ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று நான் பதவிக்கு வந்தால், எனது பதவிக்காலம் ஒரு தடவையாக மாத்திரமே இருக்கும் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 அல்லது 5 வருடங்களாகவே உள்ளது. அதன்படி எமது நாட்டிலும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைத்து, நானும் ஒரு தடவைக்கு மேல் பதவி வகிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
தேசிய ஐக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு வர்த்தக கண்காட்சி மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் சமூக ஒன்றுகூடலின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எனது ஆட்சியில், வறுமை ஒழிப்பிற்கு அடுத்தபடியாகவே நாட்டின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தப்படும். நாட்டின் அபிவிருத்திக்காக செய்யப்படும் வீதிகளின் அபிவிருத்தியும் ஓங்கிவளரும் கட்டிடங்களும் மக்களின் பசிக்கு தீர்வாக அமையாது. எனவே முதலில் மக்களின் பசிப்பட்டினியை தீர்த்து அதன் பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments