Subscribe Us

header ads

இலங்கை - பாகிஸ்தான் முதலாவது இருபது20 போட்டி இன்று

தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணிக்கும் மொஹமத் ஹாஃபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டுபோட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நடுநிலையான டுபாய் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரில்  முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இடம்பெறாதது இலங்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தனது மனைவி பிரசவிக்க இருப்பதால் தன்னால் டுபாய்க்கான கிரிக்கெட் விஜயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாக மஹேல முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக இலங்கை அணியில் திலக்கரட்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, குமார் சங்கக்கார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, லஹிரு திரிமான்ன, திசர பெரேரா, நுவன் குலசேகர, சச்சித்ர சேனாநாயக்க, லசித் மாலிங்க ஆகியோர் இடம்பெறுவார் என நம்பப்படுகின்றது.

இறுதி அணியில் திமுத் கருணாரட்ன இடம்பெறாத பட்சத்தில் சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அஜந்த மெண்டிஸ் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் அணியில் பெரும்பாலும் மொஹமத் ஹஃபீஸ், அஹமத் ஷேசாத், சயீத் அஜ்மால், ஷஹீத் அஃப்ரிடி, உமர் அக்மால், சொஹெய்ல் தன்வீர், ஜுனைத் கான், பிலாவால் பாத்தி, அன்வர் அலி, சொஹெய்ப் மக்சூத், உமர் அமின் ஆகியோர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 10 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஆறில் பாகிஸ்தானும் நான்கில் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாகத் தென்படுகின்றபோதிலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானை வீழ்த்துவது கடினமென்பதால் இலங்கை அணிக்கு பலத்த சவால் காத்திருக்கும் என்று கூறலாம்.

Post a Comment

0 Comments