நாட்டின் உத்தியோகப்பற்றற்ற பொலிஸாகவும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கெதிராக
தொடர் போராட்டங்களை நடத்தும் அமைப்பாகவும் விளங்குவதற்கு தாம்
தீர்மானித்துள்ளதாக சிஹல ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி அமைப்பின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவிக்கையில், அரசில் அங்கம் வகித்துவரும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்களிடையே தற்போது மலிந்து காணப்பட்டு வரும் ஊழல்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தாங்கள் கண்டி
தலதா மாளிகையில் இருந்து கொழும்பை நோக்கி பேரணி யொன்றை
நடத்தவுள்ளதாகவும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து
ஆராயும் பாராளுமன்ற குழு (கோப்) வின் அறிக்கையின் பிரகாரம்
60சதவீதமான அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருவதாகவும்
அத்தகைய நிறுவனங்களுக்குள் நிலவி வரும் ஊழல் அதிகரிப்பையே இது
எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் அதிகரித்து வரும் ஊழல் நடவடிக்கைகள் பற்றி வாய்
திறப்பதற்கு இன்று அமைப்புக்கள் எதுவுமேயில்லை என்பதனாலேயே சிஹல
ராவய குறித்த விடயங்களை தனது கையில் எடுத்துக்கொள்ள தயாராகவே
உள்ளதெனக் குறிப்பிட்டுள்ள தேரர் மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லுதல்
மதமாற்றம் செய்தல், தொல்பொருள் பிரதேசங்கள் அழிக்கப்படுதல்,
அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் காரியாலயத்தில்
தங்கியிருக்கும் வேளையில் மறைமுகமாகப் பணம் சம்பாதித்தல்
ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் முஸ்லிம் பெண்கள் பர்தா
அணிவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அறைகூவல்
விடுப்பதற்குமே மேற்படி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு
வருகின்றதெனவும் கூறினார்.
மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது
பதவிக்காலத்தில் சம்பாதிக்கப் போவதை விட கூடுதலான பணத்தை
தேர்தல்களின் போது செலவிட்டு வருவதனால் அவர்கள் பதவிக்கு
நியமிக்கப்படுவதற்கு முன்னரே அவர்களின் சொத்து விவரங்களைக்
கணிப்பிடும் வழிவகையொன்றை அறிமுகப்படுத்துதல் அவசியமாகும்
எனவும் வலியுறுத்திய அவர், அரசியலுக்குள் நுழைய தாங்கள்
விரும்பவில்லையெனவும் சிங்கள மக்கள் சார்பில்
அரசியல்வாதிகளெவரும் வாய்திறக்காமல் இருப்பதனால் இத்தகைய
இழிவான விடயங்கள் குறித்து பேசுவதற்கான பலம்வாய்ந்த அமைப்பொன்றைக்
கட்டியெழுப்ப தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மாடுகளை இறைச்சிக்காக
கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பத்து இலட்சம் மக்களால்
கையெழுத்திடப்பட்ட மனுவொன்றைத் தாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம்
கையளித்திருந்த போதிலும் சாதகமான பதிலெதுவும் தங்களுக்கு இதுவரை
கிடைக்கவேயில்லையெனவும் அவர் மேலும் விபரித்தார்.


0 Comments