையாளர்களை எம் மக்களும் விரும்பமாட்டார்கள் என்பதனை அரசு இதன் விளைவால் சிதைக்கப்பட்டுள்ளமை அழகாக எடுத்துக் காட்டுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

இலங்கை.

Post a Comment

0 Comments