சிங்கள பௌத்தர்களின் எழுச்சியை தடுப்பதற்கு முஸ்லிம்
அடிப்படைவாதிகளும் அரச மற்றும் எதிர்த்தரப்புக்களில் உள்ள சில
சக்திகளும் இணைந்து பொதுபலசேனா மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை
சுமத்துவதாக குற்றம் சாட்டும் அதன் நிர்வாகச் செயலாளர் டிலந்த
விதானகே, வெளிநாடுகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அரசாங்கத்தை
கவிழ்க்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்
தெரிவித்தார்.
இது தொடர்பாக டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கமவில் பொசன் தினத்தன்று பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதற்கும்
பள்ளிவாசலிலிருந்து கற்களை வீசியது உட்பட அனைத்திற்கும் பொது
பல சேனா மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
அப்படியென்றால் பெற்றோல் குண்டுகள் எங்கிருந்து அளுத்கமவிற்கு
வந்தன? அதன் பின்னணி என்ன? எல்லாவற்றிற்கும் பொது பல சேனாவை
குற்றம் சொல்பவர்கள் இது பற்றி ஏன் தேடிப் பார்ப்பதில்லை?
சிங்கள பௌத்தர்களின் எழுச்சியை தடுத்து, அரசாங்கத்தை நெருக்கடியில்
தள்ளி, அரசை கவிழ்க்கும் சர்வதேச சதித்திட்டத்தை, பணம்
வாங்கிக்கொண்டு முஸ்லிம் அடிப்படைவாதிகளும் அரசுக்குள்ளும்
எதிர்க்கட்சிக்குள்ளும் இருக்கும் சில சதிகாரர்கள் இவ்வாறான
வன்முறைகளைத் தூண்டுகின்றனர்.
எமது ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு கூறுகின்றனர். ஞானசார தேரர் செய்த
தவறென்ன? இதுவரையில் எந்தவிதமான முறைப்பாடுகளும் பொலிஸில் பதிவு
செய்யப்படவில்லை.
முறைப்பாடுகள் இல்லாது எப்படி ஒருவரை கைதுசெய்வது? எனவே, இதன்
பயங்கரத்தை அரசாங்கம் கவனத்திலே கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்
அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனவே, உண்மையான
குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். அனைத்து
குற்றக்கணக்குகளும் எமது கணக்கிலேயே வரவு வைக்கப்படும் நிலைமை உருவாகும்
என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.


0 Comments