-Dr. மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
இநத
நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜயினதும் சமூகத்தினதும் பாதுகாப்பிற்கும்
இருப்பிற்கும் அரசங்கமே பொறுப்புக் கூறல் வேண்டும் இனத்தின் மொழியின்
மதத்தின் பெயரால் எந்த வொரு காட்டுமிராண்டியும் கும்பலும் உத்தியோகப் பற்று
அற்ற போலிசாராகவோ படைகளாகவோ சட்டத்தை கையில் எடுத்து காட்டு தர்பார்
நடத்துவதனை எவரும் அனுமதிக்கப் போவதில்லை.
அளுத்கம
தர்கா நகர், பேருவல ,துந்துவ,வெளிப்பன்ன, அம்பேபிடிய,
செனவத்த,வெளிபிடிய,பானதுர போன்ற இடங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட
காடைத்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்களின் அரங்கேரங்களுக்குப் முன்னரும்
பின்னரும் இடம்பெறுகின்ற நகர்வுகள் நிகழ்வுகளில் இருந்து சகலரும் கற்றுக்
கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன, அதேவேளை சமூகத்தின் எல்லா
அங்கங்களும் பரஸ்பரம் ஒத்துழைப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டிய
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டில் அடுத்த சமூகங்களை விட எந்த
விதத்திலும் குறைவில்லாத சம உரிமையும் அந்தஸ்த்தும் முஸ்லிம்களுக்கு
இருக்கின்றன, இந்த நாடு இங்கு வாழும் சகலருக்கும் சொந்தமானது, முஸ்லிம்களை
இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்த விரும்பும் தீய சக்திகள் தவறிழைத்துக்
கொண்டிருக்கின்றார்கள், இந்த நாட்டின் சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு
சுயாதிபத்தியம் சமாதான சகவாழ்வு பொருளாதார சுபீட்சம் என்பவற்றிற்கு
முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் பாரிய பங்களிப்புக்களை செய்துள்ளதோடு
விலையையும் செலுத்தியுள்ளார்கள்.
தேசப்பற்றுடன் வாழும் முஸ்லிம்களுக்கெதிரான
வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் இந்த தீய சக்திகள் யாவும் பிராந்திய
மற்றும் சர்வதேச சக்திகளிடம் தேசத்தின் ஒருமைப்பாட்டையும் சமாதான
சகவாழ்வையும் சுயாதிபத்தியத்தையும் பொருளாதார சுபீட்சத்தையும் அடகு வைத்து
அரசியல் சதுரங்க சூதாட்டத்தில் ஈடு பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த
உண்மையை பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.
தமிழ்த்தேசிய அரசியல் இன்று தேசிய பிராந்திய
சர்வதேசிய பூகோள அரசியல் இராஜ தந்திர இராணுவ நகர்வுகளுக்காக கையாளப்படுவது
போல் சிறுபான்மை முஸ்லிம்களையும் அத்தகைய நகர்வுகளுக்காக பலிக்கடாவாக்கின்ற
முஸ்தீபுகளும் கெடு பிடிகளுமே கூலிப் படைகளைக் கொண்டு அரங்கேற்றப்
படுகின்றன.
எந்தெந்த மேலாதிக்க சக்திகளின் தேவைக்காக
“இஸ்லாமோபோபியா” இஸ்லாம் குறித்த பீதியும் முஸ்லிம்கள் குறித்த அச்சமும்
கூலிப்படைகளால் இந்த நாட்டில் சந்தைப் படுத்தப் படுகின்றன ஏன் அதற்காக
பெரும்பான்மை இனத்தவரின் பௌத்த சமய சாயம் பூசப் படுகின்றது? அத்தகைய தீய
சக்திகளூடாக தத்தமது நலன்களை காத்துக் கொள்வதற்கும் எரிகின்ற தீயில்
குளிர்காய விரும்புகின்ற சக்திகள் யாவை என்பதனையும் நாங்கள் அறிவோம்.
