நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதியாக தெரிவு செய்யப்பட்டால், அந்த பதவியை உயர் நீதிமன்றத்தின் ஊடாக ரத்து செய்ய முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்தின் போது, சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, போலியான ஆவணங்களை வெளியிடல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடல் என்பன 83ஆவது குற்றவியல் சட்டத்தின்படி குற்றமாகும். அத்துடன் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரமானது, இலங்கையின் 452ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
இந்த குற்றச்சாட்டுகளின்படி மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படினும் அவரை உயர் நீதிமன்றத்தினூடாக பதவியிலிருந்து நீக்கலாம் என சரத் என் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போலி ஒப்பந்ததத்தை தயாரித்து வெளியிட்டதன் ஊடாக தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments