(உதடுகளால் வாசிக்காமல் உள்ளங்களால் வாசியுங்கள் என் உணர்வுகள் புரியும்)
மனிதனுக்கு பிறப்பும் இறப்பும்
ஒரே வழிதான்
அவன் வாழும் வாழ்க்கைதான் பலவழி
அது காட்டும் பலவலி…..
சமூகம் எனக்கு வைத்த செல்லப் பேர் “அகதி”
ஆம் அகதி தான்
குணத்தாலல்ல
இடத்தால், பணத்தால்
நான் ஓர் அகதி….
அழகிய மழைக்காலம் அன்று
இயற்கை கூட முன்கூட்டியே வரவிருக்கும் துயரம் எண்ணி அழுதது.
பிறந்த ஊரை விட்டே வெளியேற
ஒருநாள் அவகாசம்….
என்ன செய்வர் என் அப்பாவி மக்கள்??
உடுத்திய துணியோடு
ஊரைவிட்டே வெளியேற துணிந்தது உடல்கள்.
உலகை விட்டே சென்றுவிட எண்ணியது உள்ளங்கள்….
தரையால் பிரயாணிக்க கூட
தடை போட்டான் புலியன்.
கடல் தாய் அழைத்தாள
என் வயிற்றில் மிதித்து விட்டு
போ மகனே என்று…..
ஒரு படகு ஆனால் அதில்
ஒன்பது குடும்பம்
கால் வைக்கவே பற்றாத இடம்
என்ன செய்ய??
இறைவன் நாட்டமாச்சே ஏறித்தான் ஆக வேண்டும் படகில்…
மழைகூட அன்று என் மக்களைக் குட்டியது
அழுதார்கள், அலறினார்கள்
ஆனால் அவர்களது கண்ணீரை எவரும் அறியவில்லை
ஏனென்றால் மழைத்துளிகள் கரைத்து விட்டன…..
தொடங்கியது ஹிஜ்ரத்
தொடங்கி போது கையிலிருந்த பிள்ளை முடிந்த பின் கடலில்
தாயைத் தேடி பிள்ளை
மனைவியைத் தேடி கணவன்
தம்பியைத் தேடி அண்ணன்
ஞாபகமூட்டியது மஹ்ஷரை
வரவேற்றது புத்தளம்
அன்றுதான் தொடங்கியது
புத்தளம்-மன்னார் இரத்த உறவு
உலகமே வெறுத்த என் மக்களை
கண்ணீர் கொண்டு
கட்டியணைத்தார்கள்
ஆறுதல் வார்த்தை கூட ஆடம்பரமாக தெரிந்தது……
குழந்தையைத் தத்தெடுப்பது போல் குடும்பங்களையும, கிராமங்களையும் தத்தெடுத்தனர்
சிறு குடிசை
சின்னாபின்னமான மக்கள்
தன் கண்ணீரைத் தாமே துடைத்தனர்
உடுத்திய துணி கிழிந்தால் கூட
யாரிடம் கேட்பது???
பள்ளி சென்றால் அகதி
பாதையில் சென்றால் அகதி
வேலைக்கு சென்றால் அகதி
வியாபாரம் செய்தால் அகதி
வீட்டிலும் அகதி
முழு நாட்டிலும் அகதி
வடக்கில் பிறந்தது என் குற்றமா??
உன் பிறப்பும் வடக்கில் இருந்திருந்தால்
உன் கதியும் உன் பட்டமும் இதுவாகத்தான் இருக்கும்.
ஆனால் உனக்கு அந்த வலிகள் தேவையில்லை சகோதரா!
பட்டது எம்மோடு முடியட்டும்….
அகதியானதில் பெருமை எனக்கு.
இறைவன் தன் சோதனைகளைக் கொண்டு சோதிக்க
என்னையும் ஒருவனாக
தெரிவு செய்தானே
நான் பாக்கிசாலி
மரணம் வரை நன்றி சொல்ல வேண்டும்
இறைவனுக்கும்
என் புத்தளத்து இரத்தங்களுக்கும்…
ஆக்கம்:
அலி மொஹமட் அனீஸ்
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகம்.


0 Comments