இத்தகைய சதிகாரர்களிடமிருந்து இன்னுமொரு முறை
தேசத்தையும் சமூகத்தையும் மீட்டெடுக்கின்ற பணியை முஸ்லிம் சமூகம் தேசத்தின்
ஏனைய முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து தோளோடு தோள் நின்று செய்யும்,
சமாதான சக வாழ்விற்கான அனைத்து முன்னெடுப்புக்களையும் மும்முரமாக
மேற்கொள்ளும் முஸ்லிம் சமூகம் உச்சக் கட்ட பொறுமையை கடைப்பிடிப்பதும்
விட்டுக் கொடுப்புக்களை செய்வதும் அவர்களது இயலாமையாகவோ கோழைத்தனமாகவோ
இடைபோடப்ப்படுமாயின் அது மிகப் பெரும் வரலாற்றுத் தவறாகும்.
தேசத்தின் எந்த ஒரு பிரஜைக்கும் சமூகத்திற்கும்
இருக்கின்ற “தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை” முஸ்லிம்களுக்கும் எந்த
விதத்திலும் குறைவில்லாமல் இருக்கின்றது.
புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..!
ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் அவ்வப்பிரதேசங்களில்
உள்ள பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உலமாக்கள், புத்திஜீவிகள்,
வர்த்தகசமூகத்தினர், அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய
இயக்கங்களின் தரீக்காக்களின் பிரதிநிதிக,ள், பாடசாலை சமூகத்தினர் என சகல
தரப்புக்களையும் கொண்ட ஷூரா சபைகளை அவசரமும் அவசியமுமாக (அடுத்த
ஜும்மாவிற்கு முன்னர்) தோற்றுவித்துக் கொள்ளல் வேண்டும்.குறைந்த பட்ச்சம்
புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது
அவசியம்..!
ஒவ்வொரு ஊரினதும் பாதுக்காப்பு குறித்து தேசிய
அரசியல் சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகளை மாத்திரம் ஒரு பொழுதும்
நம்பியிருக்க முடியாது என்பதனை முஸ்லிம் சமூகத்திற்கு புதிதாக எதனையும்
புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை, நேரடி விஜயங்கள்,
பார்வையிடல்கள்,அறிக்கை வெளியிடல்கள் உயர்மட்ட கவன்யீர்ப்புக்கள், ஊடக
பிரபல்யங்களுக்கு அப்பாலும் முன்னரும் பின்னரும் உள்ளூர் தலைமைகள்
கவனத்திற் கொள்ள வேண்டிய விவகாரங்கள் ஏராளம் உள்ளன.
பிரச்சினைகள் ஏற்படும்பொழுது சட்டம் ஒழுங்கை
நிலை நிறுத்தும் காவல் துறையினரை, சட்ட மற்றும் நீதித் துறையினரை அணுகுதல்,
பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் முஸ்லிம் அல்லாத அரசியல் தலைமைகளை அணுகுதல்
போன்ற இன்னோரன்ன விவகாரங்களை நிதானமாக கலந்தாலோசித்து உகந்த நடவடிக்கைகளை
அவ்வப்போது மேற்கொள்தல் அவசியமானதாகும்.
குறிப்பாக சட்டம் ஒழுங்கு நீதித்துறை என்று
வரும்பொழுது சட்டத்தரணிகளின் சேவைகளை பெற்றுக்கொள்தல் அதேபோன்று இன்னோரன்ன
நடவடிக்கைகளுக்கான செலவினங்களை எதிர்கொள்வதற்கான நிதியம் ஒன்றும்
ஏற்படுத்திக் கொல்லப் படல் வேண்டும்.
தேசிய அளவில் இஸ்லாமிய அமைப்புக்கள்
தரீக்காக்கள் முஸ்லிம் புத்திஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் பல்கலைக் கழக
சமூகத்தினர துறைசார் நிபுணர்களைக் கொண்ட தேசிய ஷூரா சபை அமையப்
பெற்றிருந்தாலும் கிராம மட்ட,மாவட்ட மட்ட ஷூரா சபைகளை தோற்றுவித்து தேசிய
வலையமைப்பை உருவாக்கிக் கொள்வதும் சமூக விவகாரங்களை சகல் தரப்பினரும்
ஒன்றிணைந்து கையாள்வதற்கும் சகலரும் பார்வையாளர்களாக, விமர்சகர்களாக அன்றி
பங்காளிகளாக மாறுதல் வேண்டும்.
