Subscribe Us

header ads

புத்தளத்தில் உதயமாகும் புதிய அரசியல் கலாசாரம். சம்பிரதாய அரசியலிலிருந்து சமூக அரசியலை நோக்கி...

புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் Puttalam District Political Awareness Forum (PPAF) ஒரு வருட பூர்த்தியும் பேராளர் மாநாடும் 2014.09.19 ஆம் திகதி புத்தளம், நூமான் மண்டபத்தில் நடைபெற்றது. சிரேஷ்ட பொறியியலாளர் பி.எம்.எம். ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் சமய அறிஞர்கள், கல்விமான்கள், இளைஞர்க் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 700 பேர்வரை கலந்துகொண்டனர்.


வரவேற்புரையை நிகழ்த்திய பி.எம்.எம். ஜிப்ரி, புத்தளம் தேர்தல் தொகுதி இழந்துநிற்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தி அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தினார். பேராளர் மாநாட்டின் நோக்கத்தையும் விவரித்தார்.

A.W.M. Azmath
சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் (1947) முதல் இன்று வரையிலான புத்தளத்தின் அரசியல் வரலாற்றைப் புள்ளி விவரங்களுடன் A.W.M. அஸ்மத் விவரித்தார். தொகுதிவாரி தேர்தல் முறையில் பெற்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் 1989 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார வாக்கெடுப்புத் தேர்தலின் பின் புத்தளம் தேர்தல் பிரிவில் போட்டியிட்ட அபேட்சகர்கள் பெற்ற விருப்பு வாக்கு வித்தியாசங்களையும் மேற்கோள் காட்டிய அவர், ஒவ்வொரு தேர்தலிலும் கையாளப்பட்ட பல்வேறு உபாயங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெற்றுத்தரவில்லை என்பதையும் தரவுகளின் அடிப்படையில் நிறுவினார்.

M.H.M. Shifak
ஆசிரியர் M.H.M. சிபாக் PPAF ஒரு வருட காலமாக மேற்கொண்டுவரும் அரசியல் விழிப்புணர்வு செயற்பாடுகளையும் கடந்தகால நிகழ்வுகள், அடைவுகளையும் படங்களைக் காட்சிப்படுத்திக் கூறினார். PPAF உருவாக்கும் அரசியல் கலாச்சாரம் அமையும் வடிவத்தைக் கூறிய அவர், அதில் சாதி, மத, சார்பு, கட்சி வேறுபாடின்றி புத்தளம் தொகுதியின் அனைத்து மக்களையும் ஒன்றினைப்பதின் மூலம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படும் எனக் கூறினார்.

M.F. Rinshad Ahmed
PPAF இன் கட்டமைப்பை M.F. ரின்சாத் அஹமத் விளக்கினார். அதன் தூர நோக்கு, பணிக் கூற்று, பெறுமானங்களை விவரித்த அவர், PPAF இன் கட்டமைப்பு பொதுச் சபை, செயற்குழு, ஷூரா சபை என்ற ஒன்றுடனொன்று இணைந்த மூன்று சபைகளைக்கொண்டது என விளக்கினார். புத்தளம் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கல்பிட்டி, முந்தல், வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட புத்தளம் மாவட்டத்தில் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்களை உள்ளடக்கியதாக பொதுச் சபை உருவாகுமென்றும் மஷூரா சபை சகல இன மக்களும் அங்கம் வகிக்கும் கலந்தாலோசனை மன்றமாக விளங்கும் என்றும், விசேட தேவைகளின்போது துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை மஷூரா சபை பெற்றுக்கொள்ளும் விரிந்ததன்மை கொண்டது என்றும் கூறினார்.

M.F.M. Mushrif
மாநாட்டின் உறுதி விரிவுரை M.F.M. முஷ்ரிப் நிகழ்த்தினார். PPAF எதிர்கால நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் வழிமுறைகளை விளக்கிய அவர், நேரடியாகவும் சமூக ஊடகங்களிலும் PPAF செயற்பணிகள் சம்பந்தமாகத் தொடுக்கப்பட்ட சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

P.M.M. Jifry
PPAF நடவடிக்கைகளுக்கான நிதியத்தின் தேவை தலைவரினால் கூறப்பட்ட போது பலரும் முன்வந்து (கையிலிருந்த) பணத்தை வழங்கினர். மேலும் பலர் நிதியன்பளிப்புப் படிவத்தில் தமது பங்களிப்புத் தொகையினை எழுதிக்கொடுத்தனர்.

மாநாட்டில் கலந்துகொண்ட வாலிபர் ஒருவர் (வயது 21) கூறினார், PPAF இன்னுமொரு சுயேற்சைக் குழு என தவறாக நினைத் திருந்தேன். புத்தளத்தின் வாக்குகளைப் பிரித்து விடுவார்களோ என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் இது மக்களை ஒற்றுமைப் படுத்தும் அமைப்பென்பதை புரிந்துகொண்டேன்”.

தொகுப்பு: Hisham Hussain

படங்கள்: Mansoor Mahir, Mohamed Azmath

நன்றி: The Puttalam Times 

பேராளர் பதிவின் போது...

Post a Comment

0 Comments