கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காலையில் கண்விழித்தவர்கள், தாம் அப்படியொரு பேரழிவை எதிர்கொள்ளப் போகின்றோம் என்று அறிந்திருக்கமாட்டார்கள். ஆம்.. இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி என்ற அந்த ஆழிப்பேரலை அரக்கன் உருவெடுத்து, இலட்சக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் தனது இராட்சத பசிக்கு இரையாக்கிக்கொண்டு, மீண்டும் கடலுக்குள் சென்று ஓய்வெடுத்துக்கொண்டான். ஓய்ந்தது என்னவோ சுனாமி என்ற பேரலை… ஆனால் அது விட்டுச்சென்ற சோக வடுக்களோ ஏராளம். கண்களை ஈரமாக்கும் நெஞ்சை பிசைந்தெடுக்கும் அந்த துயர்மிகு சம்பவத்தின் 10ஆம் ஆண்டு நிறைவுநாள் இன்றாகும். உலகையே உலுக்கிப்போட்ட அந்த நாளை ஒருகணம் மீட்டிப் பார்ப்போம்.
கடந்த 2004ஆம் ஆண்டு இதே நாளில், நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்கு கொண்டுசெல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. சுமார் 20 அடி உயரத்திற்கு உருவெடுத்த சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், பல இலட்சம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 220 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டனன. சுனாமியின் தாக்கத்தால் அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கை. இங்கு சுமார் 35,322 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 516,150 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் சுமார் 119,562 கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்தன. வடக்கு-கிழக்கு உள்ளிட்ட கடற்கரையோரப் பிரதேசங்களே அதிகளவான அழிவுகளை சந்தித்தன.
யுத்தத்தின் தாக்கத்தால் அவதியுற்றிருந்த வட கிழக்கு மக்களின் வாழ்க்கையில், சுனாமி இன்னுமொரு பேரிடியாய் விழுந்தது. அந்த மக்களின் பயிர் நிலங்கள், ஆடு மாடுகள், மீனவர்களின் மீன்பிடி படகுகள் என எல்லாமே நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் அம்மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாய் காணப்பட்டது. எங்குமே வெட்டவெளியாய், திரும்பிய பக்கமெல்லாம் அழுகுரலாய் அன்றைய நாள் அமைந்தது. பார்க்கும் இடமெல்லாம் இறந்த உடல்களும் கட்டிட இடிபாடுகளுமாய் காட்சியளித்தது. இறந்த மனிதர்களின் உடல்களை மரக்கட்டைகளை அடுக்குவது போல அடுக்கி, பலநூற்றுக் கணக்கான பிணங்களை இராட்சத குழிகளை வெட்டி ஒன்றாக புதைத்தனர்.
உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, பலர் அங்கவீனர்களாகி, பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஏன்.. சிலர் பைத்தியமாகியும் உள்ளனர். யுத்தத்தால் ஏற்கெனவே வீட்டை இழந்து, உறவுகளை இழந்து அகதி முகாம்களின் வாழ்ந்த மக்களை சுனாமி ஆட்டிப்படைத்தது மட்டுமன்றி, சுனாமிக்கு பின்னர் வடக்கில் பெய்த பேய் மழை காரணமாக அங்குள்ள முகாமொன்று முற்றாக பாதிக்கப்பட்டது. பல குடியிருப்புக்ள் மற்றும் முகாம்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால், அந்த மக்கள் உண்ண உணவின்றி உறங்குவதற்கு இடமின்றி இராப்பகலாய் கண்விழித்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த நாட்கள் பல.
சுனாமி எனும்போது, கூடவே நினைவுக்கு வருவதுதான் சுனாமிக் குழந்தை. பிறந்து 67 நாட்களே ஆன குழந்தையொன்று, அன்றைய தினம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. குறித்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி 81 பெற்றோர்கள் கல்முனை வைத்தியசாலையை முற்றுகையிட்டனர். பின்னர் அக்குழந்தை மரபணு பரிசோனைக்காக கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர், அதாவது 2005ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி குழந்தையின் உண்மையான பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. 81 பெற்றோர்கள் அக் குழந்தைக்காக போராடியதால் அக்குழந்தை ‘Baby 81′ என அழைக்கப்பட்டது.
குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிப்பவர்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே சுனாமி பேரழிவு இருந்து வருகிறது. அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாமல் பலர் தவிக்க, பாதிக்கப்பட்ட பலரை தத்தெடுத்த தொண்டு நிறுவனங்கள், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர போராடிக்கொண்டிருக்கின்றன.
சுனாமியை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன. சுனாமி தொடர்பான கருத்தரங்குகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் 10 வருடங்களாகியும் சுனாமி மீள்கட்டுமான பணிகள் இன்னும் பூர்த்திசெய்யப்படாத நிலையிலேயே இருக்கின்றன.
உலகில் ஏற்பட்ட பாரிய இயற்கை அழிவுகளில் ஒன்றாக சுனாமி கருதப்படுகிறது. இத்தனை துன்பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்திச் சென்ற சுனாமி போன்று, இன்னொரு பேரழிவு எங்கும் ஏற்படாமலிருக்க இன்றைய நாளில் பிரார்த்திப்போம்.



0 Comments