வேற்றுமைகளுக்கு மத்தியிலும் சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் விடயத்திலும் தேசிய ஒருமைப்பாட்டிலும் சமாதான
சகவாழ்விலும் எமது கூட்டுப் பொறுப்பை உணர்ந்து நாம் அனைவரும் கடமை உணர்வுடன் செயற்படல் வேண்டும்.
வெளிநாடுகளில் வசிப்போர்,புலம் பெயர்
சமூகத்தினர் சகலரும் தத்தமது பிரதேசங்களிலும் தேசிய அளவிலும் மேற்கொள்ளப்
படுகின்ற முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குதல்
வேண்டும். உள்நாட்டு சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகளை கலந்தாலோசித்த
பின்னரே அவர்கள் தமது செயற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பெரும்பானமையான
நல்ல சக்திகள்,முற்போக்கு அரசியல் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன்
இணைந்து தேசிய விவகாரமாகவே இந்த விவகாரங்களை நாம் சமயோசிதமாகவும்
சாணக்கியமாகவும் கையாள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம் என்பதனை எல்லா
மட்டங்களிலும் நாம் உணர்ந்து செயற்படல் அவசியமாகும்.
நன்றாக திட்டமிடப்பட்டு மேடை போட்டு பகிரங்கமாகவே அரங்கேற்றப்பட்ட காட்டுமிராண்டித் தனங்கள்..!
சனிக்கிழமை (21/06/2014) அதிகாலை தேசிய ஷூரா
சபை பிரதானிகள் செயலக உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க
பிரதானிகளுடன் அளுத்கமை பேருவலை தர்காநகர் மற்றும் பாதிக்கப்பட்ட
கிராமங்களுக்கு விஜயம் செய்த பொழுது பல்வேறு உண்மைகளை அவதானிக்க
முடிந்தது.
குறிப்பாக குறுகிய இராக்கால இடைவெளிக்குள்
எதிர்பாராவிதமாக ஏற்பட்ட ஒரு கலவரமாக அன்றி மிகவும் நன்றாக
முன்னேற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித் தனமான
தாக்குதல்களாகவே ஏற்பட்டுள்ள சேதங்கள், தடயங்கள் மற்றும் சட்டத்தரணிகள்
மூலமாக பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள், மட்டும் பொதுமக்களின்
வாக்கு மூலங்கள் உணர்த்துகின்றன
துரதிஷ்ட வசமாக இன்னும்பலர் போலிஸ்
நிலையங்களுக்கு சென்று முறையீடுகளை செய்ய முன்வரவில்லை, முறையீடுகளை சட்ட
ஆலோசனைகளுடன் தாம் எழுதிச் சென்று போலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பதிவு
செய்து பிரதிகளை அல்லது முறையீட்டு இலக்கத்தை வைத்துக்கொள்ள முடியும்.
கடந்த வெள்ளியன்று இது குறித்து ஊர் மக்கள் அறிவுறுத்தப் பட்டிருக்க
வேண்டும்.
எந்தவொரு தீய சக்தியையும் அஞ்சி வாழவோ அல்லது
கெஞ்சி வாழவோ வேண்டிய தேவை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு
கிடையாது…..முஸ்லிம்கள் இநத நாட்டில் சம உரிமையும் சம அந்தஸ்துமுள்ள
பிரஜைகள் , நாம் ஒரு அடிமைச் சமூகம் அல்ல… நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க
வேண்டும்..எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக இருக்க
வேண்டும்…இன்ஷா அல்லாஹ்..
தேசப்பறறுள்ள முற்போக்கு சக்திகள், மிகப்
பெரும்பான்மையான நல்ல சக்திகளுடன் இணைந்து தேசத்துரோகத்தில் ஈடுபட்டுள்ள
தீய சக்திகளுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்….
