ஆர்ப்பரிக்கும் அலையுடன்
முழங்கிக் கொண்டிருக்கும்
சமுத்திரத் தாயே!
யுத்தம் மென்று
துப்பிய சக்கைகளாய்
ஒடுங்கிப்போன
மானுடக் குலத்தினை
நீயும் ஒருதரம்
விழுங்கித் துப்பிவிட்டு
மௌனமாய் மீண்டும்
ஆர்ப்பரிக்கின்றாயே!
சமுத்திரத் தாயாக
தாலாட்டுப் பாடிய நீ
சுனாமிப் பேரலையாக – எம்
உயிர்களைக் குடித்தது ஏன்
அடங்கிவிட்டதா – உன்
மானுடப் பசி
மீண்டும் எங்களை
சமுத்திரத் தாயாக
தாலாட்ட வருவாயா?
போதும் உன்
ஆக்ரோஷ வருகையும்
உயிர்களின் வேட்டையும்
வேட்கை இல்லையா – உனக்குன்
வேட்டையை நினைக்கையில்
மீண்டும் நீ
வருவாயோவென
பீதியில் நடுங்கிடும் - இந்த
மானுடப் பேதையர்க்கு
அமைதி கொடுப்பாயா?
மழலையர் முதியோர்
வேறுபாடு ஏதுமின்றி
இழந்த எம் உறவுகளை
எப்படி நாம்
மீளக் காண்போம்.
தூண்டி விட்ட நீயோ
தூங்கிக் கொண்டிருக்கின்றாய்
தூண்டப்பட்ட நாமிங்கு
தூண்டிலிட்டால்போல் துடிக்கிறோம்
உன் மடி தேடியும்
உன் தாலாட்டு கேட்டும்
சுட்டிக் குழந்தைகளாய் - நாம்
குட்டித் தூக்கம் காண வேண்டும்
இன்னிசைச் கீதத்துடன்
மெல்லிய பனிச் சாரலுடன்
மிருதுவாய் மேனிதடவி
மெதுவாகத் தூங்கவிடு
எய்தவனிருக்கையில்
அம்பை ஏன் நோகவேண்டும்
ஆக்கியவன் தான் அழிக்கிறான்
பொறுத்துத்தானே ஆகவேண்டும்
பத்தாண்டு நிறைவிலும் - இழப்பை
ஈடுசெய்ய முடியவில்லை
இரு கரம் ஏந்துகிறோம் - இறைவா
எங்களைக் காப்பாற்று
இதயங்கள் நடு நடுங்க
நரம்புகள் துடி துடிக்க
கண்ணீர் வடிந்தே – எங்கள்
கன்னங்கள் காய்ந்துவிட்டது
தூக்கமின்றி எம்
இமைகளும் விறைத்துவிட்டது
காத்திரமானவனே – எங்களைக்
காத்திடு றஹ்மானே!
நபீஸா எம். மபாஸ்
கல்முனை


0 Comments