Subscribe Us

header ads

மைத்ரியை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்: பிரதமர்

மைத்ரிபால சிறிசேன நூறு நாட்களில் எதனையும் சாதித்து விடப்போவதில்லை. இதனால் மக்கள் அவரை நம்பி ஏமாற்றமடையத் தேவையில்லை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.

கெலிஓயா, கலுகமுவ பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகமொன்றைத் திறந்துவைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்;ந்து உரையாற்றிய பிரதமர்,

"அரசாங்கம் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு காணிகளை வழங்கியிருந்தது. ஆனால் காடுகளை அழிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இத்தகைய காணிகளில் இடம்பெயர்ந்த  உடமைகளை இழந்த குடும்பங்களைக் குடியயேற்றுவதால்  அரசாங்கம் அதனை  அனுமதித்தது. அத்துடன் அழிந்த முஸ்லிம்களின் பள்ளிவாசல்களைக் கட்டிக்கொடுத்தோம்.

மேலும் நான் பதினொரு நாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொடுத்தேன். முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும். எமது அரசாங்கத்தில் இருந்து  அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியேறி  எதிரணிக்குச் சென்றுள்ளார். அவருக்கு அரசாங்கம் பல வழிகளிலும் உதவிகளைச் செய்திருந்தது. ஏன் சென்றீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன்.

ஆனால் அவர் அதற்குப் பதில் தெரிவிக்கவில்லை. அவருக்குப் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அரசாங்கம் ஒரு இனத்திற்கு அல்லது மதத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. முஸ்லிம்களுக்கெதிராக கடந்த காலங்களில் சிலர் செயற்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசாங்கம் இத்தகைய சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் நடந்து கொண்டது.

ஆனால் மைத்ரிபாலவின் ஆட்சியில் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ரிசாத் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அவருக்குப் பிரச்சினைகள் இருந்தால் போராடியிருக்க முடியும். எனக்குப் பிரச்சினைகள் இருந்தால் நானும் போராடியிருப்பேன். ஆனால் அதனை செய்யாது கட்சி மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமைச்சர் ரிசாத் பதியுந்தீனுக்காக எமது பாராளுமன்ற உறுப்பினரொருவரை  ராஜினாமா செய்ய வைத்து பாராளுமன்ற உறுப்பினரொருவரை வழங்கினோம். ஆனால் நடந்தது என்ன? நாட்டில் அபிவிருத்திகளைத் தொடர்ந்து முன்னெடுக்க சகலரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க  வேண்டும். நாடு பிளவுபடுவதைத் தடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர வேண்டும். நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது விசுவாசம் வைத்துள்ளனர்" என்றார்.

Post a Comment

0 Comments