காட்டு மிராண்டித் தனங்கள், அடைவுகளோ ,
வெற்றிகளோ அல்ல அவை கோழைத்தனங்கள்…தேசத்தினதும் துரோகிகளினதும் மனச்
சாட்சியை உறுத்துகின்ற சாபக்கேடான தோல்விகள்…!
முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்திற்கு….!
தனிப்பட்ட அரசியல் வாதிகள் என்பதற்கு அப்பால்
இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்தாலும், அவரிடம்
குவிக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களாயினும், பிரதம் மந்திரியாக
இருந்தாலும் ஏனைய அமைச்சுக்கள், பாதுகாப்பு படைகள், காவல் துறையினர்,
சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் நிறுவனங்கள், எல்லாம் இந்த நாட்டின் சகல்
பிரஜைகளுக்கும், சமூகங்களுக்கும், இன மத மொழி அரசியல் வேறுபாடுகளுக்கு
அப்பால் உரித்துடைய அதிகார மையங்களாகும்.
கடந்த
காலங்களில் முஸ்லிம் சமூக அரசியல் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கின்ற
அரசியல் வாதிகளுடன் கொண்டிருந்த (தேனிலவு) உறவுகளை இந்த இக்கட்டான நிலையில்
முறுகலாக மாற்றியமைத்துக் கொண்டு அவற்றை ஊடகங்களில் பிரபல்யப் படுத்துவதன்
மூலம் ஒருவேளை அவை கவர்சிகரமாக ஆக்ரோஷமாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு
தற்போதைய நிலையில் முஸ்லிம்களுக்கு உரித்தான அரச யந்திரங்களின்
செயற்பாடுகளை முடக்குவதற்கும் கால்கோளாக அமைந்து விடலாம்.
பாதிக்கப் பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை
உறுதிப்படுத்தல், சேதங்களை ஆவணப் படுத்தல், அரசிடமிருந்து நஷ்ட ஈட்டை
பெற்றுக் கொடுப்பதற்கான மிகத் துல்லியமான கணிப்பீடுகளை மேற்கொள்ளல், கிராம
சேவகர் பிரிவுகளில் இருந்தும் பிரதேச சபை மற்றும் அரச அதிபர் பிரிவுகளில்
இருந்தும் பெறப்பட வேண்டிய சேவைகளை உரிய விதத்தில் பெற்றுக் கொடுத்தல்,
நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தல், பாதிக்கப்
பட்ட வீடுகளை வியாபார ஸ்தாபனங்களை புனர் நிர்மாணம் செய்ய உதவுதல்,
பள்ளிவாய்களை புனர்நிர்மாணம் செய்தல், தேவையான அனைத்து சட்ட
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள சேவைகளை
பெற்றுக் கொடுத்தல் போன்ற இன்னோரன்ன சேவைகளில் முஸ்லிம்களுக்கு உரிய
உரிமைகளை வென்று கொடுப்பதில் முஸ்லிம் அரசியல் வாதிகள் முனைப்புடன்
செயற்படல் வேண்டும்.
தேசிய
ஷூரா சபை, ஜம்மியதுல் உலமா, அவசர சேவைகள் அமைப்பு போன்ற சிவில்
சன்மார்க்கத் தலைமைகளிடம் அரசியல் அதிகாரம் இல்லை, என்றாலும் அவர்கள்
களத்தில் இருக்கின்றார்கள் முஸ்லிம் சமூகத்தின் மக்களாணை பெற்று அதிகார
பீடங்களில் அமர்த்தப்பட்டுள்ள நீங்கள் இன்னும் பொறுப்புடன் செயற்படின்
மேற்படி சிவில் சமூக நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
அதேபோல்
தற்போதைய இனவெறி நடவடிக்கைகளுக்கு தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகளையும்
அரசில் உள்ள நியாய தர்மங்கள் குறித்து சிந்திக்கின்ற சக்திகளையும் இன மத
மொழி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அரவணைத்துச் செல்வதில் முஸ்லிம்
அரசியல்வாதிகள் (பகைமைகளை வளர்த்துக் கொள்ளாது) கூடுதல் கவனம் செலுத்த
வேண்டும்.


0 Comments