புதிய அரசாங்கத்தின் மலர்ச்சி தமிழ் மக்களுக்கு விடிவையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுக்கும். அடுத்த ஆண்டே சிறுபான்மை மக்களுக்கு உண்மையான சுதந்திரம் என தெரிவிக்கும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மைத்திரியால் எட்டப்படும். அதற்கு நான் உத்தரவாதம் வழங்குகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கூட்டணியொன்றினை உருவாக்கிக் கொடுத்துள்ளேன். இனி இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது இலக்கினை நோக்கி பயணிக்க வேண்டும். நாம் ஆரம்பத்தில் இருந்தே சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆளும் தரப்பினருக்கு பல சந்தர்ப்பங்களில் அவர்கள் விடும் தவறினை சுட்டிக் காட்டினேன். ஜனாதிபதியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசினேன். அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களை சந்தித்தேன். ஆனால் இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் சர்வாதிகார ஆட்சியினை தக்கவைக்க வேண்டும் என்பதுவே. எனவே பொது மக்கள் அனைவரும் எதிர்க்கும் ஆட்சியினை அரசு நடாத்த நினைக்கின்றது. எனவே இந்த அரசுக்கு எதிராக நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என தீர்மானித்தேன். எனவே எனது முயற்சி இன்று பாதி வெற்றி கண்டுவிட்டது. நாட்டில் தூய்மையான ஆட்சியினை அமைக்க சரியான தலைமைத்துவத்தின் கீழ் சகல உறுப்பினர்களையும் ஒன்று திரட்டி பொது எதிரணியினை உருவாக்கி விட்டோம். இனி ஒவ்வொரு நாளும் எமது வெற்றியினை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
கேள்வி: பொது எதிரணியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் என்ன நடவடிக்கை உள்ளது?
பதில்: எமது பிரதான எதிர்ப்பார்ப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிப்பது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதே நாட்டின் முக்கால்வாசி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். நாட்டில் சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 30 வருடங்களாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் வடக்கில் இராணுவ அடக்கு முறைகள் பொருளாதார சிக்கல்கள் நில அபகரிப்புகள் என பல சிக்கல்களுக்கு இன்றுவரை முகம் கொடுத்து வருகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் நிறைவேற்று முறைமையின் சர்வதிகாரத்தன்மையே. எனவே அதை அழிக்க சகலரும் ஒன்றிணைவது நாட்டின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினை ஏற்படுத்தி விடும். அதே போல் 17 ஆவது திருத்தச் சட்டத்தினை மீளவும் உருவாக்குவது நாட்டில் சுயாதீன தன்மையினை ஏற்படுத்தி விடும். எனவே எல்லா வகையிலும் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையிலேயே எமது கொள்கைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி :இந்த புதிய கூட்டணி தனது வாக்குறுதியை காப்பாற்றும் என்பதில் என்ன உறுதித்தன்மை உள்ளது?
பதில் : தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் ஒரு விடுதலை தேவைப்படுகின்றது. அதற்கு முழு நாட்டு மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். புதிய அரசாங்கத்தினை அமைக்கும் எமது கூட்டணியில் தமிழ் மக்களுக்கு விடிவினையும் சுதந்திரத்தினையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளையும் சலுகைகளையும் இழந்து தனித்து விட்டனர். அவற்றினை நிச்சயம் வென்றெடுக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை விரும்பும் ஜனநாயகத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டணியே எம்முடன் கைகோர்த்துள்ளது. எனவே மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அதிகாரப் பகிர்வு விடயம் மட்டும் அல்லாது சிறுபான்மை மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும். மத விடயங்களிலும் மொழி விடயங்களிலும் சமத்துவம் ஏற்படுத்தப்படும். இதனையே நாம் வலியுறுத்தி வருகின்றோம். எனவே புதிய ஆட்சியில் அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கும். தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என நான் உறுதியளிக்கின்றேன். எனவே வார்த்தையை நம்பி சிறுபான்மை மக்கள் வாக்களியுங்கள் எனவும் குறிப்பிட்டார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments