வரும் ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி
தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சும், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பும், பொதுவான ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழைத்து, தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார். அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. எனினும், அரசதரப்பில் இருந்து அதற்குச் சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி, அமைச்சர் பசில் ராஜபக்ச
தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சுக்கும்
இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெறவில்லை.
அதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களையும், நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் நேற்று கொழும்புக்கு அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம். நேற்றுக்காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 4 மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது. இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ்சும் பொது நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இரு கட்சிகளும் இன்னமும் தமது முடிவை அறிவிக்கவில்லை.
அதேவேளை, இரு கட்சிகளும், கடந்த முறை பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்தன.
இம்முறை பொதுவேட்பளரை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
முன்வைத்த கரையோர முஸ்லிம் மாவட்டக் கோரிக்கையை மைத்திரிபால சிறிசேனவும்,
ரணில் விக்கிரமசிங்கவும் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் பொது நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன.
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments